அண்டை நாடுகளான ஆர்மீனியாவும், அஜர்பைஜானும் பல தசாப்தங்களாக, ஆயுதமேந்திப் போராடும் நிலமாக அதிக காடுகள் நிறைந்த மலை பகுதியான நாகோர்னோ-கராபாக் பிராந்தியம் இருந்து வருகிறது.
சர்வதேச சட்டத்தின் கீழ், நாகோர்னோ-கராபாக் அஜர்பைஜானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆர்மீனிய இனத்தவர்களை பெரும்பான்மையாக கொண்ட இந்த மக்கள் அஜர்பைஜான் ஆட்சியை நிராகரிக்கின்றனர். 1990 களில் அஜர்பைஜானின் படைகள் ஒரு போரில் வெளியேற்றப்பட்டதிலிருந்து இம்மக்கள் ஆர்மீனியாவின் ஆதரவோடு தங்கள் சொந்த விவகாரங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை, நாகோர்னோ-கராபாக்கில் ஏற்பட்ட கடுமையான மோதல்கள், மீண்டும் இரு நாடுகளையும் முழுமையான போருக்குள் இட்டுச் செல்லும் என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது.
1918 ஆம் ஆண்டு ஆர்மீனியாவும், அஜர்பைஜானும் ரஷ்ய சாம்ராஜ்யத்திலிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து இப்பகுதியின் சர்ச்சை ஆரம்பித்தது.
1920 களின் முற்பகுதியில், தெற்கு காகசஸில் சோவியத் ஆட்சி திணிக்கப்பட்டது. இது ஆர்மீனிய மக்களை பெரும்பான்மையாக கொண்ட நாகோர்னோ-கராபாக் பிராந்தியம் அப்போதைய சோவியத் குடியரசான அஜர்பைஜானுக்குள் ஒரு தன்னாட்சி பிராந்தியமாக மாற்றப்பட்டது. இதன் பெரும்பாலான முடிவுகள் மாஸ்கோவில் இருந்தே எடுக்கப்பட்டன. சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் போது இப்பகுதி அஜர்பைஜான் தலைநகர் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் ஆர்மீனிய இனத்தினர் இதை ஏற்கவில்லை.
1988 ஆம் ஆண்டில், நாகோர்னோ-கராபாக் சட்டமன்றம் ஆர்மீனிய குடியரசில் சேர வாக்களித்தது. இந்த கோரிக்கையை அஜர்பைஜான் சோவியத் அரசாங்கம் மற்றும் மாஸ்கோ இரண்டுமே கடுமையாக எதிர்த்தன.
1991 இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், யெரெவன் ஆதரவுடைய ஆர்மீனிய பிரிவினைவாதிகள் ஒரு குறிப்பிடத்தக்க அஜர்பைஜான் சிறுபான்மையினாராக வாழும் இப் பகுதியையும், அருகிலுள்ள ஏழு அஜர்பைஜான் மாவட்டங்களையும் கைப்பற்றினர்.
1994 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் தரகு வேலைகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், நாகோர்னோ-கராபாக் மற்றும் அஜர்பைஜான்-ஆர்மீனியா எல்லையில் அடிக்கடி மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன.
உலக சந்தைகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுத்துச் செல்லும் குழாய்களுக்கான ஒரு தாழ்வாரமாக செயல்படும் இப்பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நீண்டகால மோதல், சர்வதேச சமூகத்தின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.
துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், ஆர்மீனியா ஆக்கிரமித்துள்ள அஜெரி நிலங்களிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என்றும், ஆர்மீனிய இனத்தவர்களால் நடத்தப்படும் அஜர்பைஜானுக்குள் பிரிந்து செல்லும் பகுதியான நாகோர்னோ-கராபாக் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் இது என்றும் கூறினார்.
நாகோர்னோ-கராபாக் பிரதேசத்தில் மேலும் பதட்டங்களைத் தூண்டக்கூடிய அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு கிரெம்ளின், அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவை வலியுறுத்தியதுடன்இ இந்த சண்டை மாஸ்கோவை மிகவும் கவலையடையச் செய்துள்ளது என்றும் கூறியது.
ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சயீத் காதிப்சாதேஇ ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவது மற்றும் இராணுவ மோதலைத் தவிர்ப்பது போன்ற ஈரானின் கொள்கையில் மாறமில்லை என்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டன் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதலை நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளில் ஈடுபடும் என்றார்.
நாகோர்னோ-கராபாக் பிரதேச படைகள், அஜெரி படைகளுடனான மோதலில் அதன் 28 துருப்பினர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியது. இதன் மொத்த இறப்பு எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. ஆர்மீனிய மற்றும் அஜெரி படைகள் திங்களன்று நாகோர்னோ-கராபாக் பிரதேசத்தில் இரண்டாவது நாளாக கடுமையான பீரங்கி தாக்குதல்களைக் கொண்டு மோதிக் கொண்டன.