பாலஸ்தீனிய பிரச்சினை தீர்க்கப்படாமல் இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவது கேள்விக்குறியானது என்று மன்னர் சல்மான் கூறியுள்ள நிலையில், அவரது மகன் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் (எம்.பி.எஸ்) யூதர்கள் மீதான சவுதியின் பொதுக் கருத்தை மாற்ற முயல்கிறார்.
டெல் அவிவ் உடனான உறவின் நிலை குறித்த கேள்விக்கு சவூதி அரேபியா அதன் இறுதி முடிவை இன்னும் வெளிப்படுத்தாத நிலையில் இஸ்ரேலுடனான இயல்பாக்குதல் நிலைப்பாட்டை மன்னர் சல்மான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
சவூதியின் இரண்டு முக்கிய பிராந்திய நட்பு நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவை இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேலுடனான தங்கள் உறவுகளை பகிரங்கப்படுத்தியுள்ள நிலையில், வளைகுடாவின் ஜாம்பவானான சவூதி அரேபியா தமது மக்கள் மத்தியில் யூத மக்கள் மீதான பொதுக் கருத்தை முதலில் மாற்ற முடிவு செய்துள்ளது. பிராந்திய நிபுணர்களின் பார்வையில் இது ஒரு “மென்மையான இயல்பாக்கம்“ என்று கருதப்படுகிறது.
மத்திய கிழக்கின் நிபுணரும் விருது பெற்ற கல்வியாளருமான தல்ஹா அப்துல்ரசாக் கருத்து தெரிவிக்கையில், மன்னர் பைசல் மற்றும் 1973 ஆம் ஆண்டின் எண்ணெய் தடை போன்ற ஒரு சில விதிவிலக்குகளுடன், “சவூதி அரேபியா எப்போதும் இஸ்ரேலுடனான மோதலைத் தவிர்த்துள்ளது.” “மற்ற அரேபிய நாடுகள் குறிப்பிட்ட இந்த சுமையை சுமப்பதுவே சவுதீயின் நீண்ட கால கொள்கையாகும்; இதுவே யூத அரசுடன் எல்லைகள் இருப்பதைத் தவிர்ப்பதற்காக செங்கடலில் உள்ள டிரான் மற்றும் சனாஃபிர் தீவுகளை சவூதி அரேபியா எகிப்துக்கு ஒப்படைக்க தூண்டியது” என்று கூறினார்.
“ரியாத் எப்போதுமே இஸ்ரேலுடனான மோதல் அல்லாத அல்லது மென்மையான இயல்பாக்கலுக்கே ஆதரவளித்துள்ளது. ஆனால் பாரம்பரிய அரபு சக்திகளாக திகழ்ந்த ஈராக், சிரியா மற்றும் எகிப்தின் வீழ்ச்சியில் சவுதியின் அந்தஸ்து வளர்ந்து வருவதால், சவுதி அரேபியா பாலஸ்தீனியரின் அவலநிலைக்காக குரல் கொடுக்க வேண்டியிருந்தது அதனால்தான் அரபு அமைதி முன்முயற்சியை முன்மொழிந்தது” என்று அப்துல்ரசாக் குறிப்பிடுகிறார்.
எம்.பி.எஸ் இன் நோக்கம் இஸ்ரேல், சவுதி அரேபியாவின் நட்பு நாடுகளில் ஒன்று என்ற எண்ணக்கருவை தமது மக்கள் மத்தியில் உருவாக்குவதாகும். அதற்காக தற்போது சியோனிச அரசு மீது மக்கள் கொண்டுள்ள கருத்தை மென்மையாக்குவது முதல் படியாகும். அதன் அடிப்படையில் யூத மக்களை மோசமான தோற்றத்தில் காட்டும் பள்ளி புத்தகங்களைத் திருத்த அவர் தயாராகி வருகிறார்.
“உலகெங்கிலும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரையில் யூத எதிர்ப்பு சொல்லாட்சி என்பது பொதுவானது.” தற்போது “பள்ளிவாசலில் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை அவமதிப்பதை தடை செய்ய சவுதி அரசாங்கம் முடிவு செய்துள்ளது“ என்று சவுதி ஆய்வாளர் நஜா அல்–ஒடாய்பி கூறுகிறார்.
இராச்சியத்திலுள்ள அதிகாரிகள், மத பிரமுகர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினர், நபிகள் நாயகத்தின் வரலாற்றை மேற்கோள் காட்டி இதமான செய்திகளை அனுப்பத் தொடங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் மாறிவரும் அரசியல் யதார்த்தத்தின் வெளிப்பாட்டில் சமீபத்தில் ஒர் அறிஞர் யூத மக்களுடனான நபி (ஸல்) அவர்களின் நட்புறவுகளைப் பற்றி பேசினார். இவ் ஒப்பீடு சமூக ஊடகங்களில் பொது விமர்சனங்களுக்கு வழி வகுத்தது.
முஸ்லீம் உலக லீக்கின் தலைவரான சவுதி மத அறிஞர் முகமது அல்-இசா போலந்து ஆஷ்விட்ஸ் இல் நடைபெற்ற நாசி மரண முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவை குறிக்கும் நிகழ்வுகளுக்காக சென்றிருந்தார். இவரது வருகையை இஸ்ரேல் பாராட்டியது.
ஒரு ஹோலோகூஸ்ட் (holocaust) ஐ கருப்பொருள் கொண்ட திரைப்படத்தை காண்பிக்க சவுதி திட்டமிட்டிருந்தது; ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அதை ரத்து செய்தது.
சமீபத்திய வரலாற்றில் முதன் முறையாக கடந்த பிப்ரவரியில், சவுதி மன்னர் சல்மான் ஜெருசலேமை தளமாகக் கொண்ட யூத மதகுரு டேவிட் ரோசனுக்கு விருந்துபசரித்தார்.
சவூதி அரேபியா தனது நட்பு நாடுகளை இஸ்ரேலுடன் தமது உறவுகளை இயல்பாக்க அனுமதிப்பதன் மூலம் சவுதி தமது மென்மையான–இயல்பாக்குதல் கொள்கையை தொடர்கிறது என்றும், இஸ்ரேலுடன் தொடர்புகளை மேற்கொள்ள வேண்டிய போதெல்லாம் பின் வழியினூடாக உரையாடல்களை மேற்கொள்கிறார்கள் என்று அப்துல் ரசாக் கூறுகிறார்.
மேலும் கூறுகையில் “சவுதி அரேபியா உலகிற்கு இஸ்ரேலிய விமானங்களை அதனது வான்வெளியில் பறக்க அனுமதிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் நட்பு நாடுகள் செய்யும் காரியங்களை அங்கிகரிக்கிறார்கள் என்பதையும், பாலஸ்தீனியர்களுக்காக அவர்கள் வெறும் உதட்டளவிலான சேவையை மாத்திரமே செய்ய முடியும் என்பதையும் தெரியப்படுத்துகிறார்கள்” என்று கூறுகிறார்.
இஸ்ரேலுக்கு ஏராளமான சக்தியும் அதிகாரமும் அமெரிக்காவிடமிருந்து கிடைக்கிறது அதேசமயம் பாலஸ்தீனியர்களுக்கு அவர்களின் முக்கிய தேசிய நலன்களின் அடிப்படையில் சவுதியால் வழங்க எதுவும் இல்லை என்று அப்துல்ரசாக் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.
“இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய அனைவரும் ஈரானை தனிமைப்படுத்துவதில் அக்கறை காட்டுகின்றனர். எனவே ரியாத் கருத்து ரீதியானதாகவோ¸ கொள்கை ரீதியானதாகவோ அல்லாமல் ஒரு நடைமுறைக்கொத்த கொள்கையை கடைப்பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.”
அதேவேளையில் வாஷிங்டன் இன்ஸ்டிடியூட் ஃபார் நியர் ஈஸ்ட் பாலிசி(Washington Institute for Near East Policy) கடந்த மாதம் வெளியிட்ட ஒரு அரிய சவுதி பொது கருத்துக் கணிப்பு, சவுதி குடிமக்களில் பலர் இஸ்ரேலுடனான இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக இல்லை என்று கூறுகிறது.