இலங்கை மற்றும் இந்தியாவின் பிரதமர்கள் 2020 செப்டம்பர் 26, எதிர்வரும் சனிக்கிழமையன்று இருதரப்பு மெய்நிகர் (Virtually) உச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.
2020 ஆகஸ்ட் 06 அன்று புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசி உரையாடலை நடத்திய பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியின் பேரில், இரு தலைவர்களும் திட்டமிடப்பட்ட உச்சிமாநாட்டின் மூலம் பன்முக இருதரப்பு உறவை மறுபரிசீலனை செய்ய ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.
கடந்த மாதம் பிரதமராக பதவியேற்ற பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒரு வெளிநாட்டுத் தலைவருடன் நடத்த இருக்கும் முதலாவது உச்சி மாநாடு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் புது தில்லியில் சந்தித்த பின்னர் தலைவர்கள் இடையேயான முதல் அதிகாரப்பூர்வ மெய்நிகர்(Virtual) உச்சிமாநாடு இதுவாகும். அதன் பின்னர் அவர்கள் தொலைபேசியில் குறைந்தது இரண்டு முறை பேசியிருக்கிறார்கள். இலங்கையின் பலவீனமான பொருளாதாரத்தை நிர்வகிக்க புதுடில்லியில் இருந்து மூன்று வருட கடன் (வசூலிப்பு) ரத்து செய்து உதவுமாறு பிப்ரவரி கூட்டத்தில் பிரதமர் ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது.
அதேபோல் மே மாதம் ஒரு தொலைபேசி அழைப்பின் போது இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மோடியிடம் ஒரு “சிறப்பு” $ 1.1 பில்லியன் நாணய இடமாற்று வசதியை செய்து தருமாறும் கோரியிருந்தார்.
ஜூலை மாதம், இந்திய ரிசர்வ் வங்கி இலங்கையின் மத்திய வங்கியுடன் 400 மில்லியன் டாலர் இடமாற்று வசதியில் கையெழுத்திட்டது.
பெரிய சவால்
இலங்கையின் ஆகஸ்ட் பொதுத் தேர்தல்களைத் தொடர்ந்து, ராஜபக்ஷக்களின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தைப் பெற்று பலம் பெற்றிருந்தாலும் கூட, அவர்கள் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள நாட்டை சுமந்திருக்கின்றார்கள். கொவிட் தொற்றால் ஏற்பட்டுள்ள புதிய நிலைமைகள் அதனை மேலும் சிக்கலுக்குள்ளாக்கி வருகின்றன. அடுத்த மாதம் முதிர்ச்சியடையும் 1 பில்லியன் டாலர் இறையாண்மை பத்திரம் உட்பட, இந்த ஆண்டு கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர் நிலுவையில் உள்ள கடன்களை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
சனிக்கிழமை இடம்பெறவுள்ள ‘மெய்நிகர் உச்சிமாநாட்டின்’ உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரல் அறியப்படவில்லை என்றாலும், அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கொவிட்-19 க்கு முகம்கொடுத்தல் என்பன உள்ளிட்ட விடயங்களை அவர்கள் பேசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, கொழும்பு துறைமுகத்தின் சர்ச்சைக்குரிய கிழக்கு கொள்கலன் முனையத் திட்டம் குறித்து தலைவர்கள் கலந்துரையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இந்தியா ஜப்பானுடன் இணைந்து கூட்டாக அபிவிருத்தி செய்ய கொழும்புடன் ஒப்புக் கொண்டது. இதற்காக முன்னாள் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. எவ்வாறாயினும், தொழிலாளர் சங்கங்களும், தேசியவாத குழுக்களும் தங்கள் “தேசிய சொத்துக்களில்” “வெளிநாட்டு ஈடுபாட்டை“ எதிர்த்ததை அடுத்து, ராஜபக்ஷ நிர்வாகம் இந்த திட்டத்துக்கு இன்னும் முழுமையாக பச்சைக்கொடி காட்டவில்லை. இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்கள், கொழும்பில் சீனாவின் ஆதரவுடைய ‘போர்ட் சிட்டி’ அருகே அமைந்துள்ள முனையத்தில் 70% க்கும் மேற்பட்ட பரிமாற்ற வணிகம் இந்தியாவிலிருந்து வருபவை என்பதை உணர்ந்தாலும், “அதானி குழுமம்” இற்கு இந்த ஒப்பந்தத்தில் ஆர்வம் இருப்பது தொடர்பாக அவர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.
13 வது திருத்தம்
நடைபெற இருக்கின்ற உச்சி மாநாட்டை தமிழர் தரப்பு உன்னிப்பாக கவனிப்பார்கள் என நம்பப்படுகிறது. ஏனெனில் இந்தியாவின் ஏற்பாட்டின் பேரில் 1987 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தின் ஊடாக, மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை இல்லாது செய்ய வேண்டும், மாகாண சபைகளை முற்றாகவே நீக்கிவிட வேண்டும் என்ற பேச்சுக்கள் மகிந்த நிர்வாகத்துக்குள்ளிருக்கும் முக்கிய அமைச்சர்களினால் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இவ்வாதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தியா அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவுகள் குறித்த பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் புதுடில்லி தனது பிராந்தியத்திலுள்ள நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்த முயன்று வருகின்றது. பிரதமர் மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் இலங்கை தலைமையுடன், குறிப்பாக நவம்பர் ஜனாதிபதி மற்றும் ஆகஸ்ட் பொதுத் தேர்தல்களில் ராஜபக்ச சகோதரர்கள் பெற்ற பெரிய வெற்றியின் பின்னர் தமது உறவுகளை விரைவாக பலப்படுத்த முயன்றதை நாம் அவதானிக்கலாம்.
மாதம் மஹிந்த ராஜபக்ஷவின் பாரிய வெற்றியைத் தொடர்ந்து, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த முதலாவது தலைவர் மோடி ஆகும். பாராளுமன்ற தேர்தலின் இறுதி வாக்கெடுப்பு எண்ணிக்கை அறியப்படுவதற்கு முன்னமேயே, அவருக்கு வாழ்த்துககள் தெரிவிக்கப்பட்டன. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் இரு வாரங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியின் பிறந்தநாளில் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.