பாலஸ்தீனம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அரபு லீக் கூட்டங்களுக்கு தலைமை தாங்குவதாக இருந்தது. ஆனால் தற்போது வெளியுறவு மந்திரி ரியாத் அல்-மாலிகி இந்த பாத்திரத்தை மறுத்துவிட்டார்.
பாலஸ்தீனம் அரபு லீக் கூட்டங்களின் தற்போதைய தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளது. செவ்வாயன்று, பாலஸ்தீன வெளியுறவு மந்திரி இஸ்ரேலுடன் முறையான உறவுகளை ஏற்படுத்துவதற்கான எந்தவொரு அரபு ஒப்பந்தத்தையும் “அவமதிப்புக்குரியது” என்று கண்டித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவை ஒரு வாரத்திற்கு முன்பு வாஷிங்டனில் இஸ்ரேலுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை பாலஸ்தீனியர்கள் தமது அபிலாசைக்கு இழைக்கப்பட்ட துரோகமாகவும், இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில் ஒரு சுதந்திர அரசை நிறுவுவதற்கான தமது எதிர்பார்ப்பின் மீது விழுந்த பலத்த அடியாகவும் பார்க்கிறார்கள்.
இந்த மாத தொடக்கத்தில், இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்கி சில அரபு நாடுகள் அணிகளை உடைப்பதை கண்டிக்கும் வண்ணம் அரபு லீக்கை செயற்பட வைக்கும் முயற்சியில் பாலஸ்தீனியர்கள் தோல்வியுற்றனர்.
அடுத்த ஆறு மாதங்களுக்கு பாலஸ்தீனம் அரபு லீக் கூட்டங்களுக்கு தலைமை தாங்கவிருந்தது. ஆனால் வெளியுறவு மந்திரி ரியாத் அல்-மாலிகி ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ரமல்லாவில் ஒரு செய்தி மாநாட்டில் அது இனி சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.
“பாலஸ்தீனம் அதன் தற்போதைய அமர்வில் (வெளியுறவு மந்திரிகளின்) லீக் கவுன்சிலுக்கு தலைமை தாங்குவதற்கான உரிமையை ஒப்புக் கொண்டிருந்தது. ஆனால் அதன் தலைமைக் காலத்தில் அரேபியர்கள் (இஸ்ரேலுடன்) இயல்பாக்குதலை நோக்கி விரைவதை காண்பது மரியாதைக்குரியதாகத் தெரியவில்லை.” என்று மாலிகி கூறினார்.
அரபு லீக் பொதுச்செயலாளர் அகமது அபூல் கெய்துக்கு பாலஸ்தீனிய முடிவு குறித்து அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பாலஸ்தீனிய தலைமை, 1967 போருக்கு முன்னர் இருந்த எல்லைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசை விரும்புகிறது. இந்தப்போரில் இஸ்ரேல் மேற்குக் கரையையும், காஸா பகுதியையும் ஆக்கிரமித்து, கிழக்கு ஜெருசலேமையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
இஸ்ரேலுடன் இயல்பான உறவை ஏற்படுத்துவதற்கு நிபந்தனைகளாக, ஏற்கனவே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்திலிருந்து இஸ்ரேல் விலக வேண்டும், பாலஸ்தீனிய அகதிகளுக்கான நியாயமான தீர்வை வழங்க வேண்டும், மேலும் ஒரு சாத்தியமான, சுதந்திரமான, பாலஸ்தீனிய அரசை ஸ்தாபிக்க வழிவகுக்கும் ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும் என்று அரபு நாடுகள் நீண்ட காலமாக அழைப்பு விடுத்து வந்தன.
பாலஸ்தீன உள் முரண்பாடுகளை கவனம் செலுத்துவற்கான ஒரு புதிய நடவடிக்கையில், மேற்குக் கரையை தளமாகக் கொண்ட ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் ஃபத்தா பிரிவும், காஸாவை தளமாகக் கொண்ட ஹமாஸ் இயக்க அதிகாரிகளும், செவ்வாயன்று துருக்கியில் நல்லிணக்க பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றனர்.
ஹமாஸ், 2007 ஆம் ஆண்டில் ஒரு குறுகிய கால சண்டையின் போது, ஃபத்தா படைகளிடமிருந்து காஸா பகுதியை கைப்பற்றியது. அன்றிலிருந்து அதிகாரப் பகிர்வு தொடர்பான வேறுபாடுகளால் இரு தரப்புக்கும் இடையிலான ஒற்றுமை ஒப்பந்தங்களை செயல்படுத்துவதில் தாமம் ஏற்ப்பட்டுள்ளன.