அமெரிக்கா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அனைத்து நிரந்தர உறுப்பினர்களையும் பகைத்துக் கொண்டு ஒருதலைப்பட்சமாக ஈரானுக்கு எதிரான அனைத்து ஐ.நாவின் பொருளாதாரத் தடைகளையும் மீண்டும் சுமத்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சட்டபூர்வமான அடிப்படையில் இல்லை என்று ஈரானும் வாஷிங்டனின் நெருங்கிய நேச நாடுகள் உட்பட சர்வதேச சமூகமும் நிராகரித்துள்ளன.
அமெரிக்கா நிர்ணயித்த காலக்கெடு காலாவதியானதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒர் அறிக்கையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, ஈரான் மீதான பொருளாதார தடை நடவடிக்கைகளுக்கு இணங்கவில்லையாயின் எந்தவொரு ஐ.நா உறுப்பு நாடுகளும் “பின் விளைவுகளை” சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தினார். இது உலகில் சக்திவாய்ந்த ஆறு வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையில் 2015 இல் கையெழுத்திடப்பட்ட, ஒரு முக்கிய அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் நீக்கப்பட்ட பொருளாதார தடைகளாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா அதிலிருந்து விலகிக் கொண்டது கவனிக்கத்தக்கது.
மேலும் ஈரான் மீதான ஆயுதத் தடை அடுத்த மாதம் காலாவதியாகவுள்ள நிலையில் ஈரான் அணுசக்தி செறிவூட்டல் மற்றும் மறு செயலாக்கம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான தடை; பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை மற்றும் மேம்பாட்டுக்கான தடை; அணு மற்றும் ஏவுகணை தொடர்பான தொழில்நுட்பங்களை மாற்றுவதற்கான தடைகள் போன்ற கட்டுப்பாடுகளுக்கு உறுப்பு நாடுகள் இணங்க வேண்டும் என்றும் பாம்பியோ கூறினார்.
“ஐ.நாவின் உறுப்பு நாடுகள் இந்த பொருளாதாரத் தடைகளைச் செயல்படுத்துவதற்கான கடமைகளை நிறைவேற்றத் தவறினால், அதற்கான விளைவுகளைத் திணிப்பதற்கும் ஐ.நா வால் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளின் பலன்களை ஈரான் அறுவடை செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், தமது உள்நாட்டு அதிகாரங்களை பயன்படுத்த அமெரிக்கா தயாராக உள்ளது” என்றும் பாம்பியோ அச்சுருத்தினார்.
2015இல் பாதுகாப்பு சபையினால் உத்தியோகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டு செயலுக்கான விரிவான திட்டம் Joint Comprehensive Plan for Action (JCPOA) ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க ஈரானிய அத்து மீறல்களை மேற்கோள் காட்டி, அமெரிக்கா ஈரானுக்கு எதிரான அனைத்து ஐ.நாவின் பொருளாதாரத் தடைகளையும் மீண்டும் அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தும் நோக்கில் செயல்பட ஆரம்பித்த ஒரு மாத காலத்தில் மைக் பாம்பியோவின் இந்த அறிக்கை வந்துள்ளது.
மே 2018 இல் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகி, ஈரான் மீதான முடக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்திருந்தபோதிலும், தான் இன்னும் பொறிமுறை ரீதியாக இந்த ஒப்பந்தத்தில் ஒரு “பங்கேற்பாளர்” என்று வாஷிங்டன் வாதிடுகிறது. இது JCPOA கையெழுத்திடுவதற்கு முன்னர் அமெரிக்க பேச்சுவார்த்தைக் குழுவால் வகுக்கப்பட்ட ஒரு பொறிமுறையாகும் – ஈரான் தனது கடமைகளை மீறினால், அனைத்து சர்வதேச பொருளாதாரத் தடைகளும் மீண்டும் விதிக்கப்படும் என்பதுவே அதுவாகும் என்று அமெரிக்கா கூறி வருகிறது.
எவ்வாறாயினும் ட்ரம்ப், JCPOA இல் “அமெரிக்கா பங்கேற்பை நிறுத்துகிறது” என்று ஜனாதிபதி குறிப்பாணை ஒன்றில் தலைப்பிட்டு, இந்த ஒப்பந்தத்தை “மிக மோசமான ஒப்பந்தம்” என்று முத்திரையிட்டு, இதிலிருந்து விலகுவதாக அறிவித்ததிலிருந்து, இனி இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவிற்கு எந்தவொரு மாற்றங்களையும் கட்டாயப்படுத்த சட்டரீதியான திறன் இல்லை என்று மற்ற நான்கு நிரந்தர பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் உட்பட சர்வதேச சமூகம் வலியுறுத்திக் கூறுகின்றன.
இந்த ஒப்பந்தத்தில் ஐரோப்பா சார்பாக கையொப்பமிட்ட – பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி, பாதுகாப்பு சபைக்கு எழுதிய கடிதத்தில் – ஈரானுக்கான ஐ.நா பொருளாதாரத் தடைகளில் வழங்கப்பட்ட தளர்வு தொடரும் என்பதை வலியுறுத்தியதுடன், மேலும் அவற்றை மறுபரிசீலனை செய்வதற்கான எந்தவொரு முடிவும் அல்லது நடவடிக்கையும் “சட்டரீதியானது அல்ல” என்றும் அதிலே குறிப்பிட்டுள்ளன.
ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், அமெரிக்க அறிவிப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன், ஏனெனில் இது குறித்த “எந்தவொரு செயல்முறையும் தொடங்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பது நிச்சயமற்றதாகத் தோன்றுகிறது.” என்று சபைக்கு தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை, ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சயீத் காதிப்சாதே செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்கா “வரலாற்றின் தவறான பக்கத்தில்” நிற்க தேர்ந்தெடுத்துள்ளதால், அதனுடைய “மிகவும் கசப்பான” நேரங்களை அனுபவித்து வருகிறது.
மேலும் “வாஷிங்டனுக்கான தெஹ்ரானின் செய்தி தெளிவாக உள்ளது; சர்வதேச சமூகத்தை நோக்கித் திரும்புங்கள்; உங்கள் கடமைகளுக்குத் திரும்புங்கள்; இந்த முரட்டுத்தனத்தையும் கட்டுக்கடங்காத நடத்தையையும் நிறுத்துங்கள்; சர்வதேச சமூகம் உங்களை ஏற்றுக் கொள்ளும்” என்று காதிப்சாதே கூறினார்.