وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ ۙ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَـٰذَا أَوْ بَدِّلْهُ ۚ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِن تِلْقَاءِ نَفْسِي ۖ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰ إِلَيَّ ۖ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
“அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், “இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்” என்று கூறுகிறார்கள். அதற்கு “என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.” (ஸூரத்து யூனுஸ் 10:15)
இந்த திருமறை வசனம் குரைஷித் தலைவர்கள் ஐவரை விழித்து பேசுவதாக அல்-குர்ஆன் விரிவுரையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அப்துல்லாஹ் பின் உமையா அல் மக்க்ஷுமி, அல் வலீத் பின் அல் முகீரா, முக்ரம் பனி ஹப்ஷ், அம்ர் பின் அப்துல்லாஹ் பின் அபி கைஷ் அல் அமாரி மற்றும் ஆமிர் பின் ஹிஷாம் ஆகியோரே அவர்களாவார். இவர்கள் ஐவரும் முஹம்மத்(ஸல்) அவர்களிடம் வந்து,
“முஹம்மதே!…”
“நாங்கள் உம்மை விசுவாசிக்க வேண்டுமென்றால் அல் லாத், அல் உஷ்ஷா, அல் மனாத் (இவை குரைஷிகளின் பிரதான சிலைகளாகும்) ஆகியவற்றை கைவிடும்படி சொல்லாத, அவற்றின் குறைபாடுகளை சுட்டிக்காட்டாத ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும். அல்லாஹ் அவ்வாறான ஒன்றை உமக்கு அருளவில்லையானால், நீர் உம்மிடத்திலிருந்து அவ்வாறான ஒன்றைக்கூறும் அல்லது உம்மிடமிருப்பதை மாற்றிவிடும். அதாவது தண்டனை பற்றி வசனத்தை அருளைக் கொண்டும், ஹராம் இருக்கும் இடத்தில் ஹலாலைக் கொண்டும், ஹலால் இருக்கும் இடத்தில் ஹராத்தைக் கொண்டும் மாற்றீடு செய்து விடும்.” என்று கோரிக்கை விடுத்தனர்.
இவர்களின் இந்த வீம்பான கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கும் முகமாகவே இந்த அல்குர்ஆன் வசனம் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. இஸ்லாத்தின் எதிரிகளின் அர்த்தமற்ற நிபந்தனைகளுக்கும், கேள்விகளுக்கும் நிலைகுலையாமல் நேரடியாக எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பதை அல்லாஹ்(சுபு)வே நேரடியாக காட்டிக் கொடுத்தான்.
இஸ்லாத்தை புனரமைப்பு (இஸ்லாஹ்) செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நவீனமானது; அது ஓரிரு நூற்றாண்டுகளாகவே பரப்புரை செய்யப்பட்டு வருகின்றது என எம்மில் பலர் கருதினாலும், அக்கோரிக்கை இன்று நேற்று முன்வைக்கப்பட்டதல்ல. இஸ்லாத்தின் புனரமைப்பு குறித்த அல்லது அதற்கான மறுவிளக்கம் அல்லது மாற்றம் குறித்த கோரிக்கை இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் இருந்தே முன்வைக்கப்பட்டு வந்தன என்பதே உண்மையாகும். இஸ்லாத்தின் தூதான அல்குர்ஆனுக்கு பகரமாக வேறொன்றை கொண்டு வருமாறு அதன் தூதர் (ஸல்) அவர்களிடமே நேரடியாக கோரிக்கை விடுக்கப்பட்டு இன்றைக்கு பதினான்கு நூற்றாண்டுகள் கடந்து விட்டன.
ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَـٰذَا அல்லது أَوْ بَدِّلْهُ
“இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்” அல்லது “இதை மாற்றிவிடும்”
மேற்படி வசனத்திலிருந்து அல்குர்ஆன் குரைஷிகளின் தெய்வங்களையும், சட்டங்களையும், பழக்க வழக்கங்களையும் விமர்சனம் செய்தமையும், அவற்றிற்கு சவால் விடுத்தமையும் நாம் தெளிவாக புரிந்து கொள்கிறோம். ஆனால் அவர்களோ அவை எவற்றையும் கைவிட தயாராக இருக்கவில்லை. அதே நேரத்தில் தமது சிந்தனைகள், வழக்கங்கள், விருப்பங்கள் என்பவற்றுக்கு பொருந்திப்போகின்ற வகையில் இஸ்லாத்தை புனரமைத்துக் கொண்டால் நபி(ஸல்) அவர்களை விருப்பத்துடன் பின்பற்றத் தயாராக இருந்தனர் என்பதையும் இது எமக்குத் தெளிவு படுத்துகிறது.
புனரமைப்பிற்கான கோரிக்கைக்கு கிடைத்த பதில் என்ன?
குரைஷித் தலைவர்களின் புனரமைப்புக் கோரிக்கைக்கு அல்லாஹ்(சுபு)வின் பதிலடி எவ்வாறு இருந்தது? பதிலடியின் ஆரம்பமே குரைஷிகளைப் பார்த்து இவ்வாறு “கூறுங்கள்” என்ற தொணியில் நபி(ஸல்) அவர்களை நோக்கிய கட்டளையாக வந்தது.
இந்தக் கட்டளை எமக்கு ஒரு விடயத்தை மிகத் திட்டவட்டமாக கூறியது. அதாவது தீனுல் இஸ்லாம் என்பது அல்லாஹ்(சுபு)வுக்கு சொந்தமானது; அவனைத் தவிர வேறு யாரும், அவர் இறைத்தூதராக இருந்தாலும் கூட, சொந்தம் கொண்டாட முடியாது; தாம் விரும்பியவாறு அதனை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது; அது குறித்து விரும்பியதையெல்லாம் கூறி விட முடியாது; அதிலே குறைத்தலையோ, கூட்டுதலையோ செய்துவிட முடியாது.
அதன் தூதர்(ஸல்) அவர்களுக்கே இவ்விடயங்களில் சுதந்திரம் கிடையாது என்றால், இன்றும் எம்முன்னே இத்தகையதொரு புனரமைப்புக் கோரிக்கை தொடர்ந்து விடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது; அதற்கு எமது எதிர்வினையாற்றல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நாம் மிக எச்சரிக்கையுடன் சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். அதற்கு வஹியின் நிழலில் நாம் அடைக்களம் புக வேண்டும்.
மேற்குறிப்பிட்ட திருமறை வசனத்தை சற்று உன்னிப்பாக நோக்கினால் அதற்கான பதிலை மிகத் துல்லியமாகப் புரிந்து கொள்ளலாம்.
அல்லாஹ்(சுபு),
مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِن تِلْقَاءِ نَفْسِي
“(நபியே!) நீங்கள் சொல்லுங்கள்”… “என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை” – என்று அல்லாஹ்(சுபு) கூறச் சொல்கிறான் – அதாவது எனக்கு இந்த குர்ஆனை மாற்றுவதற்கு அல்லது புனரமைப்பு செய்வதற்கு அதிகாரம் கிடையாது என்று குரைஷிகளிடம் கூறச் சொல்கிறான். பின்னர் அதற்கான காரணத்தையும் அடுத்து வரும் வார்த்தைகளில் தொடர்ந்து சொல்கிறான்…
إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰ إِلَيَّ
“என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை” – அதாவது நான் பின்பற்றுபவனே தவிர புதினங்களை தோற்றுவிப்பவனல்ல; மாற்றங்களை உருவாக்குபவன் அல்ல; அதற்கான அதிகாரம் எனக்கு வழங்கப்படவில்லை; நான் வெறுமனவே வஹியைப் பின்பற்றுபவன் மாத்திரமே என்ற உண்மையை அவர்களுக்கு சந்தேகத்துக்கு இடமின்றி முன்கூட்டியே சொல்லி வைக்குமாறு அல்லாஹ்(சுபு) கட்டளை இடுகிறான்.
மேலும்
إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيم
“என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்” – என்று கூறி அல்லாஹ்(சுபு)வின் சந்நிதானத்தில் அனைவரும் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டவர்கள் என்பதையும், அவனுக்கு மாறு செய்தால் அவனின் பிடி மிகவும் பலமானது என்பதையும் இந்த திருமறை வசனம் தெளிவாக முன் வைக்கிறது.
அதாவது புதியதொரு குர்ஆனை நான் கொண்டு வந்தாலோ அல்லது அதிலே மாற்றத்தை ஏற்படுத்தினாலோ, நியாயத்தீர்ப்பு நாளில் அல்லாஹ்(சுபு)வின் தண்டனை என்னைச் சூழ்ந்து கொள்ளும் என்பதற்கு நான் அஞ்சுகிறேன் என குரைஷித் தலைவர்களிடம் மிகத் தெளிவாகக் கூறிவிடுமாறு கட்டளை இடுகிறான் அல்லாஹ்(சுபு).
எனவே நாளுக்கு நாள் இஸ்லாத்தை புனரமைப்பு செய்வதற்கான அழைப்பு அதிகரித்து வருகின்ற இன்றைய காலகட்டத்தில், இத்தகைய அழைப்புக்கள் எதுவாக இருந்தாலும், அவை இஸ்லாத்தை முற்றாகச் சிதைப்பதற்கான அழைப்புக்களே என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் வாழும் யுகத்தின் அல் லாத், அல் உஷ்ஷா, அல் மனாத்துக்கு ஒப்பான – தாராண்மைவாதம் (Liberalism), சுதந்திரம் (Freedom), சடவாதம் (Materialism), முதலாளித்துவம் (Capitalism), ஜனநாயகம் (Democracy) போன்ற நவீன சிலைகளை வணங்குபவர்களின் விருப்பங்களுக்கு ஏட்ப இஸ்லாத்தை மறு பிரசவிப்பு செய்யும் முயற்சிகள் பல திசைகளிலும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
எனவே இந்த தீய சக்திகளின் அழைப்பிற்கான எமது பதிலும், அன்று அல்லாஹ்(சுபு)வின் தூதர்(ஸல்) அவர்கள் குரைஷித் தலைவர்களுக்கு அளித்த பதிலுக்கு ஒப்பானதாக இருக்க வேண்டும். அதாவது நாங்கள் வஹியை பின்பற்றுவர்களே தவிர வஹியை புனரமைப்பவர்களோ, திரிப்பவர்களோ, சிதைப்பவர்களோ அல்ல என்பதை அவர்களுக்கு ஆணித்தரமாக கூறிவிட வேண்டும். அதற்கு அல்லாஹ்(சுபு) எமது ஈமானையும், தக்வாவையும் பலப்படுத்துவானாக!
إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰ إِلَيَّ ۖ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
“…என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை…”