முற்றுகையிடப்பட்ட காஸா பகுதியில் பல ஹமாஸ் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
காஸாவின் மீது விமானத் தாக்குதல் தொடர்ந்தால் விரிவான இராணுவ நடவடிக்கையை எதிர்பார்க்குமாறு ஹமாஸ் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஸாவிலிருந்து சுடப்பட்ட மொத்தம் 13 ராக்கெட்டுகளில் எட்டு தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறி, “நேற்று மாலை” இஸ்ரேலிய பிரதேசத்தை நோக்கி ராக்கெட்டுகள் வீசப்பட்டதற்கு பதிலளிப்பதாக இந்த தாக்குதல்கள் நடந்தன என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய போர் விமானங்கள் காசாவில் 10 தளங்களைத் தாக்கின, அவற்றில் “ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் ராக்கெட் பயிற்சி மற்றும் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஹமாஸ் இராணுவ வளாகம்” ஆகியவை அடங்கும்.
புதுப்பிக்கப்பட்டிருக்கும் இந்த தாக்குதல் நடவடிக்கைகள் வாசிங்கடனில் நடக்கும் கூட்டங்களும், நிகழ்வுகளும், பலஸ்தீனர்களுடனான இஸ்ரேலின் முரண்பாட்டில் எவ்வித வேறுபாட்டையும் ஏற்படுத்தாது என்பதை மீண்டும் ஞாபகப்படுத்துகிறது.
வெள்ளை மாளிகையில் இஸ்ரேலுடனான இயல்பாக்கல் உடன்படிக்கையை ஐக்கிய அரபு இராஜ்ஜியமும், பஹ்ரைனும் உத்தியோக பூர்வமாக கையெழுத்திட்ட செவ்வாய்க்கிழமை இரவில் காஸாவிலிருந்து ராக்கட் தாக்குதல்களும் இடம்பெற்றமை தற்செயலான செயலாக இருக்கவில்லை.
ராக்கெட்டுகளில் ஒன்று அஷ்டோட் நகரில் தரையிறங்கியது. இதில் இரண்டு இஸ்ரேலியர்கள் காயமடைந்தனர்.
பாலஸ்தீனிய குழுவான இஸ்லாமிய ஜிஹாத்தின், ஆயுதப் பிரிவான அல் குட்ஸ் பிரிகேட்ஸ், ராக்கெட் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்தத் தாக்குதல் “இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கான” பதிலடி என்று அதன் ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.