இந்தியாவில் புதிதாக கொண்டுவரப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்ற போராட்டங்களில், தலைநகர் புது டெல்லியில் நடை பெற்ற போராட்டங்களின் போது உரை நிகழ்த்திய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னால் மாணவர் தலைவரும், வெறுப்புக்கு எதிரான ஐக்கியம் – United Against Hate (UAH)) என்ற சிவில் சமூகக் குழுவின் உறுப்பினருமான, உமர் காலித் டெல்லியில் வெடித்த வன்முறைகளுடன் தொடர்புபடுத்தி பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரும்பாலும் முஸ்லிம்களை உள்ளடக்கிய சுமார் 53 பேர் கொல்லப்பட்ட இந்த வன்முறையுடன் சம்பந்தம் இருப்பதாக, பழங்குடியினரின் உரிமைகள் தொடர்பாக கலாநிதி பட்டம் பெற்ற 33 வயதான உமர் காலிதை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் – Unlawful Activities Prevention Act (UAPA) என்ற கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு ஜாமீனுக்கான வாய்ப்பைக் குறைக்கும், விசாரணை இல்லாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிற UAPA சட்டத்தை மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது பிரயோகிப்பதை பற்றி சட்ட வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, நாடு தழுவிய ரீதியில் அமைதியான போராட்டங்களில் ஈடுபட்ட பல மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்கள் உள்வாங்கப்படாத மூன்று அண்டை நாடுகளைச் சேர்ந்த மத சிறுபான்மையினருக்கான குடியுரிமையை, விரைவாக வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) “அடிப்படையில் பாரபட்சமானது“ என்று ஐ.நா கூறுகிறது.
“காவல்துறை முதலில் காலித்தின் பேச்சுகளை தவறாக குறிப்பிட்டு, பின்னர் அதற்கேற்ப சாட்சிகளை வடிவமைத்துள்ளது. இது கருத்து வேறுபாட்டின் ஜனநாயகக் குரல்களை அச்சுறுத்தி அவர்களை மெளனமாக்குவதற்கான தெளிவான முயற்சியாகும்.” காவல்துறையினர் “உமர் காலிதை டெல்லி கலவரத்தின் ‘சூத்திரதாரி‘ என்று வடிவமைத்துள்ளனர். டெல்லி கலவரத்தை பற்றி நியாயமான விசாரணை நடத்துவதற்கு பதிலாக CAA எதிர்ப்பிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்களை வேட்டையாடுபவர்களாக காவல்துறையினர் மாறியுள்ளனர்“ என்று (UAH) ஐச் சேர்ந்த நதீம் கான் கூறினார்.
டெல்லி காவல்துறை முக்கிய ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் மீது CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை “தூண்டிவிட்டு அணிதிரட்டியதாக“ குற்றம் சாட்டி, வழக்குகள் பதிவு செய்த மறுநாள், இந்த கைது நடைபெறுள்ளது.
கலவரம் தொடர்பாக இதுவரை 700 க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை First Information Reports (FIRs) காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் வெறுக்கத்தக்க உரைகளை வழங்கிய ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) ஆதரவாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் காப்பாற்றப்பட்டு வருகின்றனர் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
“விசாரணை என்ற போர்வையில் அமைதியான செயற்பாட்டாளர்களை குற்றவாளிகளாக வடிவமைப்பது காவல்துறையினரின் சதி“ என்று பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ட்வீட் செய்துள்ளார்.
காலித்தின் தந்தை சையத் காசிம் ரசூல் இலியாஸ், பொலிசார் தனது மகனை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் விசாரணை செய்து பின்னர், உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்கு கைது செய்ததாக அவர் அளித்த பேட்டியில் கூறினார்.
மேலும் கூறுகையில் காலித் மீது UAPA சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. “நீண்ட காலத்திற்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட முதல் FIR இல் உமர் காலித்தை பிரதான குற்றவாளியாக பதிவு செய்துள்ளனர். தேசத்துரோக குற்றச்சாட்டுக்கள் உட்பட எனது மகன் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன“ என்று இலியாஸ் கூறினார்.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட அம்னஸ்டி இன்டர்நேஷனல்(இந்தியா), தனது அறிக்கையில் டெல்லி காவல்துறையினர் பெப்ரவரி வன்முறையில் “உடந்தையாகவும், சார்பாகவும்“ நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
காவல்துறை மோசமான இந்த கலவரத்தில் 1,575 பேரை கைது செய்துள்ளதாக தனது விசாரணையை நியாயப்படுத்துகிறது. “கலவரம் தொடர்பான வழக்குகளில் 250 க்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் குற்றம் சாட்டப்பட்ட 1,153 பேருக்கு (571 இந்துக்கள் மற்றும் 582 முஸ்லிம்கள்) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன“ என்று டெல்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.