கடந்த புதன்கிழமை இரவு மத்திய பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு லாஹூர் நகர்புரத்துக்கு வெளியே உள்ள பாழடைந்த நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள வயலில் ஒரு பெண்ணை கூட்டு சிலர் பலாத்காரம் செய்துள்ளனர். நெடுஞ்சாலையில் எரிபெருள் இல்லாமல் கார் செயலிழந்து நின்றதனால் போலீஸ் உதவிக்காக காத்திருந்த 30 வயதுடைய பெண்ணையும் அவரது இரண்டு சிறு குழந்தைகளையும் இரண்டு நபர்கள் துப்பாக்கி முனையில் இழுத்துச் சென்று இந்த அக்கிரமத்தை செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சந்தேக நபர்களில் ஒருவரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் தப்பிச் செல்வதற்கு முன்னர் அந்தப் பெண்ணிடமிருந்த பணம் மற்றும் நகைகளைத் கொள்ளையடித்திருப்பதாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பஞ்சாப் காவல்துறையின் குற்றவியல் விசாரணை பிரிவின் தலைவர் அதிஃப் நசீர், தொலைபேசி பதிவுகளை வைத்தும், சம்பவ இடத்திலிருந்து பெறப்பட்ட தடயவியல் ஆதாரங்களை வைத்தும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். மேலும் தனக்கும் இந்த பாலியல் பலாத்காரத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று சந்தேக நபர் கூறுவதாக நசீர் கூறினார். தான் குற்றமற்றவர் என்பதை நியாயப்படுத்துவதற்காக சந்தேக நபர் தன்னை போலீசாரிடம் ஒப்படைத்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
எனினும் பிரதான சந்தேக நபரான இன்னுமொருவர் காவல்துறையினரின் கைகளில் சிக்காமல் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரைக் கைது செய்ய போலீஸ் குழுக்கள் வெவ்வேறு இடங்களில் சோதனைகளை நடத்தி வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பான விசாரணை முறையாக கையாளப்படாததனால் பாகிஸ்தான் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பிரதம மந்திரி இம்ரான் கானின் அலுவலகம், பெண்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் முன்னுரிமையும், பொறுப்பும் ஆகும் என்றும், “எந்தவொரு நாகரிக சமுதாயத்திலும் இத்தகைய கொடூரதனத்தையும், மிருகத்தனத்தையும் அனுமதிக்க முடியாது“ என்றும் கூறியது.
பாதிக்கப்பட்ட பெண் தவறு செய்திருப்பதாக தான் உணருவதாக இந்த விசாரணைக்கு நியமிக்கப்பட்ட முன்னணி பொலிஸ் புலனாய்வாளரான ஒமர் ஷேக் கூறியதை அடுத்து அவரை பணிநீக்கம் செய்யுமாறும் போராட்டக்காரர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
ஒமர் ஷேக், அந்த பெண் வேறு பரபரப்பான நெடுஞ்சாலையை தேர்ந்தெடுத்து சென்றிருக்க வேண்டும் என்றும், இரவில் பயணம் செய்திருக்க கூடாது என்றும், தனது வாகனத்தில் போதுமான எரிபொருள் இருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும் என்றும் கூறியதாக கூறப்படுகிறது.
மேலும் “அப்பெண் வசிக்கும் நாடான பிரான்சைப் போல், பாக்கிஸ்தான் பெண்களுக்கு பாதுகாப்பானது என்ற எண்ணத்தில் இப்பெண் இருந்திருப்பதாக ஒமர் ஷேக் கூறியுள்ளார்“, இது சம்பந்தமாக இஸ்லாமாபாத்தில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு கருத்து தெரிவிப்பதற்கான கோரிக்கைக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும், குற்றவாளிகள் பொறுப்புக்கூறப்படுவதை உறுதி செய்யவும், பாகிஸ்தான் போதுமான செயற்பாடுகளை செய்யவில்லை என்று உலகளாவிய உரிமைகள் கண்காணிப்புக் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த அசம்பாவிதம், குறிப்பாக நாட்டில் பெண்களுக்கான பொது இடம் ஏற்கனவே குறைவாக இருக்கிறது என்று குற்றம்சாட்டும் பெண்களை, மிகவும் கோபப்படுத்தியுள்ளது. “இப்போது உங்கள் சொந்த பாதுகாப்பிற்கு நீங்கள் தான் பொறுப்பு என்று காவல்துறை எங்களுக்குச் சொல்கிறது“ என்று மகளிர் ஜனநாயக முன்னணி கூட்டு ஏற்பாடு செய்த இஸ்லாமாபாத் போராட்டத்தில் யம்னா ரெஹ்மான் கூறினார்.