ஒரு தனிநபரால் எவ்வாறு சர்வதேச அரசியலில் செல்வாக்குச் செலுத்த முடியும்? அல்லது அத்தகைய தனிநபர்களைக்கொண்ட வெறும் அரசியல் இயக்கங்களால் எவ்வாறு அரசுகள் பயணிக்கின்ற திசைகளில் ஆளுமை செலுத்த முடியும்? குறிப்பாக அந்த அரசுகளில் போக்குகளும், திசைகளும் பல தசாப்தங்களாக, சில பொழுதுகளில் சில நூற்றாண்டுகளாக புரையோடிப்போயிருக்கின்ற நிலையில் அது எவ்வாறு சாத்தியப்படக்கூடும்? என்பன போன்ற கேள்விகள் எம்மில் எழுவது யதார்த்தமானதே.
இதற்கான பதில் என்னவென்றால் தனிநபர்களோ அல்லது அரசியல் இயக்கங்களோ அரசியல் நடவடிக்கைகளை அவதானித்து வருகின்ற போது அல்லது சர்வதேச அரசியலை புரிந்து கொள்ளும் போது, அவற்றை வெறுமனவே அறிவு சார்ந்த இன்பத்திற்காகவோ, அறிவார்ந்த பகட்டுக்காகவோ அல்லது கல்வியையும், தகவலையும் கூட்டிக்கொள்வதற்காகவோ மேற்கொள்ளக் கூடாது. மாற்றமாக இந்த உலகத்தின் விவகாரங்களை பராமாரிப்பதை இலக்காகக் கொண்டும், தாம் இந்த உலகில் எவ்வாறு நேர்மறையாக செல்வாக்குச் செலுத்தும் நிலையை எட்டலாம் என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டும் மேற்கொள்ள வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால் நாளை உருவாகக்கூடிய ஒரு புதிய களத்தில் நேரடியாக அரசியல் செய்யக்கூடிய ஓர் அரசியல்வாதியின் மனோநிலையில் இருந்து இந்த உலகை உண்ணிப்பாக அவதானிக்கும் நிலை அவர்களிடம் இருக்க வேண்டும். இத்தகையதொரு அரசியல்வாதி ஒரு சிறந்த அறிவாளியாக இருக்கிறார் என்று வைத்தால் கூட அவர் அறிவார்ந்த இன்பத்தை இலக்காக கொள்பவரல்ல, அல்லது அவரொரு ஆழமான சிந்தனையாளராக இருந்தால் கூட அறிவார்ந்த பகட்டின் மீது மோகம் கொண்டவருமல்ல. மாறாக அவர் தான் ஒரு அரசியல்வாதி என்ற தராதரத்தில் நின்றே உள்நாட்டு அரசியலை அவதானித்து, அரசியல் சூழலைப் புரிந்து கொள்கிறார். சர்வதேச அரசியலை அவதானித்து, சர்வதேச சூழலைப் புரிந்து கொள்கிறார். எனவே அரசியல்வாதி என்றவுடனேயே, அவர் உலக விவகாரங்களை பராமரிப்பதற்காக இயங்கிக்கொண்டிருக்கிறார், அதாவது அவர் சர்வதேச அரசியலில் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்து விட்டார் என்றுதான் அர்த்தமாகும். மேற்சொன்னவாறு நோக்குவது ஒரு கோணம்.
வேறொரு கோணத்தில் நோக்கினால், அவர் தான் வெறும் தனிமனிதர் என்று கருதிக் கொண்டு இப்பணியில் ஈடுபடவில்லை. மாற்றமாக தான் ஓர் தேசத்தின் (உம்மத்தின்) அங்கமாக இருக்கின்றேன் என்ற அடிப்படையிலும், அல்லது தான் ஓர் அரசுக்குள் வாழ்ந்து வரும் அதன் பிரிக்க முடியாத அலகு என்ற அடிப்படையிலுமே இயங்குகிறார். அவர் அரசின் கொள்கைகளை தீர்மானிக்கக் கூடியவர்களில் ஒருவராக அல்லது அமூல் செய்யக்கூடியவர்களில் ஒருவராக இல்லாதிருக்கலாம். எனினும் அவர் கொள்கைகளை தீர்மானித்து, அமூல் செய்யக் கூடிய ஒருவராக, அல்லது அவற்றை செய்வதற்காக பிறரை பணிக்கக்கூடிய ஒருவராக மாறுவதற்காக முயற்சிக்கக் கூடியவராக இருக்கிறார். இவ்வாறாக அவர், தீர்மானிப்பதற்கும், அமூல் செய்வதற்கும் அதிகாரங்கள் எதுவுமற்ற தனிநபராக இருக்கின்ற சந்தர்ப்பத்திலேயே, சர்வதேச ரீதியில் செல்வாக்குச் செலுத்த தொடங்கி விடுகிறார்.
இவ்வாறு அவர் இயங்குவராக இருந்தால் அவர் மிகவும் வினைத்திறன் மிக்கவராக மாறி விடுகிறார். ஏனென்றால் அவரை தனது குடிமகனாகக் கொண்ட அரசு அவர் போன்றோரால் சர்வதேசத்தில் செல்வாக்குச் செலுத்த நிர்ப்பந்திக்கப்படுகிறது. அல்லது அவரும் அவர் போன்றோரும், தமது அரசை சர்வதேச அரசியலிலும், சர்வதேச சூழலிலும் செல்வாக்குச் செலுத்தக் கூடிய ஒன்றாக மாற்ற உந்துகிறார்கள். அதாவது இவர்கள் அந்த அரசை, உலகில் நடக்கின்ற குறிப்பாக பலம்மிக்க நாடுகளில் நடக்கின்ற அரசியல் செயல்பாடுகளை நன்கு புரிந்து கொள்ளக்கூடிய, அரசியல் விழிப்புணர்வுள்ள தனிநபர்களை விருத்தி செய்ய தூண்டுவதன் ஊடாக, சர்வதேச அரசியலிலும், சர்வதேச சூழலிலும் செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒன்றாக மாற்றுகிறார்கள். தாம் புரிந்து கொண்ட அரசியல் எண்ணக்கருக்களுக்கு உண்மையான நடைமுறை விளைவை ஏற்படுத்துவது என்பதன் அர்த்தம் இதுதான்.
எனவே தனிநபர்களை அரசியல் நடவடிக்கைகளை அவதானித்து வருமாறும், சர்வதேச அரசியலை புரிந்து கொள்ளுமாறும் தூண்டுவது, இத்தகைய ஆளுமைகளின் நிர்மாணத்தின் முதல் கட்டமாகும். மேலும் இவர்கள் சர்வதேச அரசியலிலும், சர்வதேச சூழலிலும் செல்வாக்குச் செலுத்துவதற்கு, தாம் சார்ந்த மற்றும் உலகில் செல்வாக்கிலுள்ள அரசியல் எண்ணக்கருக்களை ஐயமறப் புரிந்து கொள்வதும் இன்றியமையாததாகும். இத்தகைய முயற்சி சர்வதேச அரசியலில் தேர்ச்சி பெற்ற அரசியல்வாதிகளை உருவாக்கும் செயற்பாடாகும். இப்பணி சாத்தியப்படும் பட்சத்தில் சர்வதேச அரசியலிலும், சர்வதேச சூழலிலும் தாக்கம் செலுத்தக்கூடிய அரசாக அந்த அரசு இயல்பாகவே மாறிவிடும். நான் மேலே சொன்னவற்றிலிருந்து அரசியல் எண்ணக்கருக்களின் இன்றியமையாத தேவையும், அவற்றின் பாரிய பெறுமதியும் உங்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கும் என்று நம்புகின்றேன்.
இன்னுமொரு விடயமும் இங்கே மிக முக்கியமானது. ஒரு அரசு பிற அரசுகளுடன் உறவுகளை வைத்துக் கொள்ளாமல் அது சர்வதேச அரசியலில் தனது பிரசன்னத்தைக் மேலோங்கிக் காட்ட முடியாது. ஒரு சமூகத்தில் வாழ்கின்ற ஒருவர் அந்த சமூகத்தைச் சேர்ந்த ஏனைய நபர்களுடன் உறவாடாமல் தனது பிரசன்னத்தை வெளிக்காட்ட முடியாததைப் போல. அந்த உறவின் அடிப்படையிலும், மக்கள் மத்தியில் காணப்படுகின்ற உறவுகளில் அவருக்கு இருக்கின்ற செல்வாக்கின் அடிப்படையிலுமே, அந்த சமூகத்திலும், மக்களிடத்திலும் அவருக்குள்ள அந்தஸ்த்து தீர்மானிக்கப்படுகிறது. ஒரு அரசின் நிலையும் அவ்வாறுதான்; ஒரு அரசு ஏனைய அரசுடன் வைத்திருக்கின்ற உறவுகளின் மீதே அந்த அரசின் பிரசன்னம் தங்கியுள்ளது. அதன் நிலை மேம்படுவதும், வீழ்ந்து போவதும் அந்த அரசு ஏனைய அரசுகளுடன் வைத்திருக்கின்ற உறவுகளின் மீதும், சர்வதேச உறவுகளில் அந்த அரசுக்கு இருக்கின்ற செல்வாக்கின் மீதுமே தங்கியுள்ளது.
இஸ்லாமிய அரசு என்பது ஓர் சித்தாந்தம் சார் அரசாகும். எனவே அதன் அடிப்படையான பணி இஸ்லாமிய அழைப்பை உலகம் முழுவதற்கும் எடுத்துச் செல்வதாகும். எனவே சர்வதேச நன்மதிப்பும், சர்வதேச உறவுகளில் செல்வாக்கும் அதற்கு இருக்க வேண்டியது தவிர்க்க முடியாத அம்சமாகும். எனவே அது சார்ந்த அரசியல்வாதிகளின் அரசியல் எண்ணக்கருக்கள் உள்நாடு மற்றும் பிராந்தியம் தழுவியதாக இருக்கக் கூடாது. மாறாக அது சர்வதேசம் தழுவிதாக இருக்க வேண்டும். இன்னுமொரு வார்த்தையில் சொல்வதானால், அந்த அரசைச் சேர்ந்த அரசியல் வாதிகள் இஸ்லாமியர்கள் என்ற அடிப்படையில், அவர்கள் தமது அரசியல் எண்ணக்கருக்களை உள்நாடு மற்றும் பிராந்தியப் பார்வை கொண்டாதாக மாத்திரம் வைத்துக் கொள்ளக்கூடாது. மாறாக அவர்களுக்கு சர்வதேசப் பார்வை இருக்க வேண்டும். இந்த அரசியல்வாதிகள் முஸ்லிம்களாக இருப்பதாலும், அவர்களது அரசு இஸ்லாமிய அரசு என்பதாலும், அந்த அரசின் அடிப்படைப் பணி இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை உலகம் முழுவதும் கொண்டு செல்வது என்பதாலும், நாம் இதுவரை விபரித்த முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் அரசியல் விழிப்புணர்வு முழுமையாகவும், உயர்ந்த நிலையிலும் இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். எனவே அந்நிலையை நோக்கி முஸ்லிம்கள் வளர்வது இஸ்லாம் வலியுறுத்தும் மிகச்சிறந்த வணக்கமாகும்.