பஹ்ரைனும் இஸ்ரேலும் தங்களுக்கிடையிலான உறவுகளை முழுமையாக இயல்பாக்கும் ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
“30 நாட்களில் இஸ்ரேலுடன் சமாதானம் செய்த இரண்டாவது அரபு நாடு“ என்று அவர் ட்வீட் செய்துள்ளார். அமெரிக்கா, பஹ்ரைன் மற்றும் இஸ்ரேல் இடையேயான கூட்டு அறிக்கையின் நகலையும் ஜனாதிபதி ட்விட்டரில் வெளியிட்டார்.
கடந்த மாதம் இதேபோன்ற ஒப்பந்தத்தை இஸ்ரேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அறிவித்ததை அடுத்து இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
செப்டம்பர் 15 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் நடைபெறவிருக்கும் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கையெழுத்திடும் விழாவில் பஹ்ரைனும் இணைந்து கொள்ளும் என்று டிரம்ப் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
ஒரு ஹீப்ரு மொழி அறிக்கையில், நெத்தன்யாகு பஹ்ரைனுடனான ஒப்பந்தத்தை அறிவிக்க “தான் நகர்த்தப்பட்டதாகவும்“, இது “ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான ஏற்பட்ட வரலாற்று ரீதியான சமாதானத்துடன் இணைந்து கொள்கிறது“ என்றும் அவர் கூறினார்.
பாலஸ்தீனிய நிலங்கள் மீது இஸ்ரேல் இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடரும் அதே வேளையில், அரபு நாடுகள் இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்கும் இதுபோன்ற ஒப்பந்தங்கள் தங்களது இருப்புக்கான அச்சுறுத்தலை உறுதிப்படுத்துகின்றன என்று பாலஸ்தீனிய தலைவர்கள் விமர்சிக்கின்றனர்.
பாலஸ்தீன விடுதலை அமைப்பு, பஹ்ரைன்–இஸ்ரேல் ஒப்பந்தம் “பாலஸ்தீனிய விடுதலைக்கு எதிரான மற்றுமொரு துரோகச் செயல்“ என்று நேற்று வெள்ளிக்கிழமை கூறியது.
பஹ்ரைன் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படையையும் பிரித்தானியாவின் இராணுவ தளத்தையும் தனது மடியில் ஏந்திக் கொண்டிருக்கும் அவர்களின் நெருக்கமான நட்பு நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டறிக்கை
வெள்ளை மாளிகை
ஜனாதிபதி டொனால்ட் ஜெ டிரம்ப், பஹ்ரைன் இராச்சியத்தின் மாட்சிமை மன்னர் ஹமாத் பின் ஈசா பின் சல்மான் அல் கலீஃபா மற்றும் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் இன்று இஸ்ரேலுக்கும் பஹ்ரைன் இராச்சியத்திற்கும் இடையில் முழு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த ஒப்புக் கொண்டனர்.
இது மத்திய கிழக்கில் மேலும் அமைதி நிலவுவதற்கான வரலாற்று முன்னேற்றமாகும். இந்த இரண்டு சக்திவாயந்த சமூகங்களுக்கிடையில் நேரடி உரையாடல் மற்றும் உறவுகளைத் ஆரம்பிப்பதானது மேம்பட்ட பொருளாதாரங்களுக்கும், மத்திய கிழக்கின் நேர்மறையான மாற்றத்தைத் தொடரவும் மற்றும் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் செழிப்பையும் அதிகரிக்க உதவும்.
பாலஸ்தீனிய மக்களுக்கு அமைதி, கெளரவம் மற்றும் பொருளாதார வாய்ப்பை மேம்படுத்துவதற்காக 2019 ஜூன் 25 அன்று மனாமாவில் வரலாற்று அமைதிக்கான செழிப்புப் பட்டறையை நடத்தியதற்காக பஹ்ரைன் இராச்சியத்திற்கு அமெரிக்கா தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
பாலஸ்தீனிய மக்கள் தங்கள் முழு திறனை உணர ஏதுவாக இஸ்ரேல்–பாலஸ்தீனிய மோதலுக்கு ஒரு நியாயமான, விரிவான மற்றும் நீடித்த தீர்மானத்தை அடைவதற்கான தங்கள் முயற்சிகள் தொடரும். சமாதானத்திற்கான தொலைநோக்கில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சமாதானமாக வரும் அனைத்து முஸ்லிம்களும் மற்றும் அமைதியான பிற மத வழிபாட்டர்களும், அல் அக்ஸா மசூதி மற்றும் ஜெருசலேமின் பிற புனித தளங்களை பார்வையிட்டு பிரார்த்தனை செய்யலாம் என்று இஸ்ரேல் உறுதிப்படுத்துகிறது.
ஜனாதிபதி டிரம்பிற்கு பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டுவதற்கான அர்ப்பணிப்பிற்கும், பகிரப்பட்ட சவால்களுக்கான அவரது கவனத்திற்கும் தங்கள் நாடுகளை ஒன்றிணைக்க அவர் எடுத்துள்ள நடைமுறை மற்றும் தனித்துவமான அணுகுமுறை ஆகியவற்றிற்காக, ஹமாத் மன்னரும், பிரதமர் நெதன்யாகுவும் தமது ஆழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேலுடனான முழு இராஜதந்திர உறவுகளை அறிவிப்பதில், ஆகஸ்ட் 13, 2020 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மகுட இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் ஆகியோர் வழங்கிய தலைமைக்கு நாங்கள் பாராட்டுகின்றோம்.
2020 செப்டம்பர் 15 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க கையெழுத்திடும் விழாவில் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் இணைய ஜனாதிபதி டிரம்பின் அழைப்பை பஹ்ரைன் இராச்சியம் ஏற்றுக்கொண்டுள்ளது, இங்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பஹ்ரைனின் வெளியுறவு மந்திரி அப்துல் லதீப் அல் சயானி ஆகியோர் இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க சமாதான பிரகடனத்தை கையெழுத்திடவுள்ளனர்.