ரோஹிங்கியா முஸ்லீம்கள் மற்றும் பிற சிறுபான்மை இனக்குழுக்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்த இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய, சர்வதேச வர்தகங்களுடனான தொடர்புகளைக் கொண்ட ஒரு ரகசிய மியான்மர் இராணுவ கூட்டு நிறுவனம் நாட்டின் இராணுவத்தை நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கடந்த வியாழக்கிழமை அம்னஸ்டி இன்டர்நெஷனல் (Amnesty International) குற்றம் சாட்டியது.
முழுவதுமாக மூத்த இராணுவ அதிகாரிகளை வாரியமாக கொண்டுள்ள மியான்மர் எகனாமிக் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (எம்.இ.எச்.எல்) Myanmar Economic Holdings Limited (MEHL) மீதான அம்னஸ்டி இன்டர்நெஷனலின் விசாரணையில் மியான்மரின் இராணுவம் பல ஆண்டுகளாக யாங்கோனை தளமாகக் கொண்ட நிறுவனத்திடமிருந்து 18 பில்லியன் டாலர் ஈவுத்தொகையைப் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டுகிறது.
கசிந்த உத்தியோகபூர்வ ஆவணங்களின் அடிப்படையில் மனித உரிமைகள் குழு வெளியிட்ட அறிக்கையில் “மியான்மரின் சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சில குற்றவாளிகள் MEHL இன் வணிக நடவடிக்கைகளிலிருந்து பயனடைபவர்களில் அடங்குவர்” என்று அம்னஸ்டி இன்டர்நெஷனலின் வணிக, பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளின் தலைவர் மார்க் டம்மெட் கூறினார்.
“இந்த ஆவணங்கள் மியான்மரின் இராணுவமும் MEHL ம் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்பதையும், MEHL இன் பரந்த வணிக சாம்ராஜ்யத்திலிருந்து எவ்வாறு பயனடைகிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.” MEHL இன் பங்குதாரர் பதிவுகளின் படி நிறுவனம் முழுமையாக சேவையிலுள்ள மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களால் உரிமை கோரப்பட்டு கட்டுப்படுத்தப்படுவதாகவும், சமீபத்திய ஆண்டுகளில் மோதல்கள் மிகவும் தீவிரமடைந்த ராகைன் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட இராணுவ பிரிவுகள் உட்பட்ட இராணுவ பிரிவுகள் நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கை உரிமை கொண்டுள்ளது என்றும் அம்னஸ்டி கூறுகிறது.
மேலும் இந்நிறுவனத்திலிருந்து நேரடியாக பயனடைந்தவர்களில் மியான்மரின் உயர்மட்ட இராணுவத் தளபதி ஜெனரல் மின் ஆங் ஹ்லேங்கும் உள்ளார். 2010 மற்றும் 2011 க்கு இடையில் 5,000 பங்குகளுக்கு உரிமையாளரான அவர் 250,000 டாலரை ஈவுத்தொகையாக பெற்றுள்ளார் என்று அம்னஸ்டி கூறுகிறது.
ரோஹிங்கியர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை இவரே மேற்பார்வையிட்டதாக ஜெனரல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை மற்றும் வழக்குத் தொடர ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த செவ்வாயன்று மியான்மரைச் சேர்ந்த இரண்டு இராணுவ வீரர்கள், 700,000 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்களை அண்டை நாடான பங்களாதேஷுக்கு தப்பிச் செல்ல நிர்பந்தித்த மிருகத்தனமான 2017 பேரழிவின் போது, ரோஹிங்கியா கிராமவாசிகளைக் கொன்று குவிக்கவும், பாலியல் பலாத்காரம் செய்யவும் தங்கள் மேலதிகாரிகளால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறினார்கள்.
இந்நிறுவனம் வங்கி, உற்பத்தி மற்றும் சுரங்க துறைகளில் தமது வணிகத்தை வியாபித்துள்ளதுடன், சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
MEHL இன் பங்குகள் சேவையிலுள்ள அல்லது ஓய்வு பெற்ற 381,636 இராணுவ வீரர்களான தனிப்பட்ட பங்குதாரர்களாலும் “பிராந்திய கட்டளைகள், பிரிவுகள், பட்டாலியன்கள், துருப்புக்கள், போர் வீர சங்கங்கள்” ஆகியவற்றை உள்ளடக்கிய 1,803 “நிறுவன பங்குதாரர்களாலும்” உரிமை கோரப்பட்டுள்ளது.
20 ஆண்டு காலப்பகுதியில் பங்குதாரர்களுக்கு கொடுக்கப்பட்ட மொத்த ஈவுத்தொகை சுமார் 18 பில்லியன் (107 பில்லியனுக்கும் அதிகமான மியான்மர் கியாட்) ஆகும்.
4.3 மில்லியனுக்கும் அதிகமான MEHL பங்குகளை உரிமை கொண்டுள்ள ராகினில் செயல்பட்ட இராணுவப் பிரிவுகள், 2010 மற்றும் 2011 க்கு இடையான ஒரு வருட காலத்தில் 1.25 பில்லியனுக்கும் அதிகமான மியான்மர் கியாட் (208 மில்லியன் டாலர்) ஈவுத்தொகையாக பெற்றுள்ளது.
கசிந்த ஆவணங்கள் மற்றும் பங்குதாரர் அறிக்கைகளை, மியான்மர் மக்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காக பிரச்சாரம் செய்யும் செயல்பாட்டுக் குழுவான Justice for Myanmar அமைப்பு தமக்கு வழங்கியதாக அம்னஸ்டி இன்டர்நெஷனல் கூறுகிறது .
மியான்மரின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் Justice for Myanmar வெளியிட்டுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்களைத் தடுத்து, இவ் வலைத்தளம் “போலி செய்திகளை” பரப்புவதாகக் கூறி வருகிறது.