இந்தோ-பசிபிக் மற்றும் அதற்கு அப்பால் சீனாவின் விரிவாக்க நடத்தைக்கு மத்தியில், ஜப்பானுடன் இந்தியா ஒரு பரஸ்பர தளவாட ஆதரவு ஏற்பாட்டில் (Mutual logistics support arrangement – MLSA) கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் மற்றும் ஜப்பானிய தூதர் சுசுகி சடோஷி ஆகியோர் கையெழுத்திட்டதாக பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவு¸ இயங்குதன்மை¸ மற்றும் இராணுவ வசதிகளைப் பயன்படுத்துவதற்கான ஓர் கட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் வழியமைத்துக் கொடுக்கிறது என்று அந்த அதிகாரி கூறினார்.
“இந்த ஒப்பந்தம் இருதரப்பு பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, இந்தியா மற்றும் ஜப்பானின் ஆயுதப்படைகளுக்கு இடையில் நெருக்கமான ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை நிறுவுகிறது” என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா, பிரான்ஸ், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இதே போன்ற ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் இணைக்கப்பட்ட லாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்சேஞ்ச் மெமோராண்டம் ஒப்பந்தம் (The Logistics Exchange Memorandum of Agreement – LEMOA) இந்தியாவுக்கு எரிபொருள் நிரப்பும் வசதிகளையும், ஜிபூட்டி( Djibouti), டியாகோ கார்சியா(Diego Garcia), குவாம்(Guam) மற்றும் சுபிக் பே(Subic Bay) ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க தளங்களை அணுகும் வசதிகளையும் வழங்குகிறது.
2018 ஆம் ஆண்டில் பிரான்சுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மடகாஸ்கருக்கு அருகிலுள்ள ரீயூனியன் தீவுகளிலும், ஆப்பிரிக்காவின் கொம்பில் உள்ள ஜிபூட்டியிலும் உள்ள பிரெஞ்சு தளங்களை அடைய இந்திய கடற்படைக்கு வழி அமைக்கிறது.
ஆஸ்திரேலியாவுடனான MLSA, தெற்கு இந்து சமுத்திர பிராந்தியம் (Indian Ocean Region – IOR) மற்றும் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் இந்திய போர்க்கப்பல்ககள் சென்றடைய உதவுகிறது.
ஆகஸ்ட் 2017 இல் ஜிபூட்டியில் அதன் முதல் வெளிநாட்டு இராணுவத் தளம் செயல்பாட்டுக்கு வந்தபின், இந்து சமுத்திர பிராந்தியத்தில், சீனா தனது மூலோபாய தடத்தை வேகமாக விரிவுபடுத்த்தியதன் பின்னணியில் இந்தியாவுக்கு இந்த ஒப்பந்தங்கள் முக்கியமானவை.
தற்போது சீனா, அதன் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களுக்கான வசதிகளைப் பெற பாகிஸ்தானில் உள்ள கராச்சி மற்றும் குவாடர் துறைமுகங்களையும் சென்றடைய முடியும். இந்தோ-பசிபிக் பகுதியில் தனது இருப்பை மேலும் உறுதிப்படுத்த கம்போடியா, வனடு மற்றும் பிற நாடுகளில் உள்ள இராணுவ தளங்களையும் நோக்காக கொண்டு முயற்ச்சித்து வருகின்றது
சீனாவின் ஆறு முதல் எட்டு போர்க்கப்பல்கள் இந்தியாவுக்கு அருகாமையில் எந்த நேரத்திலும் தயார் நிலையில் உள்ளன. நீண்ட தூர அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் முதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கிகள் வரை தனது கடற்படைகளை மும்முறமாக நவீனமயமாக்கும் சீனா, கடந்த ஆறு ஆண்டுகளில் 80 க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை நிலைப்படுத்தியும் வருகிறது.