கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிக்கும், கிரேக்கத்துக்கும் இடையான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், அங்காராவால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட துருக்கிய குடியரசான வடக்கு சைப்பரஸில் துருக்கிய இராணுவம் தமது வருடாந்த ஆயுதப்படை பயிற்சிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கிரேக்கத்தால் உரிமை கோரப்படும் கடல்ப்பகுதியில் துருக்கியின் எரிவாயு மற்றும் மசகு எண்ணெய் இருப்புக்களை வேட்டையாடும் முயற்சியானது, இரு நேட்டோ உறுப்பினர்களுக்கும் இடையிலான உறவில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையான பதட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், துருக்கிய இராணுவம், துருக்கிய சிப்ரியாட் பாதுகாப்பு கட்டளையுடன் “மத்திய தரைக்கடல் புயல்” என்று அழைக்கப்படும் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளது என்று துருக்கியின் துணைத் தலைவர் ஃபுவாட் ஒக்டே ட்விட்டரில் பதிவில் தெரிவித்தார்.
மேலும் “கிழக்கு மத்தியதரைக் கடலில் இராஜதந்திர தீர்வுகளுடன், தமது நாட்டினதும் துருக்கிய குடியரசான வடக்கு சைப்ரஸினதும் TRNC [Turkish Republic of Northern Cyprus] பாதுகாப்பு முன்னுரிமைகள் இன்றியமையாதவை” என்று ஒக்டே கூறினார். சைப்ரஸ் நாடானது, தெற்கு சைப்பரஸ் கிரேக்க சிப்ரியாட்டினால் வழிநடாத்தப்படும் ஒரு ஐரோப்பிய நாடாகவும் வடக்கு சைப்பரஸ் துருக்கிய சிப்ரியாட்டினால் வழிநடாத்தப்படும் ஒரு நாடாகவும் இரண்டாக பிளவுபட்டுள்ளது.
சைப்ரஸ் தீவில் கிரேக்க இராணுவ ஆட்சியாளர்களால் வடிவமைக்கப்பட்ட சதித்திட்டத்தைத் தொடர்ந்து, 1974 ஆம் ஆண்டு துருக்கி சைப்ரஸ் மீது படையெடுத்தது. அன்று முதல் துருக்கி தமது பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை தீவின் வடக்கில் நிறுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்துகானும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மைக்கேலும் கிழக்கு மத்தியதரைக் கடலின் முன்னேற்றங்கள் குறித்து தொலைபேசியில் கலந்துரையாடினர்.
துருக்கிய தலைவர் “ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களையும், அதன் உறுப்பு நாடுகளையும் குறிக்கோள்களுடனும், நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும், பிராந்திய பிரச்சினைகளில், குறிப்பாக கிழக்கு மத்தியதரைக் கடலில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்றும் அழைப்பு விடுத்ததாக ஜனாதிபதி அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பதட்டங்களைத் தணிக்க ஒரு மாநாட்டை முன்மொழிந்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மைக்கேல் செப்டம்பர் 24-25 தேதிகளில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் துருக்கியை சந்திக்கும் போது “கேரட் மற்றும் ஸ்டிக்” (வெகுமதியும் தண்டனையும்) என்ற அணுகுமுறையின் அடிப்படையிலேயே முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று கூறினார்.
இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை இஸ்தான்புல்லில் லிபிய பிரதமர் ஃபயஸ் அல்-சர்ராஜை சந்தித்த எர்துகான் மத்தியதரைக் கடலில் ஏற்பட்டிருக்கும் பதட்டங்கள் குறித்தும் இதர பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினார்.
நவம்பர் 2019 இல் அங்காராவும், திரிப்போலியும் கிழக்கு மத்தியதரைக் கடலில் தங்கள் கடல் எல்லைகளை உள்ளடக்கிய ஒர் ஒப்பந்தத்தில் கைசாத்திட்டன.
துருக்கி ஆகஸ்ட் 10 அன்று கிரேக்கத்திற்கும், சைப்ரஸுக்கும் இடையிலான நீர் பகுதியில் இராணுவ ஆதரவுடன் ஹைட்ரோகார்பன் ஆய்வு முயற்சியில் இறங்கியது. இது கிழக்கு மத்தியதரைக் கடலின் மூலோபாய பாதையில் பதட்டங்களைத் தூண்ட மூல காரணமாக அமைந்தது.
இதற்கு பதிலளிக்கும் முகமாக கிரீஸ் தனது கடல் எல்லையை பாதுகாக்க, பிரெஞ்சு போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுடன் இணைந்து கடற்படை பயிற்சிகளில் ஈடுபட்டது.
எர்துகானின் கீழ் துருக்கி மிகவும் ஆக்ரோஷமான தேசியவாத கொள்கைகளை பின்பற்றுவதால் நேட்டோ உறுப்பினர்களுக்கிடையேயான சர்ச்சை, இப்பகுதியில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர தலைவர் ஜோசப் பொரல் தனது கடுமையான பதிலளிப்பாக அங்காராவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை ஏற்படுவதற்கான வாய்ப்பை எழுப்பியுள்ளார். ஆனால் பாரிஸ் இதுவரையில் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அதனுடன் இணைத்துக்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.