சூடானின் இடைக்கால அரசாங்கம் வட ஆபிரிக்க தேசத்தில் 30 ஆண்டுகால (பெயரளவிலான) இஸ்லாமிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு, மதத்தை அரசிலிருந்து பிரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
சூடான் பிரதம மந்திரி அப்தல்லா ஹம்தோக் மற்றும் வடக்கு கிளர்ச்சிக் குழுவான சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவரான அப்தெல்-அஜீஸ் அல்-ஹிலு ஆகியோர் வியாழக்கிழமை எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இந்த மதச்சார்பின்மை (Secularism) என்ற அடிப்படையை ஒப்புக்கொண்டனர்.
“சூடான் அனைத்து குடிமக்களின் உரிமைகளும் பொதிந்துள்ள ஒரு ஜனநாயக நாடாக மாற, அரசியலமைப்பு ‘மதத்தையும் அரசையும் பிரித்தல்’ என்ற கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும்.” என்று அவர்களின் ஒப்பந்தம் மேலும் கூறுகிறது.
வெளியேற்றப்பட்ட சர்வாதிகாரி ஒமர் அல்-பஷீரின் கீழ் டார்பூர் மற்றும் சூடானின் பிற பகுதிகளை அழித்த சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நம்பிக்கையை எழுப்பிய கிளர்ச்சிப் படைகளுடன் அரசாங்கம் ஒரு சமாதான ஒப்பந்தத்தை ஆரம்பித்த ஒரு வாரத்திற்குள் இந்த ஒப்பந்தம் வந்துள்ளது. நாட்டின் எல்லை மாநிலங்களில் சூடான் துருப்புக்களுடன் போராடிய வடக்கிலுள்ள இரண்டு பிரிவுகளில் பெரிய, சூடான் மக்கள் விடுதலை இயக்கம், மதச்சார்பற்ற அமைப்பை உறுதிப்படுத்தாத எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட மறுத்துவிட்டது.
1989 ல் பஷீர் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் தொடங்கிய சர்வதேச தனிமைப்படுத்தலில் இருந்து சூடான் மேல் எழுந்து வருகிறது. மேலும் மேற்குலகின் பார்வையில் இஸ்லாமிய சட்டத்தின் கடுமையான விளக்கத்தை நடைமுறைப்படுத்திய சூடான் தனது நாட்டை “இஸ்லாமிய உலகின் காப்பரணாக” மாற்ற முயன்றதாகக் கூறப்பட்டது. அல்-கொய்தா மற்றும் கார்லோஸ் தி ஜாக்கல் ஆகியோர் அங்கு தஞ்சமடைந்தனர். அமெரிக்கா 1993 ல் சூடானை ஒரு பயங்கரவாத ஆதரவாளராக பறைசாட்டியதுடன் பின்னர் 2017 வரை பொருளாதாரத் தடைகளை விதித்தது.