மக்காவின் உயர் இமாமும், உலகப் பிரசித்தம் பெற்ற அல்குர்ஆன் காரியுமான ஷேய்க் அப்துர் ரஹ்மான் அல் சுதைஸின் ஜூம்ஆ பிரசங்கம் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ஆவரது உரையில் அவர் தெரிவித்த சில கருத்துக்கள் சவூதி அரேபியாவையும், ஏனைய முஸ்லிம் நாடுகளையும் சியோனிச யூத அலகான இஸ்ரேலுடன் தமது உறவுகளை இயல்பாக்கம் செய்வதை சிபாரிசு செய்வது போன்று அமைந்துள்ளதாக சிலர் வியாக்கியானம் செய்கின்றனர்.
சேக் சுதைஸின் குறித்த குத்பா உரை முஸ்லிம் அல்லாதவர்களுடன் முஸ்லிம்கள் எவ்வாறு கண்ணியமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற கருப்பொருளை மையப்படுத்தி அமைந்திருந்தது.
அக்கருப்பொருளை அவர் விபரிக்கும்போது குறிப்பாக யூதர்களுடன் இறைதூதர்(ஸல்) அவர்கள் வைத்துக்கொண்ட உறவுகளை உதாரணங்களாக இச்சந்தர்ப்பத்தில் அவர் மேற்கோள் காட்டியதை இஸ்ரேல்-அரபு இயல்பாக்கல் முயற்சிக்கான வரவேற்புப் சமிக்ஞையாக விமர்சகர்கள் சித்தரித்துக் காட்டுகின்றனர்.
உதாரணத்துக்கு அவரது உரையில் அவர், “நபி இறந்தபோது தனது கேடயத்தை ஒரு யூதரிடம் அடமானம் வைத்திருந்தார்; அவர் கைபர் யூதர்களின் நிலத்திலிருந்து அறுவடையை இரண்டாகப் பகிர்ந்து கொண்டார்; அவர் தனது யூத அயலவருக்கு காட்டிய சிறப்பானது பின்னாட்களில் அவர்களை இஸ்லாத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது” என்று மேற்கோள் காட்டியிருந்தார்.
இமாம் சுதைஸின் இந்த உரை 1979 இல் எகிப்தும், 1994 இல் ஜோர்தானும் இஸ்ரேலுடன் தமது உறவை இயல்பாக்கம் செய்ததற்கு பின்னால் நீண்ட இடைவெளிக்குப் பின்பு அண்மையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இஸ்ரேலுடன் தமது உறவையும் இயல்பாக்கம் செய்து முஸ்லிம் உலகில் பலத்த விமர்சனத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் ஆற்றப்பட்டிருக்கின்றது.
ஆமெரிக்காவின் டீல் ஒஃப் த செஞ்சரி நிகழ்சித்திட்டத்தின் கீழ் இடம்பெற்று வருகின்ற இந்த இயல்பாக்கல் பேரத்தை பலஸ்தீனத்தின் அனைத்து தரப்பினர்களும் ஏகொபித்து (இது மிக அரிதாகவே இடம்பெறுவது வழக்கம்) நின்று நிராகரித்து இருக்கின்றனர். இந்த இயல்பாக்கல் திட்டத்திற்கு உபகாரமாக மேற்குக்கரையின் கணிசமான பகுதிகளை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் திட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் அந்த இலக்கை அது முற்றாக கைவிடவில்லை.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையில் உருவாகியிருக்கும் இயல்பாக்க நிலையை தொடர்ந்து, ஏனைய வளைகுடா நாடுகளும் அது குறித்து சிந்தித்துவரும் வேளையில் அதற்கு ஆதரவு தெரிவிப்பதைத் தொணிக்கின்ற சேக் சுதைஸின் கருத்துகளுக்கு சமூக ஊடகங்களில் பலரும் கோபத்துடன் பதிவிட்டு வருகின்றார்கள். இஸ்லாம் அனுமதிக்காத இந்த தீய உடன்பாட்டுக்கு மக்களை மதிமயக்க நினைக்கும் அவரது செயற்பாட்டை அமெரிக்க சார்பு சவூதி மன்னருக்கான செஞ்சோற்றுக்கடனாக அவர் நிறைவேற்றியுள்ளதாக பலரும் விசனம் கொண்டுள்ளனர்.
எகிப்தை சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் முஹம்மத் அல் சகீர், சேக் சுதைஸின் செயற்பாட்டை நயவஞ்சகத்தனமானது என்று விமர்சித்துள்ளார். மேலும் அவர் தனது டிவிட்டர் பதிவில் “இயல்பாக்கல் நடவடிக்கைக்கான வழியை அமைப்பதையும், துரோகத்தனத்தையும் மக்காவின் பிரசங்க மேடையிலிருந்து அவர் செய்துள்ளார்” என்று கடுமையான வார்த்தைகளால் தனது எதிர்ப்பைக் காட்டியுள்ளார்.
மோரித்தானியாவைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான அல் ஷிங்கீதி, சுதைஸ் அதியுயர் புனிதத்தலமான மக்கா மஸ்ஜிதின் மேடையை இஸ்ரேலுடனான இயல்பாக்கலை ஊக்குவிப்பதற்காக தவறாகப் பாவித்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.