இமயமலைப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் மோதல் தொடங்கியதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையிலான முதலாவது உயர் மட்ட தொடர்பு இதுவாகும்.
கிழக்கு லடாக் பிராந்தியத்தில் தங்களது சர்ச்சைக்குரிய எல்லையில் அதிகரித்து வரும் பதட்டங்களைத் தீர்க்க இரண்டு ஆசிய அணுசக்தி ஜம்பவான்கள் முயற்சிக்கின்றனர். இதற்காக இந்தியா மற்றும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்கள் ரஷ்ய தலைநகரில் சந்தித்துள்ளனர். இந்தியாவின் ராஜ்நாத் சிங் மற்றும் சீனாவின் ஜெனரல் வெய் ஃபெங்கே ஆகியோருக்கு இடையிலான இந்த சந்திப்பு குறித்த முழுமையான விவரங்களை இரு தரப்பினரும் தெரிவிக்கவில்லை.
இமயமலைப் பகுதியில் சில மாதங்களாக தொடர்ந்த முறுகல் நிலையினால் கடந்த ஜூன் மாதம் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா, இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் அந்நாடுகளின் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் சந்தித்த தருணத்தில் சமாந்திரமாக சீன-இந்திய பாதுகாப்பு அமைச்சர்கள் சந்தித்துள்ளனர்.
“பிராந்தியத்தில் அமைதியும் பாதுகாப்பும் ஏற்பட,நம்பிக்கையான சூழல், அத்துமீறலற்ற நிலை, வேறுபாடுகளை அமைதியான முறையில் தீர்ப்பக்கும் நிலை மற்றும் சர்வதேச விதிகளுக்கு மதிப்பளித்தல் என்பன அவசியமாகும்” என்று சிங் கூட்டத்தில் கூறினார்.
மேலதிக விவரங்களை வழங்காமல் கூட்டம் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்ததாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது.
இரு நாடுகளும் நிலைமையை “தணிக்க வேண்டும்” என்றும் “சமாதானத்தையும், அமைதியையும் பேண வேண்டும்” என்று சீன பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பதற்றத்திற்கான பொறுப்பு “முற்றிலும் இந்தியாவைச் சார்ந்தது” என்றும், “ஒரு அங்குல சீன நிலப்பரப்பை கூட எம்மால் இழக்க முடியாது” என்றும் சீன அமைச்சகம் மேலும் கூறுகிறது.
அமெரிக்கா ‘மூக்கை நுழைக்க தயாராக உள்ளது’
இதற்கிடையில், இந்தியா-சீனா பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவ, தனது நாடு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
டிரம்ப் செய்தியாளர்களிடம் நிலைமை “மிகவும் மோசமானது” என்றும், இரு நாடுகளும் “நிறைய பேர் புரிந்துகொள்வதை விட மிகவும் வலுவாக ஒருவரை நோக்கி ஒருவர் பொருதுகின்றனர்” என்றும் கூறினார்.
சீனாவும் இந்தியாவும் போரில் ஈடுபடுவார்கள் என்ற நிலைக்கு, சர்ச்சையைத் தள்ளுவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதே அமெரிக்காவின் மதிப்பீடாகும் என்று வாஷிங்டனில் உள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் ஒரு அமெரிக்க அரசாங்க வட்டாரம் கூறியிருக்கிறது.
வெள்ளை மாளிகையில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இந்த சர்ச்சை குறித்து கேட்டபோது அதற்கு டிரம்ப், நிலைமையைத் தணிக்க என்ன செய்ய முடியும் என்பது குறித்து இரு நாடுகளுடனும் வாஷிங்டன் பேசுகிறது என்றார்.
“சீனா மற்றும் இந்தியாவைப் பொறுத்தவரை நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம். எங்களால் எதையும் செய்ய முடிந்தால், அதில் ஈடுபடவும் உதவவும் நாங்கள் விருப்பத்துடன் இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
கடந்த காலங்களில் இரு அணு ஆயுத நாடுகளுக்கிடையில் மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் முன்வந்தார். ஆனால் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சீனா அதற்கு பதிலளித்தது. இந்தியாவும் இந்த கருத்துக்கு மாற்றமாக எதுவும் தெரிவிக்கவில்லை.