2015 இல் ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு அடிப்படைக் காரணமாய் அமைந்திருந்த அதே கேளிச்சித்திரத்தை பிரான்சின் இஸ்லாமிய விரோத சஞ்சிகையான சார்லி ஹெப்டோ தற்போது மீண்டும் அவமதிக்கும் வகையில் வெளியிட்டுள்ளது.
ஜனவரி 7, 2015 இல் இடம்பெற்ற இரு துப்பாக்கி தாக்குதலுடன் தொடர்புபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 சந்தேக நபர்களினுடைய வழக்கு விசாரணைக்கு வருவதால் இந்த ஆத்திரமூட்டும் செயலை மீண்டும் இச் சஞ்சிகை அரங்கேற்றியிருக்கிறது. இந்த தாக்குதல்களின் போது முதலில் 12 பேர் கொல்லப்பட்டதோடு, மேலும் ஐவர் சில நாட்கள் கழித்து இதனுடன் தொடர்புபட்ட பிரிதொரு தாக்குதலில் உயிரிழந்தனர்.
இச் சஞ்சிகையின் தற்போதைய பதிப்பின் முன்பக்கத்தில் நபிகள் நாயகத்தை இழிவு படுத்தும் வகையில் 12 கார்ட்டூன் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. இவை ஏற்கனவே டென்மார்கை சேர்ந்த ஒரு செய்திச் சஞ்சிகையில் இடம்பெற்ற பிரசுரிப்பின் மறுபதிப்பாகும். இக் கேளிச் சித்திரங்களில் ஒன்று நபி (ஸல்) அவர்களின் தலைப்பாகைக்கு பதிலாக வெடிகுண்டு ஒன்றை அணிந்திருப்பது போல் சித்தரித்து காட்டுகிறது.
தற்போதைய வெளியீடு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் “2015 ஜனவரியில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் மீதான வழக்கு விசாரணைக்கு வருகின்றமையால் இந்த கார்ட்டூன்களை சித்திரங்களை மறுபடியும் வெளியிடுவது அவசியமானது” என்று சார்லி ஹெப்டோ தெரிவிக்கிறது.
இந்த வழக்கு மார்ச் மாதத்தில் தொடங்கவிருந்தது; ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒத்திவைப்பு நவம்பர் வரை நீடிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
பல ஆண்டுகளாக சார்லி ஹெப்டோ சஞ்சிகை பல சகிக்க முடியாத இனவெறி மற்றும் இஸ்லாமியவிரோத கார்ட்டூன் சித்திரங்களை வெளியிட்டுள்ளனர். இதற்கு ஒரு சிறந்த உதாரணம், 2016 ஆம் ஆண்டில் நீரில் மூழ்கிய சிரியா நாட்டுக் குழந்தையான அய்லான் குர்தி பாலியல் துஷ்பிரயோகக்காரராக வளர்ந்து வரக்கூடும் என்ற ஒரு கேளிச்சித்திரத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.