ஜெருசலம் மற்றும் பாலஸ்தீனிய பிரதேசங்களின் பிரதான முஃப்தி, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் அல் அக்ஸா மசூதிக்கு வருவதை தடைசெய்து ஒரு ஃபத்வாவை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரகம்-இஸ்ரேல் சமாதான உடன்படிக்கையை மேற்கோள் காட்டி முஃப்தி முஹம்மது ஹுசைன் வெளியிட்ட ஃபத்வாவில், “இஸ்ரேலிய ஆக்கிரமிப்புடன் தங்களது உறவை இயல்பாக்கம் செய்தவர்களுக்கு அல்-அக்ஸா மசூதியில் தொழுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
அல்-அக்ஸா மசூதியைப் பார்வையிட விரும்பும் எவரும் பாலஸ்தீனிய ஆணையம் அல்லது ஜோர்டானிய அரசாங்கத்தின் வழியாகவே செல்ல வேண்டும்; டெல் அவிவின் பென் குரியன் விமான நிலையம் வழியாக அல்ல என்றும் முஃப்தி கூறினார்.
மேலும் “அல்-அக்ஸா மசூதியில் தொழுகை மேற்கொள்வதற்கு முறையான பாலஸ்தீன வாயிலினூடாக அல்லது அல்-குத்ஸ் அல்-ஷெரீப் இஸ்லாமிய புனித தளத்தின் பாதுகாவலரான ஜோர்டானிய அரசாங்கத்தின் மூலமாக வரும் எவருக்கும் வழி திறந்திருக்கும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்” என்றும் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில் “அல்-அக்ஸாவில் தொழுகை மேற்கொள்வதற்கான அனுமதி, தீய, டீல் ஒஃப் த செஞ்சரி திட்டத்தை கையாள்வதற்கான வழிமுறையாக, உறவுகளை இயல்பாக்கியவர்களுக்கு கிடையாது; மேலும் இந்த உறவுகளில் ஏற்பட்டுள்ள இயல்பாக்கம் என்பது டீல் ஒஃப் த செஞ்சரி ஒப்பந்தத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்; எனவே அதன் மூலம் வந்த அனைத்தும் தடைசெய்யப்பட்டவை; டீல் ஒஃப் த செஞ்சரி, ஜெருசலத்தை (சியோனிச) நிறுவனத்தின் தலைநகரமாக கருதுகிறது. இது ஜெருசலத்தை சட்டப்படி கைவிடுவதைக் குறிக்கிறது; இது செல்லுபடியற்றதும், தடைசெய்யப்பட்டதுமாகும். புனிதமிக்க அல்-அக்ஸா மசூதி முஸ்லிம்களுக்கு மட்டுமே; மேலும் அதன் அருகிலிருந்தோ அல்லது தூரத்திலிருந்தோ ஒரு தானியத்தின் அளவு மண்ணைக் கூட விட்டுக்கொடுக்க யாருக்கும் அனுமதி கிடையாது” என்று கூறினார்.
முஃப்தியின் அறிக்கை பாலஸ்தீனிய நிலத்தினதும், ஜெருசலத்தினதும், புனிதமிக்க அல்-அக்ஸா மசூதியினதும் ஆக்கிரமிப்பை அங்கீகரிக்க முடியாது என்பதையும், “எங்கள் நிலத்தையும், மக்களையும், ஜெருசலத்தை கைப்பற்றிய” ஆக்கிரமிப்புக்காரர்களுடன், உறவுகளை இயல்பாக்குவதைத் முஸ்லீம்கள் தவிர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
பாலஸ்தீனிய நிலத்திற்கான எவரினது விஜயமும், அதன் அரபு மற்றும் இஸ்லாமிய அடையாளத்தை உறுதிப்படுத்தியும், ஆக்கிரமிப்பை நிராகரித்தும், அதன் விடுதலையை ஆதரித்தும் மேற்கொள்ளப்படும் ஒரு செயலாக இருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேற்குக் கரையை மேலும் இணைப்பதில் இருந்து இஸ்ரேலைத் தடுத்துள்ளதாகக் கூறி , இஸ்ரேலுடனான சமாதான ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகம் நியாயப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த கூற்றுக்களை பாலஸ்தீனியர்கள் முற்றாக நிராகரித்துள்ளனர்.
இதற்கிடையில் தமக்கிடையிலான உறவுகளின் இயல்பாக்கத்தைத் தொடர்ந்து அமீரக மக்கள் உலகின் மூன்றாவது புனிதத் தளமான மஸ்ஜித் அல் அக்ஸாவில் தொழுவது உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர சுற்றுலாத்துறை ஆரம்பிக்கும் என்று அபுதாபி கூறி வருகிறது.