அண்மையில் காஷ்மீர் பிரச்சினையில் சவுதி தலைமையிலான முஸ்லீம் தரப்பான ஓ.ஐ.சி (OIC) இன் செயலற்ற தன்மையை பாகிஸ்தான் விமர்சித்ததைத் தொடர்ந்து இரு தரப்பு உறவு அச்சுறுத்தலுக்கு உள்ளானது. எனினும் ஏற்பட்ட இந்த இராஜதந்திர இடைவெளியை தவிர்ப்பதற்காக இந்த வாரம் சவுதி அரேபியாவுடனான தனது உறவின் வலிமையை பாகிஸ்தான் மீண்டும் உறுதிப்படுத்த முயற்சித்துள்ளது.
காஷ்மீர் பிரச்சினை குறித்த சவூதி அரேபியா தலைமையிலான 57 முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளின் கூட்டமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓஐசி) செயலற்ற நிலைப்பாடு தொடர்பாக இந்த மாதத் தொடக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒரு முக்கிய கொள்கைப் பிரச்சினையை எழுப்பினார். நிலைமை அவ்வாறே தொடருமானால் தான் அந்தக்கூட்டமைப்பை தவிர்த்து வேறொரு கூட்டத்தை கூட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்தார்.
ஆகஸ்ட் 4 ம் தேதி தொலைக்காட்சி செய்தி ஒன்றில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி இது பற்றி கூறுகையில், “வெளியுறவு அமைச்சர்களுக்கான கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு என்று நான் மீண்டும் மரியாதைக்குரிய வகையில் OICக்கு கூறுகிறேன்.” என்றார்
“நீங்கள் அதைக் கூட்ட முடியாவிட்டால், காஷ்மீர் பிரச்சினையில் எங்களுடன் நின்று ஒடுக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கும், இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்தை கூட்டுமாறு நான் பிரதமர் இம்ரான் கானைக் கோருவதற்கு நிர்பந்திக்கப்படுவேன்.” என்றும் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய கட்டுப்பாட்டு காஷ்மீரை அதன் சிறப்பு அந்தஸ்தில் இருந்து நீக்க புது தில்லி முடிவு செய்ததைத் தொடர்ந்து அதற்கு எதிராக பாகிஸ்தான் சர்வதேச ஆதரவைப் பெற முயற்சிக்கிறது.
இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த நிலைப்பாடு முஸ்லீம் உலகின் தலைமையின் மீது சவுதி அரேபிய கொண்டுள்ள மேலாதிக்கத்தை சவால் விடுப்பதாகவும், சவுதியின் வெளியுறவுக் கொள்கை மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்தது என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தானின் இந்த நகர்வு “அசாதாரணமானது மற்றும் முன்னோடியில்லாதது” என்று யுனைடெட் ஸ்டேட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பீஸ் (யுஎஸ்ஐபி) இன் மூத்த உறுப்பினரும் பாகிஸ்தான் பத்திரிகையாளருமான சிரில் அல்மேடா கூறுகிறார். “பாகிஸ்தான்-சவுதி உறவில் இதற்கு முன்பு யாரும் இந்நிலையைப் பார்த்ததில்லை.”
இதற்கு பதிலளிக்கும் விதமாக, சவூதி அரேபியா 2018 நவம்பரில் பாகிஸ்தானுக்கு வழங்கிய 1 பில்லியன் டாலர் வட்டி இல்லாத கடனை வாபஸ் பெற்றது. அப்போது பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தது. இறையாண்மை இயல்புநிலையைத் தவிர்க்க வெளிநாட்டு இருப்புக்கள் அதற்கு தேவைப்பட்ட நிலையிலேயே இந்த கடனுதவியை சவுதி பாகிஸ்தானுக்கு வழங்கி இருந்தது.
மேலும் பாக்கிஸ்தானின் இறக்குமதி மசோதாவை எளிதாக்க உதவும் நோக்கில், அதே உதவியின் ஒரு பகுதியாக இருந்த ஒத்திவைக்கப்பட்ட எண்ணெய் கொடுப்பனவு திட்டத்தை புதுப்பிக்கவும் தற்போது சவுதி இராச்சியம் மறுத்து வருகிறது.
ஆகஸ்ட் 17 ம் தேதி, பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டார். இப்பயணத்தின் உள்நோக்கத்தை குறைத்துக் காட்டுவதற்காக அது குறித்து கருத்துத் தெரிவித்த இராணுவ செய்தித் தொடர்பாளர் இதுவோர் “வழக்கமான” மற்றும் “இராணுவங்களுக்கு இடையிலான “ விஷயங்களைக் கையாள்வதற்கான சந்திப்பு என குறிப்பிட்டார்.
அதிலிருந்து இந்த நெருக்கடி நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டமையை காணக்கூடியதாக இருந்தது.
சில நாட்களுக்குப் பிறகு, பாக்கிஸ்தானின் வெளியுறவு அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது; அந்த அறிக்கை காஷ்மீர் விவகாரம் மீதான OIC இன் பங்களிப்பைப் பாராட்டியது, அதைத் தொடர்ந்து திங்களன்று, வெளியுறவு மந்திரி குரேஷி பிளவுக்கு காரணமான கருத்துக்களை திரும்பிப் பெறும் வண்ணம் பேசலானார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் தொடர்பாக பல தீர்மானங்களை ஓ.ஐ.சி நிறைவேற்றியுள்ளது. “அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்; அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்; அவர்கள் பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு ஏற்பவே இருக்கிறார்கள்” என்று கூறினார்.
“நான் இன்று உங்களிடம் காஷ்மீர் பிரச்சினையில், சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தானுடன் கருத்து வேறுபாடு இல்லை என்று தெளிவாகக் கூற முடியும்” என்றார்.
வரலாற்று பின்னணியும், அண்மிய நெருக்கடி நிலைப்பாடுகளும்?
‘கதாபாத்திரத்திற்கு வெளியே’
பாக்கிஸ்தானும், சவுதி அரேபியாவும் வரலாற்று ரீதியாக மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள நாடுகளாகும். பாக்கிஸ்தான் சவுதியின் எண்ணெய் விநியோகத்திலும், பொருளாதார நெருக்கடியான காலங்களில் அதன் நிதி மற்றும் கடன் உதவிகளிலும் அதிகம் தங்கியுள்ளது.
கடந்த ஆண்டு, இரு நாடுகளின் வர்த்தக உறவு மொத்தமாக சுமார் 1.7 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்தது. பாகிஸ்தான் மத்திய வங்கி தரவுகளின்படி, அதில் 74 சதவீதம் பாகிஸ்தானின் சவூதி அரேபிய எண்ணெய் இறக்குமதியுடன் சம்பந்தப்பட்டது. மொத்தத்தில், பாகிஸ்தான் அதன் எண்ணெயில் கால் பகுதியை சவூதி அரேபியாவிலிருந்துதான் இறக்குமதி செய்கிறது.
சவூதி அரேபியாவில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான பாக்கிஸ்தானிய தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பாக்கிஸ்தானுக்கு மிகப்பெரிய அந்நியச் செலாவணியை அனுப்பி வருகின்றனர். கடந்த மாதம், சவுதி அரேபியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் 821 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை அவ்வாறு அனுப்பியுள்ளனர். அதன் மத்திய வங்கி தகவல்படி, இது மொத்த அந்நியச் செலாவணியில் சுமார் 30 சதவிகிதமாகும்.
மேலும் இரு நாடுகளும் நெருக்கமான இராணுவ உறவுகளைக் கொண்டுள்ளன. பாகிஸ்தான் சவுதியின் வேண்டுகோளின் பேரில் அதன் துருப்புக்களுக்கு பயிற்சி அளித்துவரும் ஒரு முக்கிய நாடாகும்.
“பாகிஸ்தானுடனான இராணுவ கூட்டு சவுதி அரேபியாவுக்கு முக்கியமானது” என்கிறார் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷனில் வெளியுறவுக் கொள்கை உறுப்பினரான மதிஹா அப்சல். மேலும் அவர் தெரிவிக்கையில்,
“சனத்தொகை அடிப்படையில் பாகிஸ்தான் உலகின் ஐந்தாவது பெரிய நாடு; அதுவும் பெரும்பான்மை சுன்னி முஸ்லிம் நாடு; எனவே சவுதி அரேபியா அதனை தன் பக்கம் வைத்துக் கொள்ள விரும்புகிறது.” என்றார்.
மேலும் அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான நெருங்கிய உறவுகளைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேஷி தெரிவித்த ஆரம்பக் கருத்துக்கள் “பாகிஸ்தானுக்கு மிகவும் பொருத்தமில்லாதவை” என்றும், OIC ஐத் தவிர்த்து ஒரு கூட்டத்தை கூட்டுவதாகக் கூறிய அச்சுறுத்தல் “முஸ்லீம் உலகில் சவுதி அரேபியாவின் தலைமைத்துவத்தின் நிலைப்பாட்டை நேரடியாக குறைமதிப்பிற்கு உட்படுத்தும்” என்றும் கூறினார்.
அதே நேரத்தில் மாற்று முகாமுக்கான வாய்ப்பு குறித்து பாகிஸ்தான் முன்வைப்பது இது முதல் முறை அல்ல. டிசம்பரில், மலேசியா கோலாலம்பூரில் ஓர் உச்சி மாநாட்டை நடத்தியது. இது OIC க்கு போட்டியாக இருந்தது; இதனை மலேசியா, சவுதியின் போட்டியாளரான துருக்கி மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து தொடங்கியது.
பாகிஸ்தான் பிரதமர் கான், கடைசி நிமிடத்தில் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதிலிருந்து விலகினார். பின்னர் அவர் தெரிவித்த கருத்துக்கள் அவரின் முடிவு அக்குழுவுக்கு சவுதி தெரிவித்த ஆட்சேபனையால் ஏற்பட்டது என்று தெளிவுபடுத்தப்பட்டது.
1947 இல் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து மூன்று முழு அளவிலான போர்களை நடத்திய பாகிஸ்தானின் கிழக்கு அண்டை நாடான இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான உறவுகள் வளர்ந்து வருவதையும் பாகிஸ்தான் ஆட்சேபித்தது.
2019 ஆம் ஆண்டில் இஸ்லாமாபாத்துக்கு விஜயம் செய்தபோது, சவுதியின் மகுடத்துக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் (எம்.பி.எஸ்) தெற்காசிய நாடாக பாகிஸ்தானில் 20 பில்லியன் டாலர் திட்டங்களில் கையெழுத்திட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு விஜயம் செய்த போது, பாகிஸ்தானின் பிராந்திய போட்டியாளரான இந்தியாவிடம் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்ய எதிர்பார்ப்பதாக எம்.பி.எஸ். தெரிவித்தார். மேலும் சவுதி-இந்தியா இருதரப்பு வர்த்தகம் தற்போது 30 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக உள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில், எம்.பி.எஸ் இன் சுய உந்துதலான வெளியுறவுக் கொள்கை ஈரான், துருக்கி மற்றும் கத்தார் போன்ற நாடுகளை மிகுந்த விசனம் அடையச் செய்திருந்தது. இந்த அரசியல் முன்னேற்றங்களுக்கு மத்தியிலேயே பாகிஸ்தானின் நிலைப்பாடுகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது.
பாகிஸ்தானால் அதன் வரலாற்று ரீதியான நேச நாட்டிலிருந்து விலகிச் செல்ல முடியுமா?
பல தசாப்தங்களாக பாகிஸ்தான்-சவுதி உறவுகளைப் படித்த சிங்கப்பூரைச் சேர்ந்த கல்வியாளரும் பத்திரிகையாளருமான ஜேம்ஸ் டோர்சி இது பற்றி கூறுகையில்,
“உண்மையில் இந்த பிரச்சினை முஸ்லீம் உலகில் சவூதியின் தலைமைக்கு சவால் விடுக்கிறது” என்றும் “இதன் ஊடாக துருக்கி, ஈரான், கத்தார் மற்றும் மலேசியா மற்றும் இந்தோனேசியாவுடன் பாகிஸ்தான் இணைகிறது; அதில் மூன்று சவுதி போட்டியாளர்கள்.” என்றும் வியப்பாகத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தற்போதைய நிலைமையில் அந்த முன்னெடுப்பு உடனடியாக சாத்தியப்பட வாய்ப்பில்லை என்றும் டோர்சி மேலும் தெரிவிக்கிறார்.
இதற்கிடையில் “பாகிஸ்தானுக்கு எரிசக்தி வழங்கல், நிதி மற்றும் முதலீடு தேவை. சவுதி எண்ணெய் விநியோகம் சம்பந்தமான பாக்கிஸ்தானின் கோரிக்கைக்கு பதிலளிக்காததால், பாகிஸ்தானுக்கான நிதி மற்றும் எரிசக்தி வழங்கலை சவுதி கேள்விக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது” என்று அவர் கூறுகிறார்.
பாக்கிஸ்தானின் பொருளாதார சிக்கலைப் பொருத்தவரை – கடந்த நிதியாண்டில் அதன் பொருளாதாரம் 0.38 சதவிகிதம் சுருங்கிவிட்டது. கடந்த 60 ஆண்டுகளில் இந்நிலை முதல் தடவையாக ஏற்பட்டுள்ளது.
அப்படியான ஓர் நிலையில் ஏன் இந்த பிணக்குகள்?
அது பற்றி குறிப்பிடும் பத்திரிகையாளர் அல்மெய்டா “இது ஒரு மர்மம்” என்று கூறுகிறார்.
வெளியுறவு மத்திரி குரேஷியின் இந்த வாரம் கருத்துக்களும், முந்தைய வெளியுறவு அலுவலக (எஃப்ஒ) அறிக்கையும், ஏற்கனவே கூறப்பட்ட கருத்துக்களுடன் முற்றிலும் முரண்பட்டு இருக்கின்றன. இந்த புதிய கருத்துக்கள் பதட்டங்கள் அதிகரிப்பதைக் குறைக்கும் என்று கருதப்படுகின்றது.
அல்மெய்டா இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டுச் சொல்கிறார். அண்மைக்காலமாக பாக்கிஸ்தான் தனது பொருளாதார நெருக்கடியின் போது தங்கியிருக்க மற்ற வெளிநாட்டு நட்பு நாடுகளை உருவாக்கியுள்ளது. “நிச்சயமாக பாகிஸ்தானோ அல்லது சவுதியோ தமக்கிடையிலான உறவுகளில் முறிவை விரும்பாது என்றாலும், பாகிஸ்தான் ஒரு காலத்தில் இருந்ததைப் போல சவுதியின் உதவியை மாத்திரம் நம்பியிருக்கவில்லை.”
குறிப்பாக சீனா, அதனுடன் 60 பில்லியன் டாலர் பெறுமதியான சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தை (CPEC) உருவாக்கி வருகிறது – ஆனால் அந்த உறவுகளால் வழங்கப்படும் உதவிகள் முடிவற்றவை அல்ல என்ற எச்சரிக்கையையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தில் பாக்கிஸ்தானின் மையத்தில் இருப்பதால் பாகிஸ்தான் புதிய மூலோபாய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
ஏற்பட்ட பிணக்கால், சவுதி தனது கடனில் ஒரு பகுதியை திரும்பக் கோரிய போது கூட சீனா பாகிஸ்தானுக்கு அவசர நிதியை வழங்கியதாக நம்பப்படுகிறது.
இந்த முன்னேற்றங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷனில் மதிஹா அப்சல், “சவூதி அரேபியா தெளிவான கோட்டை வரைந்து, பாகிஸ்தானை அதன் குறுக்கே பின்னுக்குத் தள்ளியதாகத் தெரிகிறது” என்று கூறுகிறார்.
“காஷ்மீர் தொடர்பான ஓ.ஐ.சி மற்றும் சவுதி அரேபியாவிடமிருந்து பாகிஸ்தானின் எதிர்பார்ப்புகள் இப்போதைக்கு மென்மையாகிவிட்டன; தற்போது இஸ்லாமாபாத்துக்கு யதார்த்தவாதம்தான் முன்னணியில் தெரிகிறது” என்றும், “இது காஷ்மீரின் சுயாட்சி பிரச்சினையில், பாகிஸ்தானின் கைகளை கொஞ்சம் கட்டிப் போட்டிருக்கிறது.” என்றும் அவர் தெரிவிக்கிறார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“இந்த புதிய சூழல் ஓர் நிலைக்கு வரும்போது, இவர்களுக்கு இடையிலானஉறவுகள் விரைவில் அவற்றின் முந்தைய நிலைக்கு திரும்பத் தொடங்கக்கூடும்” என்றும்,“(காஷ்மீர் பிரச்சனையில்) சவுதி அரேபியாவை அது விரும்பாத இடத்துக்கு பாகிஸ்தான் தள்ளாதவரை இரு நாடுகளும் இந்த பிணக்குகளைக் கடந்து செல்ல முடியும்.” என்றும் தெரிவிக்கிறார்.