இலங்கை ஒரு நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்ற விரும்புகிறது. ஆயினும் இந்தியாவின் மூலோபாய மற்றும் பாதுகாப்பு நலன்களை பாதுகாக்கும் வகையில் “இந்தியாவுக்கே முதலிடம்’’ என்ற அணுகுமுறை கொள்கையை பின்பற்றுவதாக புதிய வெளியுறவு செயலாளர் அட்மிரால் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை பற்றிக் குறிப்பிடுகையில் ‘‘மூலோபாய பாதுகாப்பைப் பொறுத்தவரை, நாங்கள் இந்தியாவுக்கே முதலிடம் என்ற அணுகுமுறையை பின்தொடர்வோம். நாம் இந்தியாவுக்கு ஓர் மூலோபாய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்க முடியாது. நாம் அவ்வாறிருக்க அவசியமில்லை. நாம் இந்தியாவிலிருந்து பயனடைய வேண்டும். பாதுகாப்பைப் பொருத்தவரை இந்தியாவிற்கே முன்னுரிமை. ஆனால் பொருளாதார செழிப்புக்காக நான் மற்ற நாடுகளுடன் நடுநிலையான உறவில் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்’’ என்று ஜெயநாத் கொலம்பகே கூறினார்.
மேலும் கூறுகையில் ‘‘ஹம்பந்தொட்ட துறைமுகத்தை ஆரம்பத்தில் இந்தியாவுக்கு வழங்க முன்மொழிந்தோம். எதோ காரணத்திற்காக இந்தியா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் அது ஒரு சீன நிறுவனத்திற்குச் சென்றது. இப்போது அந்த துறைமுகத்தின் 85 சதவீத பங்குகளை சீனா மெர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளோம். அது வணிக நடவடிக்கைகளுக்கு மாத்திரமே. இங்கு இராணுவ நோக்கங்கள் பூஜ்ஜியமாகும். இலங்கையை வாங்க முடியாது; வேறு எந்த நாட்டிற்கும் எதிராக எதையும் செய்ய இலங்கையை ஒரு அரங்கமாகப் பயன்படுத்த இலங்கை இடமளிக்காது – குறிப்பாக இந்தியாவிற்கெதிராக’’ என்று கூறினார்.
அட்மிரல் கொலம்பகே ஒரு இராணுவ பின்னணியில் இருந்து நியமிக்கப்பட்ட முதலாவது வெளியுறவு செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.