அரசியலமைப்பின் 33 வது பிரிவின்படி தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ ஜூன் மாதம் ஜனாதிபதி பணிக்குழுவை நியமித்திருந்தார்.
ஒரு புதிய வர்த்தமானி அறிவிப்பில், கிழக்கு மாகாணத்தில் உள்ள பல தொல்பொருள் மரபுகள் பெளத்த மத பின்னணியை அடிப்படையாகக் கொண்டவையும் மற்றும் அதன் வழிபாட்டுத் தலங்களுடன் தொடர்புடையவை என்பதால், அந்த மரபுகளை அடையாளம் காணவும் நிர்வகிக்கவும் புனித மகா சங்கத்தின் வழிகாட்டுதலும் ஆதரவும் இன்னும் தேவை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதன் விளைவாக, கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவத்திற்கான ஜனாதிபதி பணிக்குழுவின் உறுப்பினர்களாக துறவிகளை நியமித்ததாகவும், இது ஜனாதிபதியின் உத்தரவின் அடிப்படையில் நிறுவப்பட்டது என்றும், அவர்களின் விவேகம், திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கையையும் விசுவாசமும் உண்டு என்றும் ஜனாதிபதி கூறினார்
அஸ்கிரியா பீடத்தின் வேந்தருவே தர்மகீர்த்தி ஸ்ரீ ராதனபால உபாலி தேரர், மல்வத்து பீடத்தின் பொதுச் செயலாளரான டாக்டர் பஹமுனே சுமங்கல நாயக்க தேரர், அஸ்கிரி பீடத்தின் பொதுச் செயலாளரான புனிதமிகு டாக்டர் மேதமக தம்மானந்த நாயக தேரர், மல்வத்து பீடத்தின் கரக சங்கத்தின் உறுப்பினரான அம்பன்வாலே ஸ்ரீ சுமங்கல தேரர் ஆகியோர்களே புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு துறவிகளாகும்.
இப் பணிக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட பணியானது கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம் காண்பதும், அடையாளம் காணப்பட்ட இடங்கள் மற்றும் தொல்பொருட்களைப் பாதுகாத்து மீட்டெடுப்பதற்கு பொருத்தமான திட்டங்களை கண்டறிந்து அத்திட்டங்களை செயல்படுத்துவதும், தொல்பொருள் பாரம்பரியத்தை நிர்வகிப்பதுமாகும்.
அத்துடன் இதுபோன்ற தொல்பொருள் இடங்களுக்கு மேலும் ஒதுக்கப்பட வேண்டிய நிலத்தின் விஸ்தீரணத்தின் அளவை கண்டறிந்து அவற்றை முறையாகவும் சட்டரீதியாகவும் ஒதுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுமாகும்.
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த தளங்களின் கலாச்சார மதிப்பைப் பாதுகாப்பதற்கும், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் இலங்கையின் தனித்துவத்தை ஊக்குவிப்பதற்கும், அத்தகைய மரபுகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை செய்வதற்கும் இப்பணிக்குழு முயற்சிக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது.