ஜெருசலேமில் இஸ்ரேலிய பிரதமரை சந்தித்த பின்னர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் சூடானில் உள்ள மூத்த நபர்களை பார்வையிட உள்ளார் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான உறவுகளை இஸ்ரேல் இயல்பாக்குவது மற்றும் பிற அரபு நாடுகளும் அதனைப் பின்பற்றுவதை மையமாகக் கொண்ட ஐந்து நாள் மத்திய கிழக்கு சுற்றுப்பயணத்தைத் தொடங்க அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ திங்களன்று இஸ்ரேலுக்கு வந்தார்.
அமெரிக்கக் கொடியின் வண்ணங்களில் வாய்க்கவசம் அணிந்திருந்த பாம்பியோ, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்கவிருக்கிறார். மேலும் வரும் நாட்களில் சூடான், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளுக்கும் அவர் வருகை தருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஜெருசலேமில், பாம்பியோவும் நெதன்யாகுவும் “ஈரானின் தீங்கிழைக்கும் செல்வாக்கு தொடர்பான பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள்” மற்றும் “பிராந்தியத்தில் இஸ்ரேலின் உறவுகளை நிறுவுதல் மற்றும் ஆழப்படுத்துதல்” பற்றிய விடயங்களை விவாதிப்பார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
நெத்தன்யாகு இச்சந்திப்பு பற்றி குறிப்பிடுகையில் ஞாயிற்றுக்கிழமை தானும், பாம்பியோவும் “எங்கள் பிராந்தியத்தில் அமைதியின் வட்டத்தை விரிவுபடுத்துவது பற்றி பேசுவோம்… நாங்கள் அதிகமான நாடுகளுடன் சமாதானத்தை ஏற்படுத்தி வருகிறோம், மேலும் அதிகமான நாடுகள் இதிலே இணையும் என்று நான் நினைக்கிறேன் – அது அவ்வளவு தொலைவில் இல்லை…” என்றார்.
இஸ்ரேல்-யுஏஈ ஒப்பந்தத்தின் ஆச்சரியமான அறிவிப்பை தொடர்ந்து அடுத்தது யார் என்பது தொடர்பாக பஹ்ரைன் மற்றும் சூடான் பற்றி அடிக்கடி குறிப்பிடப்படுவதால், அடுத்தவர் யார் என்ற பெரும் ஊகங்களைத் தூண்டப்பட்டிருக்கிறது.
சூடானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கடந்த வாரம் இஸ்ரேலுடன் தொடர்புகளை இயல்பாக்குவது தொடர்பாக வெளியிட்ட அங்கீகாரமற்ற கருத்துக்களுக்காக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால் “சூடான்-இஸ்ரேல் உறவை ஆழப்படுத்துவதற்கான ஆதரவை வெளிப்படுத்த” பாம்பியோ தனது சுற்றுப்பயணத்தின் போது சூடான் பிரதமர் அப்துல்லாஹ் ஹம்டோக்கை சந்திப்பார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
‘பயங்கரவாதத்திற்கு’ ஊக்கம் அளிக்கும் நாடுகளின் அமெரிக்காவின் பட்டியலில் இருந்து தன்னை நீக்கிக் கொள்ள சூடான் ஆர்வமாக உள்ளது. இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவது அந்த இலக்கை நோக்கி நகர்வதற்கு ஒரு படியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
எவ்வாறாயினும், பயங்கரவாத பட்டியலில் இருந்து சூடானை நீக்குவது கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது 1998 இல் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை நிறைவு செய்வதையும் சார்ந்துள்ளது. இது தொடர்பாக பல மாதங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட ஒரு தற்காலிக ஒப்பந்தம் இன்னும் இறுதிக் கட்டத்தை அடையாமல் காத்திருக்கிறது.
இஸ்ரேல் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஐக்கிய அரபு எமிரேட் வெளியுறவு மந்திரி அப்துல்லா பின் சயீத் அல்-நஹ்யானை சந்திப்பதற்கு முன்பு அவர் பஹ்ரைனின் மகுட இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபாவையும் சந்திப்பார்.
பாலஸ்தீனியர்களுடன் இஸ்ரேல் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முன்மாதிரியைப் பின்பற்றப் போவதில்லை என்று பெரும்பான்மையான அரபு நாடுகளின் கொள்கைக்கு ஏற்ப சவுதி அரேபியா கூறியுள்ளது.
நீண்டகாலமாக நீடிக்கும் இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதலுக்கான தீர்வு ஒரு விரிவான அரபு-இஸ்ரேலிய அமைதிக்கு ஒரு முன் நிபந்தனை என்று அரபு உலகம் நீண்ட காலமாக பெயரளவுக்காவது கூறி வருவது குறிப்பிடத்தக்கது.