இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் ஹமாஸின் ஆயுதப் பிரிவுக்கு சொந்தமான பல தளங்களை தாக்கியுள்ளதாக ஹமாஸ் குற்றம் சாட்டுகிறது.
தெற்கு இஸ்ரேலுக்குள் பாலஸ்தீனியர்கள் ராக்கெட் மிசைல் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டி தொடர்ந்து எட்டாவது இரவாக இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா பகுதியில் குண்டு வீசி வருகின்றன.
தீமூட்டக்கூடிய பலூன்களை (Incendiary balloons) எல்லையைத் தாண்டி பறக்கவிடுவதை நிறுத்தத் தவறியதன் மூலம் “போருக்கான” வழிகளை ஹமாஸ் உருவாக்கி வருகிறது என்று இஸ்ரேல் எச்சரித்து வந்த நிலையில் இது நடந்து இருக்கிறது.
ஹமாஸ் இயக்கத்தின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படைப்பிரிவுகளுக்கு சொந்தமான பல தளங்களை இஸ்ரேலிய போர் விமானங்களும் ட்ரோன்களும் தாக்கியதாக அதன் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய இராணுவ வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் பாதுகாப்புத் தளங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியதோடு பலரைக் காயப்படுத்தியுள்ளன. இது வரை இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மலாகா என்ற ஒர் பெண்மனி தனது ட்விட்டர் பதிவில் “காசாவில் உள்ள குடும்பத்தினருடனான எனது ஒரே தொடர்பு ஒரு சிறிய வாட்ஸ்அப் குழுவாகும். அதிலே நாங்கள் செய்திகள், உணவு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் உரையாடல்களைப் பகிர்ந்து கொள்வோம். கடந்த சில மணிநேரங்களாக அங்கு நான் படித்ததெல்லாம் நிலையான இஸ்ரேலிய தாக்குதல்கள் பற்றிய செய்திகள் தான். இச் செய்தியை ஒரு பூகம்பம் போல் உணர்ந்தேன். என் சகோதரியும் ஒரு தாக்குதலைக் கேட்டதாக தெரிவித்தார்” என்று பதிவிட்டிருந்தார்.
நள்ளிரவுக்கு சற்று முன்னர் (21:00 GMT) வெளியிடப்பட்ட இஸ்ரேலிய இராணுவ அறிக்கையில், “போர் விமானங்கள் மற்றும் ஏனைய விமானங்கள் காசா பகுதியில் உள்ள ஹமாஸின் அதிகப்படியான இராணுவ இலக்குகளை தாக்கியது” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் குறிப்பிடுகையில் “காசா பகுதியில் இருந்து இன்றிரவு ஒரு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. பகல் நேரத்தில் தீமூட்டக்கூடிய பலூன்கள் இஸ்ரேலிய எல்லைக்குள் செலுத்தப்பட்டன. பதில் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் சிறப்பு வரிசைகளில் ஒன்றான ஒரு இராணுவ வளாகம் தாக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கும் மேலாக காசாவிலிருந்து ராக்கெட் மற்றும் தீமூட்டும் பலூன் தாக்குதல்களையும் இரவு நேரங்களில் இஸ்ரேலிய பழிவாங்கல் தாக்குதல்களையும் அவதானித்து வந்த எகிப்திய பாதுகாப்பு அதிகாரிகள் இரு தரப்பினருக்கும் இடையிலுள்ள முறுகல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பாலஸ்தீனிய தீமூட்டும் பலூன்களால் ஏற்பட்ட 40 தீப்பிழம்புகளை அணைக்க அப்பகுதியில் உள்ள தீயணைப்பு படை வீரர்கள் அழைக்கப்பட்டதாக கடந்த செவ்வாயன்று இத் தீயணைப்பு வீரர்களை சந்திக்க சென்ற இஸ்ரேலிய ஜனாதிபதி ருவன் ரிவ்லின் தெரிவித்திருந்ததுடன் ஹமாஸுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.
“தீமூட்டும் காத்தாடிகள் மற்றும் பலூன்களைப் பயன்படுத்துவது என்பது மற்ற பயங்கரவாதங்களைப் போன்ற ஒரு பயங்கரவாதமாகும்” என்று ரிவ்லினின் அலுவலக அறிக்கையில் அவர் தெரிவித்திருந்ததுடன் அவர் மேலும் கூறுகையில் “இது ஒரு விளையாட்டு அல்ல என்பதை ஹமாஸ் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் முடிவு செய்ய வேண்டிய நேரம் வரும். அவர்கள் போரை விரும்பினால் அவர்களுக்கு போர் கிடைக்கும்” என்றும் கூறினார்.
இஸ்ரேலும் ஹமாசும் 2008 தொடக்கம் இதுவரை 3 போர்களில் மோதியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
திங்களன்று காசாவில் ஒரு எகிப்திய தூதுக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஹமாஸ் வட்டாரம் AFP செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது. பின்னர் அக்குழு இஸ்ரேலியர்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை தளமாகக் கொண்ட பாலஸ்தீனிய அதிகார சபையுடனான பேச்சுவார்த்தைகளுக்காக சென்றுள்ளனர். அந்த பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் எகிப்திய தூதுக்குழு காசாவுக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காசாவிலிருந்து தீமூட்டும் பலூன்களை ஏவியதற்கு தண்டனையாக ஆகஸ்ட் 12 ம் தேதி காசாவிற்கு எரிபொருள் இறக்குமதியை இஸ்ரேல் தடை செய்தது. இதனால் பிரதேசத்திலுள்ள ஒரே ஒரு மின்நிலையத்திற்கான எரிபொருள் விநியோகமும் தடைப்பட்டுள்ளது. அத்துடன் காசாவின் கடற்கரையில் மீன்பிடிக்க தடை விதித்ததோடு கரம் அபு சாலிம் (கெரெம் ஷாலோம்) என்னும் பொருட்கள் பரிமாற்றப்படும் இடத்தையும் மூடியுள்ளது.
இஸ்ரேல் தடை விதிப்பதற்கு முன்பிருந்தே ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் மட்டுமே மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இந்த புதிய பதட்ட நிலையால் தற்போது இஸ்ரேலிய மின் விநியோக கட்டமைப்பிலிருந்து வழங்கப்படும் சக்தியைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படும்.
காசாவிலுள்ள ஒரேயொரு மின்நிலையத்திற்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவது சுகாதாரத் துறையில் பிரச்சினைகளை உருவாக்கும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) புதன்கிழமை எச்சரித்தது. மேலும் அவர்கள் தமது முகனூல் பக்கத்தில் எட்டு மணிநேரத்திலிருந்து மூன்று அல்லது நான்கு மணி நேரமாகக் மின்சார விநியோகத்தை குறைப்பது காசாவில் ஏற்கனவே ஆபத்தான முறையில் இயங்கும் மருத்துவமனைகள் மீதான சுமைகளை அதிகரிக்கிறது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன் மின்வெட்டு மக்களுக்கு தண்ணீர் விநியோகத்திலும் பாரிய சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்று குறிப்பிடுகின்றனர்.
2007 ஆம் ஆண்டு முதல், காசா பகுதி இஸ்ரேலிய முற்றுகையால் முடங்கியுள்ளது. இது சுமார் இரண்டு மில்லியன் மக்களை உணவு, எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட முக்கிய பொருட்கள் கிடைக்கப் பெறாமல் பரிதவிக்க விட்டுடிருப்பது குறிப்பிடத்தக்கது.