ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இஸ்ரேல் ஒப்பந்தத்தை பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகிய இரு நாடுகளும் பாராட்டினர். இருப்பினும் உறவுகளை இயல்பாக்குவது பற்றிய தமது சொந்த வாய்ப்புகள் குறித்து இரு நாடுகளும் கருத்து தெரிவிக்கவில்லை.
இஸ்ரேலுடனான உறவுகளை முறைப்படுத்துவதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸைப் பின்பற்றும் அடுத்த வளைகுடா நாடுகளாக பஹ்ரைனும் ஓமானும் இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. “இந்த (ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன்) ஒப்பந்தத்தை தொடர்ந்து வளைகுடா நாடுகளுடனும், ஆப்பிரிக்காவில் உள்ள முஸ்லீம் நாடுகளுடனும், கூடுதலான ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து வரும்” என்று இஸ்ரேலின் உளவுத்துறை அமைச்சர் எலி கோஹன் அதன் இராணுவ வானொலியில் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் “பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் நிகழ்ச்சி நிரலில் நிச்சயமாக உள்ளன என்று நான் நினைக்கிறேன். அதை அடுத்து எனது மதிப்பீட்டின் படி எதிர்வரும் ஆண்டில் ஆப்பிரிக்காவில் கூடுதலான நாடுகளுடன் சமாதான ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதுஇ இவைகளில் தலைமையாக சூடான் உள்ளது” என்று கூறினார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓமான் மற்றும் சூடான் தலைவர்களை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உரையாடல்கள் தொடர்கின்றன:
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் வெள்ளை மாளிகை, பிராந்தியத்தில் இன்னும் ஒப்பந்தங்களை ஏற்படுத்த முடியுமா என்று பார்க்க “ஏராளமான” நாடுகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு முயற்சித்து வருகிறது என்று கூறினார். நாடுகளின் பெயர்களை குறிப்பிட மறுத்த அவர் அவை மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் உள்ள அரபு மற்றும் முஸ்லீம் நாடுகள் என்று கூறினார்.
சவூதி அரேபியாவின் நெருங்கிய கூட்டாளியான பஹ்ரைன், 2019 ல் ஒரு பாதுகாப்பு மாநாட்டுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு சமாதான முயற்சியின் ஒரு பகுதியாக, பாலஸ்தீனிய பொருளாதாரத்தை உயர்த்துவது தொடர்பான அமெரிக்கா தலைமையிலான மாநாட்டுக்கும் ஒரு மூத்த இஸ்ரேலிய அதிகாரியை விருந்தாளியாக அழைத்திருந்தனர். அதேநேரத்தில் குவைத்திலுள்ள அரசாங்க வட்டாரங்கள் இஸ்ரேலுக்கான அதன் நிலைப்பாடு மாறாது என்றும், உறவுகளை இயல்பாக்குவதற்கான கடைசி நாடு இதுவாகும் என்றும் உள்ளூர் செய்தித்தாள் அல்-கபாஸ் தெரிவித்துள்ளது.
தொலைபேசி இணைப்புகள் திறக்கப்பட்டுள்ளன:
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான தொலைபேசி இணைப்புகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன. ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான தொலைபேசி அழைப்புகளின் தடை எப்போது நீக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் வரலாற்று ரீதியாக தொலைபேசி அழைப்புகள் சாத்தியமாக இருக்கவில்லை. இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடைசெய்யப்பட்ட இஸ்ரேலிய செய்தி வலைத்தளங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இணைய இணைப்புகளில் பார்க்க முடிந்தது.
‘வரலாற்று’ ஒப்பந்தம்:
கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இராஜதந்திர உறவுகளை இயல்பாக்குவதாகவும் ஒரு புதிய உறவை உருவாக்குவதாகவும் அறிவித்தன. இஸ்ரேல் 1979 ல் எகிப்துடனும், 1994 ல் ஜோர்டானுடனும் சமாதான உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டது. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸோ, பிற அரபு நாடுகளோ முறையான இராஜதந்திர அல்லது பொருளாதார உறவுகளைக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனியர்கள் இந்த ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தங்களுக்கு இழைத்த ஒரு துரோகமாகக் குறிப்பிட்டு கண்டித்து வருகின்றனர்.