இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி முகனூலின் இந்தியாவுக்கான குழு நாட்டின் ஆளும் வலதுசாரிக் கட்சிக்கு மிகவும் சாதகமான முறையில் நடந்து கொள்வதை விசாரிக்க நாடாளுமன்றக் குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
பாஜக கட்சிக்கு ஆதரவாக பேஸ்புக் நிறுவனம் செயற்படுவதாகவும், அவர்கள் பதிவிடும் வெறுப்புப் பேச்சுக்களை அந்நிறுவனம் நீங்குவதில்லை என்றும் அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி நிறுவனம் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, இந்திய உள்ளடக்கங்களை மேற்பார்வையிடும் முகனூல் மற்றும் வாட்ஸ்அப் ஊழியர்கள் தமது நிறுவனத்தின் “வணிக நலன்களை“ பாதுகாத்துக் கொள்வதற்காக, தீமூட்டும் கருத்துக்களை உள்ளடக்கிய பதிவுகளை பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடியின் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை தடை செய்யாமல் அதற்கு பதிலாக அம் முகனூல் பதிவுகளை நீக்கியதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது.
பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரான அனந்த் குமார் ஹிக்டே தனது பேஸ்புக் பதிவில் கொரோனா ஜிஹாத் என்பது சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும்; முஸ்லிம்கள் நாட்டில் கொரோனா வைரஸை பரப்புவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இவ்வாறான தீவிர வெறுப்புப் பதிவுகளை நீக்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் தவறியதாகவும்¸ பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் புரக்கணிப்பதாகவும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்தது.
மேலும் பாஜக தலைவர் டீ ராஜா சிங், குடியேறிய ரோஹிங்யா முஸ்லிம்களை சுட்டுத்தள்ள வேண்டும், முஸ்லிம்களை துரோகிகள் என்று அழைக்க வேண்டும்., மசூதிகளை இடிக்க வேண்டும் என பேஸ்புக் மற்றும் பொதுமேடைகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுக்கத்ததக்க பேச்சுக்களை பேசி அச்சுறுத்தி வந்தார். இவரது தீவிரமான வெறுப்புப்பேச்சுப் பதிவுகளையும், இவரது பேஸ்புக் கணக்குகளையும் நீக்க பேஸ்புக் நிறுவனம் தவறியதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குற்றம் சாட்டி இருந்தது.
“ஆளும் கட்சியுடன் முகனூல் மற்றும் வாட்ஸ்அப் ஊழியர்களின் உறவுகள் குறித்து விசாரிக்க கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைக்க காங்கிரஸ் கட்சி கோருகிறது“ என்று இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் மேக்கன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும் கூறுகையில் முகனூலின் இந்திய மேற்பார்வைக் குழு குறித்து உள் விசாரணையைத் தொடங்குமாறு முகனூல் நிறுவனத்தை வலியுறுத்திய அவர் “இப்பிரச்சினை முகனூலின் உலகளாவிய நம்பகத்தன்மை தொடர்பானது “ என்று கூறினார்.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், வாட்ஸ்அப் சமூக ஊடக நிறுவனத்துடன் இது சம்பந்தமாக கேள்வி எழுப்பிய பின்னர் குறைந்தது இரண்டு மூத்த பாரதிய ஜனதா (பிஜேபி) அரசியல்வாதிகளின் வெறுக்கத்தக்க பதிவுகள் நீக்கப்பட்டன என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்தியாவின் முகனூலின் உயர்மட்ட பொதுக் கொள்கை நிர்வாகி அங்கி தாஸ் சில பாஜக அரசியல்வாதிகள் மற்றும் பிற “இந்து தேசியவாத தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு“ தமது நிறுவனத்தின் “வெறுக்கத்தக்க பேச்சு விதிகளை“ விதிக்காமல் விட்டுவிட்டதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிக்கை குறிப்பிடுகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், பாஜகவும் அதன் கருத்தியல் வழிகாட்டியான ராஷ்டிரிய சுயம்சேவ சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) உம் “இந்தியாவில் முகனூல் மற்றும் வாட்ஸ்அப்பைக் கட்டுப்படுத்துகிறதன“. “அவர்கள் அதன் மூலம் போலி செய்திகளையும் வெறுப்பையும் பரப்பி வாக்காளர்களை தூண்டுவதற்காக அதைப் பயன்படுத்துகிறார்கள். இறுதியாக, அமெரிக்க ஊடகமே முகனூல் குறித்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் சமூக ஊடகத் தரவை காங்கிரஸ் “ஆயுதமாக“ பயன்படுத்தியது என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளிக்கும் முகமாக முகனூல் நிறுவனம் யாருடைய அரசியல் நிலைப்பாடு அல்லது கட்சி இணைப்பையும் பொருட்படுத்தாமல், வன்முறையைத் தூண்டும் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் உள்ளடக்கங்களை தடைசெய்ததாகவும் உலகளவில் இந்தக் கொள்கைகளையே அமூல்படுத்தி வருவதாவும் கூறியது.
“இன்னும் இதற்கு நிறைய செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரிந்தாலும், நாங்கள் அமூலாக்கத்தில் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். நியாயத்தையும், துல்லியத்தையும் உறுதி செய்வதற்காக எங்கள் செயல்முறையின் வழக்கமான தணிக்கைகளை நடத்துகிறோம்.” என்று அது கூறியது.
அதன் மிகப்பெரிய சந்தையாகக் கருதும் 400 மில்லியன் பயனர்களைக் கொண்ட இந்தியாவை முகனூல் மற்றும் வாட்ஸ்அப், கட்டணத் தளத்தைத் ஆரம்பிக்க ஒழுங்குமுறை அனுமதிகளுக்காகக் காத்திருக்கிறது.
இது சமீபத்தில் இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான சிறு கடைகளுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் ரிலையன்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் பிரிவில் 5.7 பில்லியன் டாலர் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.