வியாழக்கிழமை, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பாலஸ்தீனியர்கள் தங்கள் எதிர்கால அரசிற்காக கோரிய ஆக்கிரமிப்பு நிலங்களை இஸ்ரேல் தன்னுடன் இணைப்பதை தடுக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸும், இஸ்ரேலும் தமக்கிடையே முழு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன என்று கூறினார்.
மூன்றாவது அரபு நாடு
இந்த அறிவிப்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸை அவ்வாறு செய்த முதல் வளைகுடா அரபு நாடாகவும், இஸ்ரேலுடன் தீவிர இராஜதந்திர உறவுகளைக் கொண்ட மூன்றாவது அரபு நாடாகவும் மாற்றியிருக்கிறது.
இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தை அறிக்கைகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அவரது முயற்சிகள் இன்னும் பலனளிக்கவில்லை. அதே நேரத்தில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னேறவில்லை என்பதால் நவம்பர் மாத தேர்தலுக்கு முன்னதாக டிரம்பிற்கு இந்த அங்கீகாரம் ஒரு அரிய இராஜதந்திர வெற்றியை அளிப்பதாக கருதலாம்.
இஸ்ரேலைப் பொறுத்தவரையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தான் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதை விட தனது அரசாங்கம் அரபு நாடுகளுடன் நெருக்கமான உறவுகளைப் கொண்டுள்ளது என்று பெருமையாகப் பேசிய பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
குடியேற்றங்கள்
பாலஸ்தீனியர்கள் தமக்கென கோரிய நிலங்களில் குடியேற்றங்களை உருவாக்க முயன்றுவரும் நெதன்யாகு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பெரும்பகுதியை இணைக்க அனுமதிக்கும் டிரம்பின் முன்மொழிவையும் மற்ற பகுதிகளில் பலஸ்தீனியர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சியை வழங்கும் திட்டத்தையும் ஏற்றுக்கொண்டிருந்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸைப் பொறுத்தவரை, வானளாவிய கட்டிடங்கள் நிறைந்த எண்ணெய் வள நாடான துபாய் சர்வாதிகார ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட போதிலும் மத்திய கிழக்கில் சகிப்புத்தன்மையின் கலங்கரை விளக்கமாகத் சர்வதேசத்திற்கு தன்னைக் காட்டிக் கொள்ளும் முயற்சியை செய்து வருவதே வேடிக்கையானது. இந்த செயற்பாடு வளைகுடாவின் ஏனைய அரபு நாடுகளிடையே இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்கம் செய்வதற்கான போட்டியில் எமிரேட்ஜை முன்னிலைப்படுத்தியுள்ளது.
பலஸ்தீன சுதந்திரப் போராட்டத்தில் அரபுக்களின் ஆதரவை நீண்ட காலமாக நம்பியுள்ள பலஸ்தீனியர்களுக்கு இந்த ஒப்பந்தம் இஸ்ரேலிய இணைப்புத் திட்டங்கள் நிறுத்தப்படுகின்ற என்ற அடிப்படையில் தற்காலிய பயனாகக் கருதப்பட்டாலும், தாம் நீண்டகாலமாக அரபு அரசாங்கங்களை இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்க வேண்டாம் என்று முன்வைத்துவரும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருவது பாரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது.
கூட்டு அறிக்கை
டிரம்பின் ட்வீட்டை தொடர்ந்து அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் இஸ்ரேலின் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அவ்வறிக்கை நேரடி விமான சேவைகள், பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, எரிசக்தி, சுற்றுலா மற்றும் சுகாதாரம் தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட எதிர்வரும் வாரங்களில் இரு தரப்பு பிரதிநிதிகள் கூடுவார்கள் என்று தெரிவித்தது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் இரு நாடுகளும் கூட்டாளிகளாக இருக்கும் என்றும் அது தெரிவித்தது.
உட்பூசல்களினால் ஏற்கனவே இஸ்ரேலின் கூட்டணி அரசாங்கம் ஆட்டங்கண்டுள்ள நிலையிலும், வரும் மாதங்களில் முன்கூட்டியே தேர்தலுக்கான வாய்ப்பு உருவாகியிருக்கின்ற நிலையிலும் இந்த ஒப்பந்தம் நெத்தன்யாகுவுக்கு உள்நாட்டில் சிறிய அளவில் அரசியல் ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மீண்டும் பெருகிவரும் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் வேலையில்லாத் திண்டாட்டங்களால் நெத்தன்யாகுவின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இப்போது இந்த அறிவிப்பை வெளியிடத் தூண்டியது என்ன என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
சிறிய வரலாற்று பின்னணி
அரபு நாடுகளில், எகிப்து மற்றும் ஜோர்டான் மட்டுமே இஸ்ரேலுடன் தீவிர இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளன. எகிப்து 1979 இல் இஸ்ரேலுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. 1994 இல் ஜோர்டான் அதனைத் தொடர்ந்தது. பின்னர் மொரித்தானியா 1999 இல் இஸ்ரேலை அங்கீகரித்திருந்தாலும் பின்னர் 2009 ல் காஷா மீதான இஸ்ரேலின் போருக்கு பின்னர் தனது உறவுகளை முடித்துக்கொண்டது. அதன்படி ஐக்கிய அரபு எமிரேட் இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்கம் செய்த மூன்றாவது அரபு நாடாக மாற்றியிருக்கிறது.
1971 ஆம் ஆண்டு வளைகுடாவில் உருவாக்கப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட் என்பது அரேபிய தீபகற்பத்தில் ஏழு அமீரகங்களைக் கொண்ட நாடாகும். அக்காலகட்டத்தில் ஏனைய அரபு நாடுகளைப் போலவே ஐக்கிய அரபு எமிரேட்டும் பாலஸ்தீனியர்களின் நிலத்தை ஆக்கிரமித்தமை தொடர்பாக இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை.
1973 இல், “அரபுக்களின் இரத்தத்தை விட அரபுக்களின் எண்ணெய் எமக்கு முக்கியமானது அல்ல” என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஸ்தாபக ஆட்சியாளர் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் மத்திய கிழக்கு போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உதவியதற்காக அமெரிக்காவுக்கு எதிரான எண்ணெய்ப் புரக்கணிப்பின் போது கூறியிருந்தது இச்சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்தத்தக்கது.