நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி முகனூலில் அவதூறாக இடப்பட்ட பதிவினால் இந்தியாவின் தொழில்நுட்ப மையம் என்று அழைக்கப்படும் பெங்களூரில் ஏற்பட்ட வன்முறையின் போது குறைந்தது மூன்று பேர் இறந்ததாக போலீசார் கூறுகின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான இம் முகனூல் பதிவினால் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டுள்ளதோடு ஒரு அரசியல்வாதியின் வீடு மற்றும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
“நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது” என்று பெங்களூர் நகர காவல்துறை ஒரு ட்விட்டர் பதிவில் கூறியது. கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் தடியடிகளைப் பயன்படுத்தியதோடு துப்பாக்கியாலும் சுட்டுள்ளனர்.
“சமூகத்திலுள்ள மூத்த மக்கள், கூட்டத்தை சமாதானப்படுத்த முயன்ற போதிலும் , ஆர்பாட்டக்காரர்கள் சாலையிலுள்ள வாகனங்களை எரித்துள்ளதோடு, காவல் நிலையமொன்றையும் தாக்கியுள்ளனர்” என்று போலீஸ் கமிஷனர் கமல் பந்த் கூறினார்.
“காவல்துறையினர் தாம் பாதுகாத்துக்கொள்ள ஆர்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது; இதில் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்” என்று பந்த் கூறினார். அத்துடன் 110 பேர் காழ்ப்புணர்வு நடவடிக்கை மற்றும் காவல்துறையைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் 12 மில்லியன் மக்கள் வசிக்கும் பெங்களூரில் கூட்டங்களை தடைசெய்யும் அவசர சட்டம் விதிக்கப்பட்டுள்ளது என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
வன்முறைகளுக்கு தூபமிட்ட அவமதிப்பான பதிவிக்கு காரணமான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பந்த் கூறினார். குற்றம் சாட்டப்பட்ட நபரின் முதல் பெயர் நவீன் என்றும் அவர் காங்கிரஸ் அரசியல்வாதி ஆர் அகந்தா சீனிவாச மூர்த்தியின் மருமகன் என்றும் அவரது வீடு வன்முறையில் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டதாகவும் கூறினார்.
நபிகள் நாயகம் (ஸல்) சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த இடுகை முகனூலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து பேஸ்புக் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஒரு பொலிஸ் நிலையத்திற்கு வெளியே கூடியிருந்த ஒரு குழு அதிகாரிகளுடன் மோதுவதையும், பல பொலிஸ் வாகனங்களை எரிப்பதையும் தொலைக்காட்சி சேனல்கள் காண்பித்தன. பின்னர் அக்குழு பொலிஸ் நிலையத்திற்குள் செல்ல முயன்றதையும், மற்றொரு குழு அரசியல்வாதியின் வீட்டிற்கு வெளியே கூச்சலிட்டு கற்களை எறிந்து, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்ததையும் இக்காணொலிகள் காண்பித்தன.
முஸ்லீம் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மக்களை வன்முறையிலிருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்தினர்.
இந்நிகழ்வுகள் தொடர்பாக பெங்களூர் முஸ்லிம் மதத் தலைவர் மெளலானா முகமது மக்ஸூத் இம்ரான் ரஷீடி ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் “உள்ளூர் அரசியல்வாதியுடன் தொடர்புடைய ஒரு இளைஞர் இருக்கிறார். அவர் சமூக வலைத்தளத்தில் ‘நான் மதச்சார்பற்றவர் அல்ல’ என்று பதிவிட்டு விட்டு பின்னர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு எதிராக அவதூறான பதிவையும் பதிவிட்டார்இ இதுவே மக்களை கோபப்படுத்தியது” என்று கூறினார்.