லோயா ஜிர்கா என அழைக்கப்படும் ஆப்கானிஸ்தானின் மாபெரும் ஒன்று கூடலில் 400 தலிபான் கைதிகளை விடுவிக்க தீர்மானம் நிறை வேறியதை அடுத்து, ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அஷ்ரப் கானி அவர்களின் விடுதலையை ஒப்புக் கொண்டார்.
கைதிகளை விடுவிக்க பரிந்துரைக்கும் தீர்மானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்று நாள் லோயா ஜிர்காவின் முடிவில் நிறைவேற்றப்பட்டது. இது ஆப்கானிய பாரம்பரிய முறையான கோத்திர மூப்பர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் ஒன்று கூடி முக்கியமான பிரச்சினைகள் குறித்து முடிவுகள் எடுக்கும் ஒன்று கூடலாகும்.
“சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கும், படுகொலைகளை நிறுத்துவதற்கும், பொதுமக்களின் நலனுக்காகவும், தலிபான்கள் கோரியபடி 400 கைதிகளை விடுவிப்பதற்கு ஜிர்கா ஒப்புதல் அளிக்கிறது” என்று ஜிர்கா உறுப்பினர் அதெஃபா தயேப் அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி கானி “இன்று இந்த 400 கைதிகளின் விடுதலை உத்தரவில் கையெழுத்திடுவேன் என்று கூறினார்.” பெப்ரவரியில் அமெரிக்காவும் தலிபான்களும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தைகள் தீட்டப்பட்டன. கையெழுத்திடும் நேரத்தில், பல தசாப்த கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆப்கானிஸ்தானிற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று கூறப்பட்டது. பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னதாக ஒரு நல்லெண்ண சைகையாக அரசாங்கம் 5000 தலிபான் கைதிகளை விடுவிப்பதற்கும், தலிபான்கள் 1000 இராணுவ வீரர்களை அதன் காவலில் இருந்து விடுவிப்பதற்கும் இந்த ஒப்பந்தத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இரு தரப்பினருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் கைதிகள் விவகாரம் ஒரு முக்கியமான தடையாக இருந்தது. பட்டியலில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து தலிபான் கைதிகளையும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் விடுவித்து இருந்தாலும், இறுதி 400 பேரை விடுவிப்பதில் தயக்கம் காட்டியது.
அதிகாரப்பூர்வ பட்டியலை பார்த்த AFP செய்தி நிறுவனத்தின் பிரகாரம், இப்பட்டியலில் உள்ள கைதிகள் பலரும் கடுமையான குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள். இவர்களில் 150 க்கும் மேற்பட்டோர் மரண தண்டனை கைதிகளாவர். இந்த பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் அச்சம் கொள்ளும் “உயர்மட்ட” தாக்குதல்களில் ஈடுபடக்கூடிய 44 போராளிகளை உள்ளடக்கிய ஒரு குழுவும் அடங்குகிறது.
வெள்ளிக்கிழமை கைதிகளை விடுவிக்க வலியுறுத்திய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ இந்த முடிவு “செல்வாக்கற்றது” என்பதையும் ஒப்புக்கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை, லோயா ஜிர்காவில் உள்ள பிரதிநிதிகள், தலிபான்கள் மீண்டும் போர்க்களத்திற்கு திரும்ப மாட்டார்கள் என்ற சர்வதேசத்தின் உத்தரவாதங்கள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
“ஒரே தடையாக இருந்த கைதிகள் விடுதலை என்பது இப்போது அகற்றப்பட்டு விட்டது. 5000 தலிபான் உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டவுடன், இன்ட்ரா-ஆப்கான் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்படும்” என்று ஆப்கானிய சிந்தனைக் குழு மற்றும் விவகார பிரிவின் நிறுவன உறுப்பினர் முஷ்டாக் ரஹீம் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில் “வன்முறையை விட்டுவிட்டு அரசியல் பாதையில் ஈடுபடுவதினுடாக ஆப்கானிஸ்தானின் எதிர்கால அரசியல் அமைப்பு தொடர்பாக கலந்தாலோசிக்க இன்ட்ரா-ஆப்கான் பேச்சுவார்த்தைக்காக நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.
இன்ட்ரா-ஆப்கான் பேச்சுவார்த்தைக்கான எந்த தேதியும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் காபூலின் அரசியல் தலைமைக்கும் தலிபான்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படலாம். தலிபான் தனது அரசியல் அலுவலகத்தை கட்டாரில் பராமரிப்பதால் பெரும்பாலும் கட்டாரிலேயே அது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டனின் அமைதி தூதர் சல்மே கலீல்சாத் கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க வீரர்களைத் திரும்பப் பெறுவதற்காக தலிபானுடனான பேச்சுவார்த்தையை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.