கிரீஸ் தனது எரிசக்தி ஆய்வுப் பணிகள் தொடர்பிலான வாக்குறுதிகளை பேணத் தவறியதால் மத்தியதரைக் கடலில் துருக்கி மீண்டும் எரிசக்தி ஆய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளதாக ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்துகான் அறிவித்துள்ளார்.
நேட்டோ உறுப்பினர்களான துருக்கி மற்றும் கிரீஸ் ஆகியவை கடந்த மாதத்தில் ஹைட்ரோகார்பன் வளங்கள் மற்றும் அகழ்வு உரிமை தொடர்பாக முரண்பட்டு கொண்டன. மேலும் இப்பதற்றங்கள் ஜேர்மன் தலைவர் அங்கேலா மேர்க்கலைத் தலையிட்டு இரு தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கியது.
ஹாகியா சோபியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எர்துகான், “நாங்கள் மீண்டும் எரிசக்தி அகழ்வுப் பணியைத் தொடங்கியுள்ளோம். மேலும் கடல்சார் வலயங்கள் தொடர்பில் உரிமை மற்றும் அதிகாரம் இல்லாதவர்களுடன் பேச எவ்விதத்திலும் நாங்கள் கடமைப்பட்டுள்ளதாக உணரவில்லை.” என்றும் கூறினார்.
துருக்கியின் “பார்பரோஸ் ஹேரெடின் பாசா” என்ற நில அதிர்வு ஆய்வுக் கப்பல் இப்பகுதிக்கு தனது பணிகளைச் செய்ய அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். கிழக்கு மத்தியதரைக் கடலில் இரு நாடுகளுக்கிடையில் ஒரு பிரத்தியேக பொருளாதார மண்டலத்தை உருவாக்கும் வகையில் எகிப்து மற்றும் கிரீஸ் நாடுகளுக்கிடையில் வியாழக்கிழமை கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் குறித்து எர்துகானிடம் கேட்டபோது இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
கிரீஸின் இராஜதந்திரிகள் தங்களது புதிய ஒப்பந்தம் துருக்கிக்கும் லிபிய (சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட) அரசாங்கத்திற்கும் இடையே கடந்த ஆண்டு எட்டப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக கூறுகின்றனர்.
ஆனால் எர்துகான், எகிப்து-கிரீஸ் ஒப்பந்தத்தை நிராகரித்தார்; துருக்கி லிபியாவுடனான ஒப்பந்தத்தை “தீர்க்கமாக” தக்க வைத்துக் கொள்ளும் என்று கூறினார். இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள துருக்கி வெளியுறவு அமைச்சகம் “கிரேக்க-எகிப்திய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட பரப்பு துருக்கியின் எல்லைக்கு உட்பட்டது” என்கிறது.
மேலும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான கடல் எல்லைகள் கிரேக்க மற்றும் துருக்கிய நாடுகளுக்கிடையில் மட்டும் முறையாக பிரிக்கப்பட வேண்டும் என்றும் இதில் கிரேக்க தீவுகளை சம அடிப்படையில் சேர்க்கக்கூடாது என்றும் அங்காரா கூறியுள்ளது. ஆனால் துருக்கியின் இந்த நிலைப்பாடு சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாய் ஏதென்ஸ் வாதிடுகிறது.