மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் எந்தவொரு டிக்டோக் கொடுக்கல் வாங்கல்களிலும் “பெரும் சதவீதத்தை” அமெரிக்கா பெற வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். தற்போதுள்ள அமெரிக்க-சீனா வர்த்தகப் போரில் சமீபத்திய முன்னணி விடயமாக இருப்பது டிக்டோக் ஆகும். சீனாவிற்கு சொந்தமான குறுகிய வீடியோ செய்யும் அப் ஆன டிக்டொக்கை கொள்வனவு செய்வதை அமெரிக்கா சாத்தியமாக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எனவே இந்த பேரத்தில் அமெரிக்கா தனக்கு பங்கு கேட்பதற்கு தகுதியானது என்று ஜனாதிபதி ட்ரம்ப் வாதிட்டு வருகிறார்.
தனிநபர்களின் தரவுகளை கையாளுவதால் இந்நிறுவனம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக வாஷிங்டன் வாதிடுகிறது. மேலும் டிக்டொக்கின் தாய்க் கம்பனி அதனை தமக்கு விற்கவில்லையானால் அடுத்த மாதம் அமெரிக்காவில் இந்த சேவையை தடை செய்வதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
மறு பக்கத்தில் சீனாவும் இது தொடர்பாக தனது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது. அரசு ஆதரவுடைய ஆங்கில மொழி செய்தித்தாளான சீனா டெய்லி இவ்விடயம் குறித்து எச்சரித்துள்ளது. சீன தொழில்நுட்ப நிறுவனத்தை “திருடுவதை” பெய்ஜிங் ஏற்காது என்றும்¸
அமெரிக்கா தனது நாட்டின் தொழில்நுட்ப நிறுவனங்களை “நசுக்கு முயல்கிறது” என்றும் “அமெரிக்கா தனது திட்டமிட்ட நெறுக்குதலையும் அபகரிப்பையும் மேற்கொண்டால் அதற்கு பதிலளிக்க ஏராளமான வழிகள் உள்ளன” என்றும் சீனா தெரிவித்தாக கருத்துக்கள் வெளிவந்தன.
இந்நிலையில் டிக்டோக்கின் எந்தவொரு விற்பனையிலும் “கணிசமான ஒரு தொகை” அமெரிக்க திறைசேரிக்கு வர வேண்டும் என்று டிரம்ப் பிடிவாதமாக இருக்கிறார். COVID-19 தொற்றுநோயை எதிர் கொண்டதன் காரணமாக ட்ரம்பின் தேர்தல் வெற்றிவாய்ப்பு பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ள நிலையில் ட்ரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அமெரிக்க மூலோபாய நலன்களுக்காகவா அல்லது தனது சொந்த நலனுக்காகவா செய்கிறார் என்பதைப் பிரித்தறிவது தற்போது கடினமாகவுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.