ஒரு காலத்தில் அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில் தற்போது ராமர் கோயில் கட்டுவதற்காக ஆகஸ்ட் 5ஆம் திகதி இடம் பெற்ற “பூமி பூஜை” விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை நட்டார்.
இந்த விழாவில் உத்தரபிரதேச முதல்வர் அஜய் சிங் பிஷ்ட் (யோகி ஆதித்யநாத்), உ.பி. கவர்னர் ஆனந்திபென் படேல், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், யோகா குரு, தொழிலதிபர் ராம் கிசன் யாதவ் (பாபா ராம்தேவ்) உள்ளிட்ட பல பாஜக மற்றும் தீவிர வலதுசாரி சங்க பரிவார் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மசூதியை நாசம் செய்தது சட்டத்திற்கு புறம்பானது என்பதை ஒப்புக் கொண்ட போதிலும், இந்து கும்பல்களால் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அழிக்கப்பட்ட பாரம்பரிய பாபர் மஸ்ஜித் நிலம் கடந்த ஆண்டு நவம்பரில் ராமர் கோயில் கட்டுவதற்காக உச்ச நீதிமன்றத்தால் இந்துக்களுக்கு வழங்கப்பட்டது.
முஸ்லீம் ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு கோவிலின் அடித்தளத்தில் கட்டப்பட்டதாகக் கூறி அயோத்தியில் உள்ள பாபர் மஸ்ஜித் 1992 டிசம்பர் 6 அன்று தீவிரவாத இந்துக்களால் இடிக்கப்பட்டது. ஆனால் அந்தக் கருத்து உண்மைக்கு புறப்பானது என வரலாற்று நிபுணர்கள் அழுத்தமாகத் தெரிவித்து வந்தார்கள். உண்மையில் முதல் முகலாய பேரரசர் பாபரின் ஆட்சிக்காலத்தில் இது கட்டபட்டமையே ஆதார பூர்வமானது. எனவே அநீதியாக இந்த மசூதியை இடித்தது, இந்தியாவின் பல பகுதிகளில் மதக் கலவரங்களைத் தூண்டி 2000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மோடி கோவிலின் வளாகத்தில் மல்லிகை மரக்கன்றுகளை நட்டு, ராமைப் புகழ்ந்து கோஷங்களை எழுப்பிய வன்னம் தனது உரையைத் தொடங்கினார். “இந்த முழக்கத்தின் எதிரொலிகள் இன்று உலகம் முழுவதும் கேட்கப்படலாம், இந்த வரலாற்று நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்க எனக்கு வாய்ப்பளித்த கோவில் அறக்கட்டளைக்கு நன்றி; என்னை இங்கு அழைத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார்.
காங்கிரசின் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா, ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பிற கட்சிகளின் தலைவர்களும் இந்த நிகழ்வையும் ராமர் கோயில் கட்டப்படுவதையும் கொண்டாடினர்.
அயோத்தியில் நடைபெற்ற விழாவிற்கு முந்தைய நாள் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் அதனது டுவீட்டில் ” # பாபர் மஸ்ஜித் எப்போதும் ஒரு மஸ்ஜித். #ஹாகியா சோபியா எங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அநியாயமான, அடக்குமுறையான, வெட்கக்கேடான மற்றும் பெரும்பான்மையை திருப்திப்படுத்தும் நிலத்தை அபகரிக்கும் தீர்ப்பால் அதன் உண்மை நிலையை மாற்ற முடியாது. மனம் உடைந்து போக வேண்டிய அவசியமில்லை. இதே சூழ்நிலைகள் என்றென்றும் நிலைத்து நிற்காது” என்று கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.