துருக்கியின் அரசாங்க சார்பு சஞ்சிகை நிறுவனமொன்று கிலாஃபத்தை மீண்டும் மலரச் செய்ய அழைப்பு விடுத்ததை அடுத்து ஆளும் கட்சியான ஏ.கே.பி யின் செய்தித் தொடர்பாளர் “துருக்கி ஒரு மதச்சார்பற்ற குடியரசு நாடாகவே தொடர்ந்தும் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
“துருக்கிய குடியரசு என்பது சட்டத்தின் ஆட்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற நாடாகும்; எமது குடியரசு இந்த குணாசியங்களை அடிப்படையாகக் கொண்ட அனைவருக்குமானதாகும்.” என்றும் ஓமர் செலிக் ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: “துருக்கியின் அரசியல் அமைப்பு பற்றி முற்றிலும் முரணான கருத்துக்களை தூண்டுவது தவறு…; நமது அரசியல் அமைப்பு குறித்து அண்மையில் சமூக ஊடகங்களில் வெளிவந்த ஆரோக்கியமற்ற விவாதமானது துருக்கியின் நிகழ்ச்சி நிரலில் இல்லை…” “துருக்கி குடியரசு நாடாக என்றென்றும் நிலைத்து நிற்கும்; நமது தேசத்தின் பிரார்த்தனையோடும், ஆதரவோடும் நமது ஜனாதிபதியின் தலைமையின் கீழ், எமது நாடும் மனிதகுலமும் அடைய முடியாத இலக்குகள் என்று அழைக்கப்படும் இலக்குகளை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்; எமது குடியரசு தொடர்ந்து பிரகாசிக்கும்” என்றார்.
உதுமானிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் ரத்து செய்யப்பட்ட கிலாஃபத்தை மீண்டும் தொடங்கி வைக்குமாறு அங்காராவிடம் அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய யெனி சஃபக் செய்தித்தாளின் வார இதழான கெர்செக் ஹயாத் அழைப்பு விடுத்தது. அதனையடுத்து அதற்கு பதிலளிக்கும் முகமாக ஏ.கே.பி யின் அதிகார பூர்வமான ட்வீட்டுகள் வெளிவந்தன.
“ஹாகியா சோபியாவும் துருக்கியும் விடுதலையாகி விட்டது; இப்போது கிலாஃபத்திற்கு தயாராகுங்கள்” என்ற கோரிக்கையுட்ன கெர்செக் ஹயாட்டின் ஜூலை 27 இதழின் அட்டைப்படம் வெளிவந்திருந்தது. “இப்போது இல்லையென்றால் எப்போது? நீங்கள் இல்லையென்றால் யார்?” என துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை நோக்கி அது கேள்விகளை எழுப்பி இருந்தமை பேசுபொருளாக மாறியிருக்கிறது.
கெர்செக் ஹயாத் மற்றும் யெனி சஃபாக் அல்பேராக் ஊடக குழுமத்திற்கு சொந்தமானது. மேலும் இது துருக்கிய அரசாங்கத்துடனும், ஜனாதிபதி எர்துகானுடனும் நெருங்கிய உறவை பேணி வருவதும் குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்தவ பைசாண்டிய பேரரசினால் ஒரு கதீட்ரலாக (தேவாலயம்) கட்டப்பட்ட ஹாகியா சோபியா 1453 இல் உத்மானியர்கள் இஸ்தான்புல்லை கைப்பற்றிய பின்னர் ஒரு மசூதியாக மாற்றப்பட்டது. துருக்கிய குடியரசின் நிறுவனர் முஸ்தபா கமால் அடாதுர்க் இதை ஒரு அருங்காட்சியகமாக மாற்றி அமைத்தார். இப்போது 80 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் ஹாகியா சோபியா ஒரு மசூதியாக மாற்றியமைக்கப்பட்ட சில நாட்களில் இந்த கிலாஃபாவிற்கான அழைப்பு வந்துள்ளது.
மதச்சார்பின்மைக்கான சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக கிலாபத்தை அடாதுர்க் ஒழித்தார். பல நூற்றாண்டுகளாக உத்மானிய பேரரசர்கள் முஸ்லீம் உலகின் தலைவர்களாகவும், 7 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் தோன்றியதிலிருந்து ஆட்சியாளர்கள் பயன்படுத்திய அமீர் அல் முஃமினீன் என்ற பட்டத்தை சுமந்தவர்களாகவும் யும் விளங்கினர்.
இந்த வரலாற்றுப் பின்னணியில் இவ்வூடக வெளியீடானது துருக்கிய குடியரசிற்கு எதிராக மக்களை தூண்டுகிறது என்றும்¸ ஆயுதக் கிளர்ச்சியை தூண்டுவதற்கு எதிரான சட்டத்தை மீறியுள்ளது என்றும் கூறி, ஜெர்செக் ஹயாத் மீது அங்காராவின் வழக்குரைஞர் கழகம் குற்றப் புகார் செய்துள்ளது.
ஆனால் கெர்செக் ஹயாத்தின் ஆசிரியர் கெமல் ஓசர் தமது தொடர்ச்சியான ட்வீட்டுகளில் “கிலாஃபத் முஸ்லிம்களின் ஒன்றியம் என்றும் துருக்கிய குடியரசுக்கு எதிரானது அல்ல …” என்றும் பதிவிட்டிருந்தார். மேலும் அவர் கூறுகையில் “மாறாக அது(கிலாஃபத்) துருக்கியை பலப்படுத்தும் ஒரு களம் என்றும், இஸ்லாமிய ஒன்றியத்தை எதிர்ப்பவர்கள் துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக மாற்ற மட்டும் ஏன் போராடுகிறார்கள்?” என்றும் மேலும் கேள்வி எழுப்பினார்.