மலேசிய உல்லாச லங்காவி தீவின் கரைக்கு நீந்த முயற்சித்தபோது நீரில் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்பட்ட இருபத்தி ஆறு ரோஹிங்கியா அகதிகள், அருகிலுள்ள தீவின் புதருக்குள் மறைந்திருந்த போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மலேசியா அகதிகள் அந்தஸ்தை அங்கீகரிப்பதில்லை, ஆனால் மியான்மரில் 2017 ஆம் ஆண்டு இராணுவத் தாக்குதலில் இருந்தும் மிகச் சமீபத்தில் பங்களாதேஷில் உள்ள அகதிகள் முகாம்களில் இருந்தும் தப்பித்து, சிறந்த வாழ்க்கையை தேடும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு முஸ்லிம் பெரும்பான்மை நாடான மலேசியா சாதகமான இடமாக இருக்கிறது.
கடந்த சனிக்கிழமை அன்று ஒரு சிறிய படகில் ரோஹிங்கியர்கள் குழுவொன்று லங்காவியின் மேற்குக் கரையை வந்தடைந்தனர். குழுவின் ஏனையவர்கள் கடற்கரையை அடைய முயன்றபோது நீரில் மூழ்கிவிட்டதாக அதிகாரிகள் அஞ்சினர். ஆனால் பின்னர் அவர்கள் கடற்கரைக்கு அப்பால் உள்ள ஒரு தீவின் புதர்களில் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று மலேசிய கடல்சார் அமுலாக்க முகாமை இயக்குநர் ஜெனரல் மொஹட் ஜூபில் மாட் சோம் திங்களன்று ஒரு குறுஞ்செய்தி ஒன்றினூடாக தெரிவித்தார்.
அதிகாரிகள் அகதிகளை தடுப்பு முகாம்களில் தடுத்து வைத்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட நபர்களுடன் இரண்டு குடியேறிய ரோஹிங்கியர்கள் ஆட்கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மொஹட் ஜூபில் தெரிவித்தார். பங்களாதேஷில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான ரோஹிங்கியர்கள் ஒரு தாய் படகில் பயணம் செய்து அதிலிருந்து ஒரு சிறிய படகிற்கு மாற்றப்பட்டே மலேசியாவிற்குள் பதுங்கியதாக தாம் நம்புவதாக கடலோர காவல்படை அதிகாரி தெரிவித்தார்.
மலேசிய கடல்சார் அமுலாக்க முகாமையின் மாகாண இயக்குனர் மொஹமட் சவாவி அப்துல்லாஹ் “உள்ளூர் மீன்பிடி படகுகள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன இப்படகுகளிலேயே அகதிகள் லங்காவிக்கு கடத்தப்பட்டுள்ளனர்” என்று அவரது அறிக்கையில் தெரிவித்தார். மேலும் கூறுகையில் “உள்ளூர் அதிகாரிகளைத் தவிர்ப்பதற்காக கடல்சார் எல்லைக்கு அருகிலுள்ள தாய் படகுகளில் இருந்து உள்ளூர் மீன்பிடி படகுகளுக்கு மாற்றியிருப்பதாக தங்கள் விசாரணையில் கண்டறிந்திருப்பதாக” கூறினார்.
கடந்த மாதம் சேதமடைந்த படகில் லங்காவிக்கு வந்த 269 ரோஹிங்கியர்களை மலேசியா தடுப்புக் காவலில் வைத்துள்ளது. குறிப்பிட்ட நான்கு மாத காலத்திற்குள் படகில் வந்த டஜன் கணக்கான மக்கள் பயணத்திலேயே உயிரிழந்திருப்பதாக நம்பப்படுவதாக மொஹட் ஜூபில் கூறியிருந்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தத்தளிக்கும் பொருளாதாரத்தை மேற்கோள் காட்டி மலேசியாவால் மேலும் ரோஹிங்கியர்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரதமர் முஹைதீன் யாசின் கடந்த மாதம் கூறியிருந்தது கவனத்திற் கொள்ளத்தக்கது.