சிறுபான்மையாக வாழக்கூடிய முஸ்லிம் சமூகம் தனது அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசியலிலும், ஏனைய அனைத்துத் துறைகளிலும் பங்கேற்க வேண்டும்; இல்லையேல் முஸ்லிம் சமூகம் அரசியல் அநாதையாகிவிடும் என்று கருத்தை எம்மில் பல புத்திஜீவிகளும், மார்க்க அறிஞர்களும் பரப்புரை செய்வது வழக்கமாகி விட்டது. இந்த பரப்புரையின் ஓர் அம்சமாக ஜனநாயக அரசியலில் சான்று பகருதலை முறையாகச் செய்ய வேண்டும் என்ற உபதேசங்களை தேர்தல் காலங்களில் நாம் அடிக்கடி கேள்விப் படுகின்றோம். சமூகத்தின் முன்னணித் தலைமைகளின் கருத்துக்களை ஆழமாக ஆய்வு செய்யாது பின்பற்றுவது அறிவியல் வீழ்ச்சி பெற்ற ஓர் சமூகத்தின் அடையாளமாகும். அந்த அடிப்படையில் மார்க்கத்தின் ஒளியில் ஜனநாயக அரசியலில் பங்கேற்பது கூடுமா? கூடாதா? என்ற அடிப்படை அறிவே இல்லாது மக்கள் தேர்தல் களத்துக்குள் தள்ளி விடப்படுகிறார்கள்.
ஜனநாயகமும் அதன் அடிப்படை சிந்தனையாகிய மத ஒதுக்கல் சிந்தனையும் (Secularism) இஸ்லாத்துடன் முரண்படக்கூடியது என அறிந்திருந்த உலமாக்களும், ஆய்வறிவுள்ள சிறுபான்மையான மக்கள் தொகுதியினரும் அதனை தவிர்ந்து வந்தாலும், பெரும்பாலான மக்கள் நடைமுறை நன்மைகளை இலக்காகக் கொண்டு ஜனநாயகச் சகதிக்குள் சறுக்கி விழுந்து விடுவது வழமையாகி விட்டது. ஆனால் அந்த தவறான தேர்வையே சமூகத்தின் விடுதலைக்கான மைற்கல்லாகக் காட்டுவதற்கு எம்மத்தியில் புத்திஜீவிகள் தோன்றி வருவதே மிகவும் விசனத்துக்குரியது. முஸ்லிம் உலகைப் பொறுத்தமட்டில், இராணுவ ஆட்சிக்குள்ளும், கொடுங்கோல் மன்னர்களுக்கு கீழும் வாழ்ந்து வந்த மக்களுக்கு, ‘ஜனநாயகம்’ ஓர் விடுதலையாகத் தெரிந்த காலத்தில் தோன்றிய சிந்தனைப் பிறழ்வை, ‘இஸ்லாம்’ என இலங்கைக்கு தரவிறக்கம் செய்வதில் இந்த புத்திஜீவித்துவ சமூகம் களைப்படையாது முயற்சித்து வருகிறார்கள்.
முஸ்லிம் உலகில் ஜனநாயகத்தினூடாக இஸ்லாமிய எழுச்சியை நோக்கிய பயணத்தைத் தொடர முடியுமென்கின்ற சிந்தனையை சில நவீன சிந்தனையாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் பேசத்தொடங்கினர். இஸ்லாமிய ஆட்சியியல் மற்றும், அரசியலுக்கும், ஜனநாயக வழிமுறைக்கும் இடையே இருக்கின்ற நெருங்கிய ஒற்றுமை பற்றி விரிவாகப் பேசும் பல ஆய்வுகளும், ஒப்பு நோக்குதல்களும் தோற்றம் பெற்றன. அவை இலங்கையிலும் தமிழ் மொழிபெயர்ப்பு வடிவில் வலம் வரத் தொடங்கின. இத்தகைய சிந்தனைகளால் பாதிப்புற்றவர்கள் ஜனநாயக மக்கள் பிரதிநிதித்துவ முறையும், இஸ்லாமிய அரசியல் பிரதிநிதித்துவ முறையும் பல வழிகளில் ஒப்பானவை என்று எழுதவும், பேசவும் ஆரம்பித்தனர். இன்று, ஜனநாயக தேர்தல்களில் சரியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக முஸ்லிம்கள் தங்கள் வாக்குரிமையைப் பாவிப்பது ‘சான்று பகருதல்’ என்றும், அது மார்க்கக் கடமை என்றும், அதிலே அசிரத்தையாக இருப்பவர்கள் மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் என்றும் கூறும் அளவிற்கு முன்னேறி விட்டதை நாம் காண்கிறோம்.
ஆனால் சான்று பகர்தலென்பது இஸ்லாம் வழியுறுத்தும் விடயமாயினும்கூட அது எதற்காக செய்யப்பட வேண்டும் என்ற ஓர் விடயம் இருக்கின்றதல்லவா? அது பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டியது அதற்கு முன் நிபந்தனையல்லவா? அல்லாஹ்(சுபு)வுக்கு மாத்திரமே உரித்தான சட்டமியற்றும் அதிகாரத்தை மக்கள் பிரதிநிதிகளின் கைளுக்கு தாரைவார்க்கும் ஜனநாயக வாக்கெடுப்பை இஸ்லாத்தின் பார்வையில் சான்று பகருதல் என்பதா? அல்லது வரம்பு மீறுதல் என்பதா?
இஸ்லாம் திட்டவட்டமாக மறுக்கின்ற இந்த ஜாஹியத்திற்கு வாக்களிக்க முடியாது என்ற விடயம் ஆய்விக்குரிய விடயமே அல்ல. அது அக்காலத்திலும், இக்காலத்திலும் நேர்படச் சிந்திக்கும் உலமாக்களின் ஏகோபித்த முடிவு (இஜ்மாஹ்) என்பதை மார்க்கம் பற்றிய ஓரளவு அறிவுள்ளவரால் கூட மறுக்க முடியாது.
மேலும் வேடிக்கை என்னவென்றால், என்னதான் ஜனநாயகம் என்கின்ற குஃப்ருக்காக சான்றுபகர்ந்துவிட்டாலும்கூட மக்கள் எதிர்பார்க்கும் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜனநாயக அரசியல் அமைப்பும், அதன் அரசும், அதனை பிரதிநிதித்துவம் செய்பவர்களும் ஒருபோதும் வழங்குவதில்லை என்பதை மக்கள் தற்போது நன்றாகவே உணர ஆரம்பித்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் மீது நெருக்கடிகளை ஏற்படுத்துவதிலும், வீண் பழிகளை சுமத்துவதிலும், பொய் வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றுவதிலுமே இதுவரை தாம் சான்றுபகர்ந்த ஜனாதிபதிகளும், அரசியற் தலைமைகளும் செயற்படுகின்றனர் என்பதையும் முஸ்லிம்களுக்கு யாரும் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை.
எனவே சடவாத ஜனநாயக தேர்தல்களில் வாக்களித்தல் எனும் சான்றுபகர்தலுக்காக மக்களை என்னதான் பக்குவப்படுத்தினாலும்கூட, முஸ்லிம்கள் அனுபவிக்கும் அநீதிகளும் ஏமாற்றங்களும் வாக்களித்தலில் சலிப்பையும், வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன. பழக்கதோசமும், அரசியற் தலைமைகளினதும், மார்க்க அறிஞர்களினதும், நவீன புத்திஜீவிகளினதும் தொடர் வற்புறுத்தல்களும், சில்லறை இலாப நோக்கங்களும் மீண்டும் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை வாக்குச் சாவடிக்கு அனுப்பி வைக்கின்றனவே ஒழிய மக்களின் பெரும்பாலானோரின் யதார்த்தமான மனோநிலையோ, சடவாத ஜனநாயக அமைப்புக்காக வாக்களித்தலை ஒரு வெற்று முயற்சியாகவே கருதுகின்றது. குறிப்பாக இளைய தலைமுறையினர் உளுத்துப்போன சமூகச் சட்டகத்துக்கு வெளியே நின்று சிந்திக்க ஆரம்பித்திருக்கின்றனர். அதுவொரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டும்.