செவ்வாயன்று ஹூஸ்டன் தூதரகத்தை மூட வாஷிங்டன் “திடீரென கோரியது” என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்ய சீனாவுக்கு 72 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி ஊடகத்தின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
பெய்ஜிங் இந்த உத்தரவைக் கண்டித்து பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தியது. ஆனால் அது என்ன நடவடிக்கைகள் எடுக்கக்கூடும் என்று கூறவில்லை.
வெளியுறவுத்துறை இந்த முடிவை உறுதிப்படுத்தியதுடன், “அமெரிக்க அறிவுசார் சொத்துக்கள் மற்றும் அமெரிக்கரின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதற்காக” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
டென்மார்க்கிற்கு விஜயம் செய்தபோது, யு.எஸ். வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ எந்தவிதமான விவரங்களையும் முன்வைக்கவில்லை. ஆனால் யு.எஸ் மற்றும் ஐரோப்பிய அறிவுசார் சொத்துக்களை சீனா திருட்டு செய்ததாக பலமுறை குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், இச்செயல் “இலட்சக்கணக்கான தொழில்களை இழக்கச் செய்யக்கூடியது” என்றும் கூறினார்.
“இது தொடர்ந்து நடக்க நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை – இது குறித்து ஜனாதிபதி டிரம்ப் போதுமான அளவில் கூறியிருக்கிறார்” என்று அவர் ஒரு செய்தி மாநாட்டில் கூறினார்.
“சீன கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது என்பதற்கான தெளிவான எதிர்பார்ப்புகளை நாங்கள் முன்வைத்து வருகிறோம். அவர்கள் அவ்வாறு செய்யாதபோது, அமெரிக்க மக்களைப் பாதுகாக்கவும், எமது தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்கவும், எமது பொருளாதாரம் மற்றும் வேலைகளைப் பாதுகாக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுக்கப் போகிறோம்…” “இதனை ஜனாதிபதி டிரம்ப் எடுத்த நடவடிக்கைகளில் நீங்கள் காண்கிறீர்கள்; நாங்கள் தொடர்ந்து அவற்றில் ஈடுபடுவோம்” என்று பாம்பியோ கூறினார்.
கொரோனா வைரஸ் மற்றும் தொலைதொடர்பு கியர் தயாரிப்பாளர் ஹவாய் முதல் தென் சீனக் கடலில் சீனாவின் பிராந்திய உரிமைகோரல்கள் மற்றும் ஹாங்காங்கில் ஒரு புதிய பாதுகாப்புச் சட்டத்தை திணிப்பது வரை அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவுகள் இந்த ஆண்டு கடுமையாக மோசமடைந்துள்ளன.
நவம்பர் யு.எஸ். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இந்த சரிவு வந்துள்ளது. இதில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் அவரது ஜனநாயகக் கட்சி போட்டியாளரான ஜோ பைடனும் சீனாவுக்கு பதிலளிக்கும் விதத்தில் யார் கடினமாக இருக்க முடியும் என்பதில் போட்டியிட்டு வருகின்றனர்.
செவ்வாயன்று ஹூஸ்டனில், தூதரகத்தில் ஒரு முற்றத்தில் ஆவணங்கள் எரிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், தூதரகம் சாதாரணமாக செயல்பட்டு வருவதாகவும், அந்த அறிக்கைகள் குறித்து மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
“பி.ஆர்.சி (சினாவின்) நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், அமெரிக்க வேலைகள் திருட்டு மற்றும் பிற மோசமான நடத்தைகளை நாங்கள் பொறுத்துக் கொள்ளாதது போலவே, பி.ஆர்.சி எங்கள் இறையாண்மையையும், எங்கள் மக்களை அச்சுறுத்துவதையும் அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது” என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் சீனாவின் உத்தியோகபூர்வ பெயரான சீன மக்கள் குடியரசு(பி.ஆர்.சி) என்ற சுருக்கத்தை பயன்படுத்தி ஒர் அறிக்கையில் கூறியிருக்கிறார்.
இதற்காக சீனாவின் ஹூஸ்டன் தூதரகம் ஏன் தனிமைப்படுத்தப்பட்டது என்பது உடனடியாகத் தெரியவில்லை.
“ஹூஸ்டனில் சீனாவின் துணைத் தூதரகத்தை ஒரு குறுகிய காலத்திற்குள் ஒருதலைப்பட்சமாக மூடுவது சீனாவிற்கு எதிரான அதன் சமீபத்திய நடவடிக்கைகளின் முன்னோடியில்லாத வகையில் அதிகரித்துள்ளது” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஒரு வழக்கமான செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.
“யு.எஸ் இந்த தவறான முடிவை உடனடியாக ரத்து செய்யுமாறு நாம் வலியுறுத்துகிறோம். இந்த தவறான பாதையில் அது தொடர்ந்து செல்லுமானால், சீனா உறுதியான எதிர்விளைவுகளுடன் செயல்படும். ”
அமெரிக்க அரசாங்கம் சில காலமாக சீன இராஜதந்திரிகளையும், தூதரக ஊழியர்களையும் துன்புறுத்துவதாகவும், “சீன மாணவர்களை மிரட்டுவது, விசாரிப்பது மற்றும் அவர்களின் தனிப்பட்ட மின் சாதனங்களை பறிமுதல் செய்வது, அவர்களை தடுத்து வைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும்” வாங் தெரிவித்தார்.
சீனாவின் இராஜதந்திர பணிகளில் அமெரிக்கா தலையிட்டுள்ளது. இதில் இராஜதந்திர பைகளை இடைமறித்தல் மற்றும் சீன பொருட்களை “உத்தியோகபூர்வ பயன்பாட்டிற்காக பறிமுதல் செய்தல்” ஆகியவை அடங்கும். இந்த நடவடிக்கைகள் ஹூஸ்டன் தூதரகத்துடன் தொடர்புடையதா என்பதை அவர் குறிப்பிடவில்லை.
சீனக் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துக் கோரியதற்கு வெளியுறவுத்துறை உடனடியாக பதிலளிக்கவில்லை.
இந்த விஷயத்தில் நேரடி அறிவைக் கொண்ட ஒரு வட்டாரம், வுஹானில் உள்ள யு.எஸ் தூதரகத்தை மூடுவதை சீனா பரிசீலித்து வருவதாகக் கூறுகிறது.
யு.எஸ் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்நகரத்தில் உருவான கொரோனா வைரஸ் தொற்றின் மத்தியில் வெளியுறவுத்துறை ஊழியர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் திரும்பப் பெற்றது.
தூதரகத்தை மூடிவிடுமா என்பது குறித்து கருத்துக் கோரியதற்கு சீனாவின் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.
கடந்த மாதம், பெய்ஜிங்கில் உள்ள யு.எஸ். தூதரகம், வுஹான் தூதரகத்தில் அமெரிக்கா விரைவில் நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.