“இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக. அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.” (சூரா அல்குரைஷ் 106 : 3-4)
திருமறை வசனம் இவ்வாறு விழித்துப்பேசும்போது சவூதியின் ஆட்சியாளர்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுவதோ அதற்கு தலைகீழான செய்திகளாகும்.
சவூதி அரேபியாவில் வெளிநாட்டு மாடல்களின் போட்டோஷூட்களை நடத்த வோக் (Vogue) பத்திரிகைக்கு வழங்கப்பட்ட அனுமதி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் சல்மானின் (எம்.பி.எஸ்) தலைமையில் சவூதி அரேபிய பெண்களின் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக பிரசித்தப்படுத்தப்பட்ட செயற்பாடுகளின் ஓர் அங்கமாக இந்த அசிங்கமும் நடந்தேறியுள்ளது.
தனது தந்தையின் உடல்நலக் குறைபாட்டைக் கருத்தில் கொண்டு, 2017 ஆம் ஆண்டில் எம்.பி.எஸ் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதிலிருந்து சவூதி அரேபியா, விடுதலை(Liberty), சுதந்திரம்(Freedom) என்ற பெயரில் சினிமாக்கள் மற்றும் இரவு களியாட்ட விடுதிகளைத் திறப்பது போன்ற அதிர்ச்சியான நிகழ்வுகளை கண்டு வருகின்றது. அரை நிர்வாண மோடல்களின் இந்த போட்டோஷூட் சமூக ஊடகங்களில் அதிகமான விமர்சனங்களை சம்பாதித்துக் கொண்டது. ஒரு ட்விட்டர் பயனாளி இது பற்றி,
“மதீனாவில் அமைந்துள்ள அல்-உலாவில் வெளிநாட்டு பத்திரிகையொன்று இழிந்த மாடல்களை புகைப்படம் எடுக்கும் முயற்சி ஒவ்வொரு விசுவாசியின் இதயத்தையும் வேதனைப்படுத்துகிறது. இதுதான் மதீனாவின் அழிவுவாகும்…” என்று தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.
முஸ்லிம் உலகின் ஆச்சரியமான நிகழ்வுகளை வியந்து பார்த்த இன்னுமொரு ட்விட்டர் பயனாளி,
“என்னவொரு அற்புதமான முரண்பாடு. ஹாகியா சோபியாவில் அதான் எழுப்பப்படும் அதே நேரத்தில் உலகின் அதி தூய்மையான நிலத்தில் நிர்வாண விபச்சாரிகள் படமாக்கப்படுகிறார்கள்…” என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறாக தூய இஸ்லாம் தோன்றிய, அல்லாஹ்வின் தூதரpன் (ஸல்) புனித கப்ரை தாங்கிய, பூமியை காஃபிர்கள் விரும்பும் போதெல்லாம் தங்கு தடையின்றி திறந்து விடும் பாதகர்களாக அல்-சவூத்தின் ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் இருந்து வருகின்றார்கள்.
அல்-சவூத்தின் ஆட்சியாளர்கள் முதலில் ஆங்கில காலனித்துவத்தின் நலனுக்காக உத்மானிய கிலாஃபாவுக்கு எதிராக போராடினார்கள். முஸ்லீம்களின் எண்ணெய் வளத்தை மேற்கு நாடுகளின் கைகளில் துருப்பு சீட்டாக மாற்றினார்கள். பின்னர் அமெரிக்க துருப்புக்களுக்கு ஹரத்துக்குள் நிரந்த இராணுவத் தளத்தையும் வழங்கிக் கௌரவித்தார்கள். அதற்கு கைமாறாக இன்று, இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாமிய வளைகுடாவை துன்மார்க்கத்தினாலும், ஊழலினாலும் வேரறுக்கும் களியாட்ட கோமாளிகளை அதிகாரத்திற்கு கொண்டு வந்து அழகு பார்க்கிறார்கள்.
மேற்கத்தைய சிந்தனைக்கும், நாகரீகத்துக்கும் தங்கள் மனதை பறி கொடுத்த முஹம்மத் பின் சல்மான் போன்ற கோடாரிக்காம்புகள் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் சைத்தான்களுக்கு முஸ்லிம்களின் புனித பூமிகளை தாரை வார்த்திருக்கிறார்கள். அதனைப் பயன்படுத்திக்கொண்டு காயமடைந்த சிங்கத்தைச் சூழ ஹையீனாக்கள் அழைந்து திரிவதைப்போல, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நகரத்தை சுற்றி இந்த சைத்தான்கள் தற்போது வலம் வர ஆரம்பித்திருக்கின்றன.
அல்-மதீனா அல்-முனவராவில் அரை நிர்வாண பெண்களை புகைப்படம் எடுக்க வழங்கப்பட்ட இந்த நடவடிக்கை சுல்தான் நூருத்தீன் ஷிங்கி(ரஹ்) இன் ஆட்சிக் காலத்தில் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் தோண்ட முயன்றவர்களை நமக்கு நினைவூட்டுகிறது.
ஹிஜ்ரி 557 இல் சுல்தான் நூருத்தீன் ஷிங்கி(ரஹ்) ஓர் கனவை அடிக்கடி காண்கிறார்கள். அதிலே நபி (ஸல்) அவர்கள் இரண்டு மாநிற (blond colour) மனிதர்களை சுட்டிக்காட்டி, ‘எனக்கு உதவுங்கள்; இந்த இருவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கூறுவது போல ஒரு கனவு அவருக்கு வந்து கொண்டே இருந்தது.
எனவே நூருத்தீன்(ரஹ்) அவசரமாக அல்-மதீனாவுக்குச் சென்று இந்த விஷயம் தொடர்பாக விசாரித்தார்கள். அங்கே நபி (ஸல்) அவர்களின் கப்ரை நோக்கி சுரங்கம் ஒன்றை அகழ்ந்து, அவரது திரு மேனியை திருடிச் செல்வதற்கு குஃபார்கள் முயற்சிக்கும் ஒரு சதி பற்றி கேள்விப்படுகிறார்கள். அது பற்றி அறிந்த சுல்தான் நூருத்தீன் ஷிங்கி(ரஹ்), அல்லாஹ்(சுபு), நபி(ஸல்) அவர்களின் புனித உடலைப் பாதுகாக்கும் உயரிய பணியை செய்வதற்கு தன்னைத் தேர்ந்தெடுத்துள்ளான் என்று எண்ணி மனமுருகி அழுகிறார்கள்.
பின் அவசரமாக களத்தில் இறங்கிய அவர் அந்த சதிகாரர்களை முறியடித்து நபி (ஸல்) அவர்களின் கப்ரை சுற்றி ஈயத்தாலான வார்ப்பொன்றை ஏற்படுத்தி பாதுகாக்க உத்தரவிட்டார்கள். சுல்தான் நூருத்தீன் ஷிங்கி(ரஹ்) இன் இந்த அளப்பெரிய பங்களிப்புக்காக முழு முஸ்லிம் உம்மத்தும் இன்று வரை அவருக்கு கடமைப்பட்டுள்ளதாக உணர்கிறார்கள். அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். அவர் மீது அல்லாஹ்(சுபு)வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.
அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக சுல்தான் நூருத்தீன் ஷிங்கி(ரஹ்) இன் வைராக்கியத்தையும், மனவலிமையும் உடைய மக்களை நோக்கி நாம் அறைகூவல் விடுக்கிறோம். கடந்த காலங்களில் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் தோண்ட முயன்றவர்கள் இரகசியமாக மாறுவேடத்தில் இருந்தார்கள். ஆனால் இப்போதோ, அல்-சவூத்தின் ஆட்சியாளர்கள் வெட்கம் கெட்ட அடிப்படையில் வெளிப்படையாக இஸ்லாத்தின் கண்ணியத்துக்கு எதிராக களம் இறங்கி இருக்கிறார்கள்!
எனவே, அல்லாஹ்வின் பொருட்டு, சக்தியும் பலமும் உள்ளவர்களே! உங்கள் நபி (ஸல்) அவர்களின் புனித ஸ்தலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்!
அல்லாஹ்வின் பொருட்டு அல்-மதீனா அல்-முனவ்வராவின் கண்ணியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!
உங்கள் கைகளால் இஸ்லாமிய சமுதாயத்தின் வெற்றியை விரைவு படுத்துங்கள்!
துரோகத்தின் பிரதிநிதியான அல்-ருவைபிதாக்களை சிம்மாசனங்களிலிருந்து நீக்குவதும், நபித்துவத்தின் அடிப்படையில் இரண்டாவது கிலாஃபா ரஷிதாவை (நீதியான கிலாஃபாவை) நிறுவுவதும் உங்கள் தோள்களிலேயே சுமத்தப்பட்டுள்ளன.