தென் சீனக் கடலின் சில பகுதிகளில் கடல் வளங்களை சீனா தன்னகப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் தேடல் “சட்டவிரோதமானது” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங்கின் ஆற்றல் வளம் மிகுந்த நீர் வளங்களில் மேற்கொள்ளப்படும் “கையகப்படுத்துவதற்கான மிரட்டல்” பிரச்சாரத்தை அவர் வன்மையாக கண்டித்துள்ளார்.
இப்பகுதியில் பல ஆண்டுகளாக செயற்கைத் தீவுகளில் இராணுவ தளங்களை உருவாக்கி வரும் சீனா, “வேண்டுமென்றே உண்மைகளையும் சர்வதேச சட்டத்தையும் சிதைக்கிறது” என்கிறது அமெரிக்கா.
சீனாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா நீண்ட காலமாக எதிர்த்து வந்தாலும், இந்நாள் வரையில் அவை சட்டத்திற்கு புறம்பானவை என்று பறைசாற்றவில்லை.
பாம்பியோவின் இக்கருத்தானது, சீனாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே நல்லிணக்க உறவு இல்லாத ஒரு காலகட்டத்தில் வந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா தனது கருத்துக்கு பின்புலமாக எத்தகைய புதிய நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்பது பற்றி தெளிவாக கூற முடியாதுள்ளது.
தென் சீனக் கடலின் பெரும்பகுதி தனதே என்று உரிமை கொண்டாடும் சீனாவின் கூற்றுக்கு எதிராக புருனே¸ மலேசியா¸ பிலிப்பைன்ஸ்¸ தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
பல தசாப்தங்களாக இந்த கட்டுப்பாட்டு எல்லைக்கான இழுபறி இருந்து வந்தாலும்¸ கடந்த சில வருடங்களாக பதட்ட நிலை அதிகரித்து வருகிறது.
பெய்ஜிங் “ஒன்பது இடைவெளிக்கோடுகள் Nine dash line” என்று அழைக்கப்படும் பகுதியைத் தன்னுடையது என உரிமை கோருகிறது. சீனா¸ தனது நோக்கம் அமைதியை நிலைநாட்டுவதே என்று பறைசாற்றினாலும்¸ தீவுகளை உருவாக்கல்¸ ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் இராணுவ பிரசன்னத்தை விஸ்தரித்தல் ஊடாக தனது நிலைப்பாட்டுக்கு வலுவூட்டி வருகிறது.
பெரும்பாலும் மக்கள் வசிக்காத இப்பகுதியில்¸ உள்ள இரண்டு தீவு சங்கிலிகளை சுற்றி இயற்கை வளங்கள் இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் இந்த கடல் பகுதி ஒரு கப்பல் பாதையாகவும்¸ முக்கிய மீன்பிடிக் களமாகவும் இருக்கிறது.
ஜப்பான் தனது வருடாந்த பாதுகாப்பு மதிப்பாய்வில்¸ கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் நிலவரத்தை மாற்ற பெய்ஜிங் முயற்சிப்பதாகவும்¸ சீனாவின் கடற்படை நடவடிக்கைகள் மிகுந்த கவலை அளிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, வர்த்தகம், தொழில்நுட்ப பிரச்சினைகள் தொடங்கி தென் சீனக் கடலில் கடல்சார் பாதுகாப்பு பிரச்சினைகள் வரை, சீனா மீதான அழுத்தத்தை அமெரிக்கா படிப்படியாக அதிகரித்து வருகிறது. இது ட்ரம்பின் மறுதேர்தல் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான வெறும் வாய்சாடலா அல்லது சீனாவைத் யுத்த முறுகள் நிலைக்குள் தள்ளும் ஓர் முன் முயற்சியா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.