உலகெங்கும் இஸ்லாத்தின் தூதை சுமந்து செல்பவர்களுக்கு ஹுதைபிய்யாஹ் உடன்படிக்கை பல படிப்பினைகளை போதிக்கிறது. இஸ்லாமிய அழைப்புப் பணியில் விவேகமான அரசியல்வாதிகளது இன்றியமையாமை பற்றி அது எடுத்தியப்புகிறது. அழைப்புப் பணியின் வெற்றிக்கு இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் சார்பான உலகப் பொதுக்கருத்தை ஏற்படுத்துவதிலுள்ள கட்டாயம் பற்றியும் அது விரிவாக விபரிக்கிறது. ‘மிகப்பெரிய வெற்றி’ என்று அல்லாஹ்(சுபு)வே தனது திருமறையில் குறிப்பிடுகின்ற இந்த உடன்படிக்கை பற்றி கீழ்வரும் கட்டுரை மிகச் சிறப்பாக ஆராய்கிறது.
மக்காவிலிருந்து மதீனாவுக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) குடியேறியதில் இருந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது அவர் தனது இராணுவம் மற்றும் மதீனாவில் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தின் நிலை குறித்த பொதுவான ஓர் நிலைப்பாட்டுக்கு வந்திருந்தார். இஸ்லாமிய அரசு அனைத்து அரேபியர்களுக்கும் பெரும் சர்ச்சைக்குரிய சக்தியாக மாறியிருந்த போதிலும், அவரது எதிரிகளின் பலவீனத்திற்கு வழிவகுக்கக் கூடிய வகையில் மென்மேலும் இஸ்லாமிய செய்தியை வலுப்படுத்த உதவும் புதிய நகர்வுகளைப் பற்றி, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) தொடர்ந்து யோசித்துக்கொண்டிருந்தார்.
கைபர் மற்றும் மக்கா மக்கள் முஸ்லிம்களைத் தாக்க சதி செய்கிறார்கள் என்ற செய்தி அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு ஏற்கனவே வந்திருந்தது. இதன் நடுவே தூதர்(ஸல்) மக்கா மக்களை திருப்திப்படுத்தும் நோக்கில் ஒரு திட்டத்தை வடிவமைத்தார். இது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அரேபிய தீபகற்பத்திற்குள், தனது தஃவாவைப் பின்தொடர்வதற்கும், கைபரின் யூதர்களை அவர்களது கூட்டாளிகளான குரைஷிகளிடமிருந்து தனிமைப்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என்று நம்பப்பட்டது. இந்த திட்டம் அல்லாஹ்வின் புனித மாளிகையை நோக்கிய ஹஜ் யாத்திரைக்கான அமைதியான அழைப்பை விடுத்தது.
புனித மாதங்களில் அரேபியர்கள் போராட மாட்டார்கள் என்பதால் தனது திட்டத்தை நிறைவேற்றுவது எளிது என்பதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அறிந்திருந்தார். குரைஷிகள் பிளவுபட்டுள்ளனர் என்பதையும், முஸ்லிம்களுக்கு பயந்திருக்கிறார்கள் என்பதையும் கூட அவர் அறிந்திருந்தார். எனவே அவருக்கு எதிராக எந்தவொரு மோசமான நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன்பு, அவர்கள் இரண்டு முறை சிந்திக்க வேண்டியிருக்கும் என்பது அவருக்குத் தெரியும். எனவே அவர் கஃபாவை நோக்கி ஒரு யாத்ரீகராக செல்ல முடிவு செய்தார், குரைஷிகள் அவரைத் தடுக்க முற்பட்டால்¸ அதை அவர்களுக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்தலாம்; அது பொது மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் செய்தியை மேலும் ஊக்குவிக்க உதவும் என அவர் உறுதியாக நம்பினார்.
மேற்கூறியவற்றை மனதில் கொண்டு, புனித மாதமான துல் அல்-கஅதாவில் ஹஜ் யாத்திரையை ஆரம்பிக்க இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பகிரங்கமாக அறிவித்தார். மேலும் அவர் மற்ற அரபு பழங்குடியினரும் அமைதியான இந்த புனித யாத்திரையில் தம்முடன் பங்கேற்குமாறும் வேண்டிக் கொண்டார். இந்த வேண்டுதல் நடவடிக்கையின் நோக்கம், அவர் ஓர் தாக்குதல்தாரியாக அல்லாமல் ஒரு சாதாரண யாத்ரீகராக வெளியேறி வருவதை சமிக்ஞையாகச் சொல்வதாகும். அவரது தீனில் உள்ளடங்காத முஸ்லிம் அல்லாத அரேபியர்களை கூட, இப்பயணத்தில் தன்னுடன் சேருமாறு கேட்டுக் கொண்டதற்கு காரணம், தனக்கு சிறிதளவும் போர் நோக்கம் கிடையாது என்ற செய்தியை எல்லோருக்கும் பகிரங்கமாக வலியுறுத்துவதற்காகும்.
மதீனாவை விட்டு வெளியேறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தனது ஒட்டகமான ‘குஸ்வா’ மீது அமர்ந்தவர்களாக, 1,400 ஆண்களும், எழுபது ஒட்டகங்களும் கொண்ட ஓர் அணியை வழி நடத்திச் சென்றார்கள். அவர் போராட விரும்பவில்லை என்பதையும், அல்லாஹ்வின் புனித மாளிகையை பார்வையிடவே விரும்புவதையும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்திற்காக இஹ்ராமையும் அணிந்திருந்தhர்கள். இவ்வாறு மதீனாவை விட்டு வெளியேறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் அங்கிருந்து ஆறு அல்லது ஏழு மைல்கள் தூரத்தில் அமைந்துள்ள ‘தில் ஹலிஃபா’ என்ற இடத்தை அடைந்தனர். அங்கு அவர்கள் தமது யாத்ரீக உடையான இஹ்ராமை அணிந்து கொண்டு மக்காவை நோக்கி அணி வகுத்தனர். முஸ்லிம்கள் சண்டையிடும் நோக்கம் அல்லாது ஹஜ்ஜிற்காக வந்திருக்கிறார்கள் என்று குரைஷிகள் கேள்விப்பட்டனர். ஆனால் அது மக்காவுக்குள் நுழைய, முஹம்மது (ஸல்) பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சூழ்ச்சியாக இருக்கலாம் என்று அவர்கள் அஞ்சினர். அத்தகைய சாத்தியம் குறித்த அச்சம் அவர்களின் மனதில் எப்போதும் இருந்து வந்ததுதான். எனவே அவர்கள் முஹம்மது(ஸல்), மக்கா நகரத்திற்குள் நுழைவதைத் தடுக்க முடிவு செய்தனர்.
ஆகவே, குரைஷிகள் இருநூறு குதிரைப்படை வீரர்களை உள்ளடக்கிய ஒரு பெரிய இராணுவத்தின் தலைவர்களாக காலித் இப்னுல் வலீத் மற்றும் இக்ரிமா இப்னு அபி ஜஹ்ல் ஆகியோரை நியமித்தனர். யாத்ரீகர்களை தடுக்கும் பொருட்டு முஷ்ரிகீன்களின் இராணுவம் மக்காவிலிருந்து புறப்பட்டது. யாத்ரீகர்களின் வருகைக்காக அவர்கள் ‘தி துவா’வில் முகாமிட்டனர். எனினும் குரைஷிகளின் நகர்வுகள் பற்றிய தகவல்கள் அல்லாஹ்வின் தூதரை(ஸல்) வந்தடைந்தன. அவர் ‘உஸ்பான்’ எனும் கிராமத்திற்குள் நுழைந்தபோது பனு கஅப்பைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்து அவர்களைப் பற்றி விசாரித்த போது அவர் “நீங்கள் வருவதைக் கேள்விப்பட்ட குரைஷிகள் தமது பால் தருகின்ற ஒட்டகங்கள் சகிதம் சிறுத்தை தோல்களை அணிந்துகொண்டு வெளியே வந்து தி துவாவில் முகாமிட்டுள்ளனர்; அவர்களை மீறி நீங்கள் ஒருபோதும் மக்காவிற்குள் நுழைய முடியாது என்று அவர்கள் சபதம் செய்துள்ளனர்; முன்கூட்டியே காலித் இப்னுல்-வலீத் குதிரைப் படையுடன் குரா அல்-கமீமுக்கு சென்று முகாமிட்டுள்ளார்.” என்ற செய்தியை தெரிவித்தார். குரா அல்-காமிம் என்பது முஸ்லிம்கள் முகாமிட்டிருக்கின்ற உஸ்பானிலிருந்து எட்டு மைல் தொலைவில் அமைந்திருந்தது.
இந்தச் செய்தி முஹம்மத்(ஸல்) அவர்களை வந்தடைந்தபோது அவர்கள்,
“குரைஷிகளுக்கு நாசம் ஏற்படட்டும்! போர் அவர்களின் கண்களை மறைத்து விட்டது. என்னையும், ஏனைய அரேபியர்களையும் எங்கள் வழியில் விட்டு விட்டால் அவர்களுக்கு என்னதான் நடந்துவிடப்போகிறது? அவர்கள் விரும்புவதைப்போல் என்னை அவர்கள் கொன்றுவிட வேண்டும் அல்லது அவர்கள் மீது அல்லாஹ்(சுபு) எனக்கு வெற்றியைத் தந்தால் அவர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்துக்குள் நுழைவார்கள். அவர்கள் அவ்வாறு செய்யாது விட்டால் அவர்களுக்கு வலிமை இருக்கும் வரை போரிடுவார்கள்… எனவே குரைஷிகள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? அல்லாஹ்(சுபு)வின் மீது ஆணையாக! அல்லாஹ்(சுபு) என்னிடம் ஒப்படைத்துள்ள பணியை வெற்றிபெறச் செய்யும் வரை அல்லது அதிலே நான் அழிந்துவிடும் வரை போராடுவதை நிறுத்தப்போவதில்லை.” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தான் ஏற்கனவே தீட்டியிருந்த திட்டத்தை பிரதிபலித்து தற்போது தோன்றியுள்ள நிலைமை பற்றி கடுமையாக யோசித்தார். குரைஷிகள் அவருடன் சண்டையிட ஒரு இராணுவத்தை அனுப்பியிருக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் திரும்பிச் செல்வதா? அல்லது தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு போராடுவதா? என்ற சிக்கல் அவருக்கு ஏற்பட்டது. ஆனால் குரைஷிகளுடன் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டால், முஸ்லிம்கள் தங்கள் எதிரிகளை எதிர்கொள்ள போதுமான ஈமானிய பலத்துடன் இருக்கின்றனர் என்பதை அவர்கள்(ஸல்) அறிந்திருந்தனர். இருப்பினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) போரிடுவதை இச்சந்தர்ப்பத்தில் ஓர் தேர்வாக எடுக்கக்கூடாது என்று தெளிவாக முடிவு செய்திருந்தார். அவரது மனதில் அமைதி மட்டுமே குடிகொண்டிருந்தது. ஹஜ்ஜை நிறைவேற்றுவதைத் தவிர அவர் வேறு ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில் ஹஜ்ஜை நிறைவேற்றுவதைத் தடுப்பதற்கு குரைஷிகள் முயற்சித்தால் கூட (இதனை அவர்கள் (ஸல்) பிரயாணத்தின் ஆரம்பத்திலேயே எதிர்பார்த்துத்தான் இருந்தார்கள்) அது அராஜக முறையில் அல்லாது அமைதியான முறையில் நிகழ வேண்டும் என்று அவர் விரும்பினார். மேலும் விரோதமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஹஜ் நிகழ்த்தப்படக்கூடாது என்பதிலும் அவர்(ஸல்) தெளிவாக இருந்தார்.
ஹஜ்ஜை சாக்காக வைத்து இறைத்தூதர்(ஸல்) தீட்டிய அந்த அமைதித்திட்டம் மக்காவுக்குள்ளும், குறைஷிகளுக்கு மத்தியிலும் இஸ்லாமிய செய்தியின் மகிமையையும், உன்னதத்தையும் பரைசாற்றும் அதேவேளை, குரைஷிகளின் வழிகேட்டையும், ஆணவத்தையும், அத்துமீறலையும் தோலுரிக்கின்ற திட்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இஸ்லாமிய அழைப்புப்பணி செழிக்கவும், பரவவும், இறுதியில் அது வெற்றிபெறவும் முஸ்லிம்கள் சார்பான மக்களின் பொதுக்கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அந்த சூழலில் நபி(ஸல்) அவர்கள் போராடுவதை தேர்ந்தெடுத்தால் அவருக்கு சார்பாக உருவாகக்கூடிய பொதுக்கருத்து கைநழுவி போகும் வாய்ப்பிருந்தது. அதே நேரத்தில் குரைஷிகள், அரேபியர்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு வசதியாக அது அமைந்துவிடும். அதனை உணர்ந்த நபிகளார்(ஸல்), தான் முன்னமே தீட்டியிருந்த அமைத்தித் திட்டத்தை மாற்றிக் கொள்ளாது தொடர்வதற்கு தீர்மானித்தார்கள். பெருமானாரின்(ஸல்) சாதுர்யமும், அரசியல் முதிர்ச்சியும் ஏனையவர்களை விட முன்னேறியதாக இருந்தமையினால் அது சாத்தியப்பட்டது.
முஹம்மத்(ஸல்) குரைஷிகளை சந்திக்காத வண்ணம் எம்மை மக்காவுக்கு அருகில் அழைத்துச் செல்லக்கூடியவர்கள் யாரேனும் இருக்கின்றீர்களா? என்று முஸ்லிம்களைப் பார்த்துக் கேட்டார்கள். அவர்களில் ஒருவர் தன்னால் முடியும் என்று கூறி, கரடுமுரடான கற்பாறை நிறைந்த வழிகளை ஊடறுத்து மக்காவுக்கு கீழேயுள்ள ஓர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஹுதைபிய்யாஹ் என்ற இடத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றார். அங்கேயே முஸ்லிம்களின் அணி முகாமிட்டுக் கொண்டார்கள். காலிதினதும், இக்ரிமாவினதும் படைகள் இந்தக்காட்சியைக் கண்டவுடன் திகைத்துப்போய் மக்காவை பாதுகாப்பதற்கு பின்வாங்கினார்கள்.
தமது கண்களுக்கு தென்படாது தமது வாசல் வரை வந்துவிட்ட முஸ்லிம்களின் செய்தியை அவர்களால் நம்ப முடியவில்லை. இறுதியில் இறை நிராகரிப்பாளர்கள் மக்காவிலும், அல்லாஹ்(சுபு)வின் தூதர்(ஸல்) அல் ஹுதைபிய்யாஹ்விலும் முகாம் அமைத்து அடுத்த நகர்வு பற்றி சிந்தித்துக் காத்திருந்தார்கள். முஸ்லிம்களில் ஒரு பகுதியினர், குரைஷிகள் ஒருபோதும் எம்மை ஹஜ் செய்ய அனுமதிக்க மாட்டார்கள், அவர்கள் யுத்தத்துக்காக தம்மை தயார் செய்துகொண்டிருக்கின்றனர் என்று எதிர்வு கூறினார்கள். எனவே தமக்கு வேறு வழியில்லை; தாமும் அவர்களுக்கு எதிராகப் போராடி அவர்களை முறியடித்து ஹஜ் செய்ய வேண்டும் என்றும், அதுதான் குரைஷிகளுக்கு நல்ல பாடமாக அமையும் என்றும் அவர்கள் கருதினார்கள்.
குரைஷிகள் முதலில் தாம் அழிந்து போனாலும் பரவாயில்லை முஸ்லிம்களுடன் மோதுவதே சரியானது என்று கருதினர். ஆனால் முஸ்லிம்கள் மிக வலிமையான சக்தி என்பதை அவர்கள் உணர்ந்திருந்ததினால் அந்த சிந்தனையை அவர்கள் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே அவர்கள் முஸ்லிம்களின் முதல் கட்ட நகர்வுக்காக காத்திருந்தார்கள். முஹம்மத்(ஸல்) அவர்களும், தான் மதீனாவிலே இஹ்ராமை அணித்தது முதல் தீர்மானித்திருந்த தனது திட்டத்தை மாற்றுவதற்கு தயாராக இருக்கவில்லை. எனவே அவர்களும் குரைஷிகளின் அடுத்த நகர்வை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். குரைஷிகள் கொண்டிருக்கும் பீதி பற்றி அவர்கள் உணர்ந்திருந்ததால், முஸ்லிம்களின் ஹஜ் தொடர்பாக பேரம் பேசுவதற்கு குரைஷிகள் தூதுவர்களை கட்டாயம் அனுப்புவார்கள் என்று அவர்கள் அனுமானித்திருந்தார்கள்.
அவர்(ஸல்) எதிர்பார்த்தபடி, குரைஷிகள் முதலில் ஹுஷாஃஅவைச் சேர்ந்த சில நபர்களுடன் ஃபுதைல் இப்னு வர்காஃவை நபி(ஸல்) அவர்களுடன் பேரம்பேச அனுப்பி வைத்தனர். ஒரு சில வார்த்தைகள் அவர்களுக்கு இடையில் பரிமாறப்படும்பொழுதே முஸ்லிம்கள் போர் புரியும் நோக்கத்துடன் அல்லாமல், புனித கஃபாவை தரிசித்து தூய்மைப்படுத்தவே வந்திருப்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அந்தத்தூதுக்குழு குரைஷிகளிடம் திரும்பிச் சென்று நிலைமையின் யதார்த்தத்தை தெளிவுபடுத்தினாலும், குரைஷிகள் அவர்களை நம்பாது அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றம் சுமத்தினர். பின் குரைஷிகள் இரண்டாவது தூதுக்குழுவையும் அனுப்பிப் பார்த்தனர். அதுவும் அதே தகவலைத்தான் அவர்களுக்கு கொண்டு சேர்த்தது. பின்னர், அல் அஹ்பாஸின் (அபிஸீனியர்கள்) தலைவரான அல்ஹுலைஸ் என்பவரை பேச்சுவார்த்தைக்காக அனுப்பி வைத்தனர். முஹம்மத்(ஸல்) அவர்களைத் தடுக்குமாறும், சொல்லப்போனால் முஸ்லிம்களுக்கு எதிராக அவரை தூண்டும் விதத்திலும் குரைஷிகள் அல்ஹுலைஸை நிர்ப்பந்தித்தார்கள்.
ஒன்று அவர் பேச்சுவார்த்தையில் வெற்றி பெறுவார் அல்லது குறைந்தபட்சம் முஹம்மத்(ஸல்) அவர்கள் மீது கோபம் கொண்டு மக்காவை பாதுகாப்பதில் தம்மோடு உறுதியாக நிற்பார் என்று குரைஷிகள் எதிர்பார்த்தனர். எனினும் முஹம்மத்(ஸல்), அல் ஹுலைஸ் வருவது பற்றி கேள்விப்படவே, தாம் ஹஜ்ஜை நோக்காக கொண்டேயல்லாமல் போருக்காக வரவில்லை என்ற சமிக்ஞையை வழங்குவதற்காக, குர்பானிக்காக அழைத்து வந்த கால்நடைகளை அவர் வரும் வழிகளில் அவிழ்த்து விடுமாறு பணித்திருந்தார்கள். அல்-ஹுலைஸ், பள்ளத்தாக்கின் ஓரங்களில் கால்நடைகள் தன்னைக் கடந்து செல்வதைக் கண்ணுற்றும், மக்கள் உம்ராவை மேற்கொள்ளும் விதத்தில் பக்திப் பிரவாகத்தில் இருப்பதையும், போர் ஒன்றில் ஈடுபடுவதற்கான ஆயுத ரீதியான தயார்நிலையில் இல்லாமல் இருந்ததையும் கண்ணுற்றும் பெரிதும் ஈர்க்கப்பட்டார். மக்காவை நோக்கி வந்திருக்கும் இந்த மக்கள் புனித யாத்திரை ஒன்றுக்காவே வந்திருக்கிறார்கள் என்பதில் முழுமையாக நம்பிக்கை கொண்ட அல்-ஹுலைஸ் முஹம்மத்(ஸல்) அவர்களை சந்திக்காமலே குரைஷிகளிடம் திரும்பிச் சென்று, தான் கண்ணுற்றவற்றை கூறினார். குரைஷிகளிடம் முஸ்லிம்களை ஹஜ் செய்வதற்கு அனுமதிக்குமாறும், அவ்வாறு செய்யாது விட்டால் தான் தனது துருப்புக்களைக்கூட திருப்பிப் பெற்றுக்கொள்வேன் என்றும் எச்சரித்தார். எனினும் குரைஷிகள் அவரை ஒருவாறாக சமாதானப்படுத்தி முஹம்மத்(ஸல்) அவர்களுடன் ஒரு சிறந்த பேரத்தை பெறும் வரையில் தமக்கு கால அவகாசம் தருமாறு கோரி சம்மதிக்கப் பண்ணினார்கள்.
இப்போது பேரம் பேசுவதற்கு உர்வா இப்னு மஷ்ஹுத் அல் தகஃபி என்பவரை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார்கள் குரைஷிகள். அவரின் தீர்மானத்தின் மீது குரைஷிகளுக்கு அதீத நம்பிக்கை இருந்தது. எனினும் தகஃபியாலும் முஹம்மத்(ஸல்) அவர்களுடன் பேரம்பேசி வெல்ல முடியவில்லை. இறுதியில் தகஃபி கூட நபி(ஸல்) அவர்களின் நிலைப்பாட்டிலுள்ள நியாயத்தை உணர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். எனவே அவர் குரைஷிகளிடம் திரும்பிச் சென்று,
“குரைஷிகளே! கிஸ்ராக்களினதும், சீசர்களினதும், நேகஸ்களினதும் இராச்சியங்களுக்கு நான் சென்றுள்ளேன். ஆனால் முஹம்மத் அவரது தோழர்கள் மத்தியில் மதிக்கப்படும் அளவிலான ஒரு அரசரை நான் ஒருபோதும் கண்டதில்லை. அவர் வுழூஃ செய்தால் அவரைப்போலவே அப்படியே அவர்களும் வுழூஃ செய்கிறார்கள். அவரது தலையிலிருந்து ஒரு முடி உதிர்ந்து விட்டால் அதனை ஓடிச் சென்று எடுத்து விடுகிறார்கள். எனவே அவர்கள் அவரை ஒருபோதும் கைவிடப்போவதில்லை. நீங்கள்தான் உங்கள் மனதைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்று எச்சரித்தார்.
இவர் சொன்ன வார்த்தைகள் குரைஷிகளின் விரோதத்தையும், பிடிவாதத்தையும் அதிகரிக்க மட்டுமே உதவியது. இறுதி வரை பேச்சுவார்த்தைகள் எதுவும் பயன் அளிக்கவில்லை. முஹம்மத்(ஸல்) அவர்கள் குரைஷிகளின் தூதர்கள் தன்னை வெளிப்படையாக அணுகுவதில் அச்சம் கொண்டிருக்கலாம் என்று கருதினார். எனவே அவர் தன் சார்பாக குரைஷிகளை நோக்கி ஒரு தூதுக்குழுவை அனுப்புவது பற்றி யோசித்தார். தனது பிரதிநிதியால் அவர்களை சம்மதிக்க வைக்க முடியும் என்று நம்பிய அவர் ஒரு தூதரையும் அனுப்பி வைத்தார். ஆனால் அத்தூதர் சவாரி செய்த ஒட்டகத்தை அவர்கள் தாக்கியதுடன், அவரையும் கொலை செய்ய முயன்றனர். அதிஷ்டவசமாக, அல்-அஹ்பாஷ் இன் துருப்புக்கள் அவரைப் பாதுகாத்தன.
குரைஷிகளின் பகைமை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. இரவு நேரங்களில் முஸ்லிம்கள் முகாமிட்டிருந்த பகுதியை நோக்கி கற்களை வீசுவதற்காக இளைஞர்களை அவர்கள் அனுப்பினர். இத்தகைய செயல்கள் முஸ்லிம்களுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியதுடன், அவர்கள் குரேஷிகளை எதிர்த்துப் போராட விரும்பினர். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஒருவாறாக அமைதிப்படுத்தினார்கள். அடுத்த கட்டமாக குரைஷிகள் ஐம்பது பேரை கொண்ட ஒரு குழுவை முஸ்லிம்களின் முகாமைச் சுற்றி வளைத்து தாக்கும் படி அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்களை கைப்பற்றிய முஸ்லிம்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன் கொண்டு வந்தனர். அவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மன்னித்து திரும்பிச் செல்வதற்கு அனுமதித்தார்.
முஹம்மத்(ஸல்) அவர்களின் இந்த நகர்வு மக்காவாசிகள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் ஹஜ் செய்யும் தூய நோக்கத்துடன்தான் வந்திருக்கிறார் என்ற கருத்தின் உண்மைத்தன்மையை இது ஐயமறத் தெளிவுபடுத்தியது. அதனால் மக்களின் பொதுக்கருத்து இறைத்தூதர்(ஸல்) பக்கம் பாரியளவில் திரும்பும் வாய்ப்பிருந்ததை குரைஷிகள் உணர்ந்து கொண்டு, இனிமேல் அவரை வன்முறையைக் கொண்டு தடுக்க எடுக்கும் முயற்சிகள் அரேபியர்களை தமக்கு எதிராக திருப்பி விடும் என்று அவர்கள் அச்சம் கொண்டனர். எனவே தமது ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு சமாதான நடவடிக்கை பற்றி சிந்திப்பதற்கு ஆரம்பித்தார்கள்.
இதற்கிடையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குரைஷிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மற்றொரு தூதரை அனுப்ப முடிவு செய்தார். அதற்காக அவர் உமர் இப்னுல் கத்தாப் (ரழி) வை தெரிவு செய்து அங்கே சென்று வருமாறு வேண்டிக் கொண்டார். ஆனால் உமர்(ரழி), “அல்லாஹ்வின் தூதரே! குரைஷிகளிடமிருந்து எனது உயிருக்காக அஞ்சுகிறேன்; என்னைப் பாதுகாக்க மக்காவில் பனு ஆதி இப்னு கஅப்கள் தற்போது இல்லை; குரேஷிகள் மீதான எனது பகைமையையும், நான் அவர்களுடன் கடுமையாக நடந்துகொள்வதையும் அவர்கள் அறிவார்கள் என்று குறிப்பிட்டு, என்னை விட அதிக மதிப்புள்ள ஒருவரை நான் பரிந்துரைக்கிறேன் என்று கூறி உத்மான் இப்னு அஃபான் (ரழி) அவர்களை சிபாரிசு செய்தார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்மானை(ரழி) வரவழைத்து, அபு சுஃப்யானை நோக்கி அனுப்பி வைத்தார்கள். எனவே உத்மான்(ரழி) புறப்பட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செய்தியை குரைஷிகளுக்கு எத்தி வைத்தார்கள். அதன்போது அவர்கள் நீங்கள் வேண்டுமானால் புனித கஃபாவை தற்போது தவாப் செய்து விட்டுச் செல்லலாம் என்று கூறினார்கள். அதற்கு அவர் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தவாப் செய்யும் வரை என்னால் அவ்வாறு செய்ய முடியாது.” என்று மறுத்த நிலையில் குரேஷிகளுடன் தனது சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் குரைஷிகள் அவரின் யோசனையை நிராகரித்த வண்ணமே இருந்தனர். பேச்சுவார்த்தை விரிவாகவும், சிலபொழுது கடினமாகவும் இருந்தன. ஆனால் போகப்போக குரேஷிகளின் நிலைப்பாடு திட்டவட்டமான மறுப்பிலிருந்து இரு தரப்பையும் ஓரளவுக்கு திருப்த்திப்படுத்தக்கூடிய ஒரு சமரசத்தை எட்டுவதற்கான நிலையை வந்தடைந்தது. அவர்களுக்கு உத்மான்(ரழி) இன் பாணி பிடித்திருந்தது. அவருடன் பேசுவதும் அவர்களுக்கு இலகுவாக இருந்தது. எனவே அவரைப் பயன்படுத்தி அரேபியாவில் நிலவி வரும் யுத்த சூழலுக்கு ஓர் முடிவைத் தேடலாம் என்று அவர்கள் விரும்பினார்கள். இதற்கிடையில் உத்மான்(ரழி) முஸ்லிம்களின் முகாமை நோக்கி திரும்பி வருவதற்கு கால தாமதமானது. அத்துடன் அவர் மக்காவில் எங்கிருக்கிறார் என்ற செய்தியும் தெரியாதிருந்தது. அந்த சந்தர்ப்பம் பார்த்து முஸ்லிம்கள் மத்தியில் உத்மான்(ரழி) அவர்களை குரைஷிகள் கொலை செய்து விட்டனர் என்றதொரு வதந்தி பரவத் தொடங்கியது. முஸ்லிம்கள் இந்த செய்தியால் மிகுந்த கோபமடைந்தனர். குரைஷிகளுக்கு எதிராக யுத்தம் செய்வதற்கு அவர்கள் ஆயத்தமானார்கள்.
பெருமானார்(ஸல்) தான் இதுவரை வகித்த நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்வதற்கு ஆயத்தமானார்கள். தான் தூதுவராக அனுப்பிய உத்மானை(ரழி) புனித மிக்க மாதம் ஒன்றில் கொலை செய்து துரோகம் செய்த குரைஷிகளுக்கு எதிராக கடுமையான முடிவொன்றுக்கு வருவதைத் தவிர அவருக்கு வேறு வழியிருக்கவில்லை. எனவே அவர்கள்(ஸல்) தனது தோழர்களைப் பார்த்து “நாம் எமது எதிரிகளுடன் போராடாமல் இங்கிருந்து திரும்பப் போவதில்லை” என்று சூழுரைத்தார்கள். இறைத்தோழர்கள் அனைவரையும் ஒரு மரத்தின் அருகே அழைத்து குரைஷிகளை எதிர்த்து இறுதி மூச்சு வரை போராடுவதற்கான சபதத்தை தனக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்கள். இறைத்தோழர்களும் அவரின் கை மீது தமது கைகளைக் வைத்து பைஆ செய்தார்கள். நபி(ஸல்) தனது மறு கையை உத்மான்(ரழி) அவர்களின் சார்பாக வைத்து சபதம் எடுத்துக்கொண்டார்கள். இந்த பைஆ பையத்துல் ரித்வான் என்று அறியப்படுகிறது. இந்த பைஆ தொடர்பாக அல்லாஹ்(சுபு) தனது திருமறையில் பின்வருமாறு தெரிவிக்கிறான்,
لَّقَدۡ رَضِىَ ٱللَّهُ عَنِ ٱلۡمُؤۡمِنِينَ إِذۡ يُبَايِعُونَكَ تَحۡتَ ٱلشَّجَرَةِ فَعَلِمَ مَا فِى قُلُوبِہِمۡ فَأَنزَلَ ٱلسَّكِينَةَ عَلَيۡہِمۡ وَأَثَـٰبَهُمۡ فَتۡحً۬ا قَرِيبً۬ا
“முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.” (சூரா அல் ஃபத்ஹ் 48:18)
இவ்வாறு பைஆ பெறப்பட்டு முஸ்லிம்கள் போருக்கு தயார் நிலையில் நிற்கும்போது உத்மான்(ரழி) அவர்கள் கொல்லப்படவில்லை என்ற செய்தி முஸ்லிம்களை வந்தடைந்தது. உத்மானும்(ரழி) திரும்பி வந்து தனது பேச்சுக்களின் முடிவுகள் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு விளக்கிக் கூறினார்கள். அதன்படி நிறுத்தப்பட்டிருந்த பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பித்தன. இரண்டு முகாம்களுக்கு இடையில் கையெழுத்திடப்பட வேண்டிய தற்காலிக போர் நிறுத்தம் குறித்தும், அத்துடன் ஹஜ் மற்றும் உம்ரா செய்வது தொடர்பான பரந்த பிரச்சினைகள் குறித்தும் அல்லாஹ்வின் தூதருடன் (ஸல்) பேச்சுவார்த்தை நடத்த குரைஷிகள் சுஹைல் இப்னு அம்ரை அனுப்பி வைத்தனர். குரைஷிகள் ஓர் இக்கட்டான நிபந்தனையுடன் பேச்சுக்களை ஆரம்பித்தனர். அதாவது முஸ்லிம்கள் இவ்வருடம் ஹஜ்ஜை நிறைவேற்றாது மதீனாவுக்கு திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும்.
எனினும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விதித்த விதிமுறைகளில் சமாதான பேச்சுக்களை தொடர்ந்து நடாத்துவதற்கு ஒப்புக்கொண்டார். அவரைப் பொருத்தமட்டில் அவர் ஆரம்பத்தில் எதனை மனதில் கொண்டு மதீனாவிலிருந்து வெளியேறி வந்தாரோ அந்த திட்டத்தின் இலக்கை குரைஷிகளின் நிபந்தனைகள் பாதிப்பதாக இருக்கவில்லை. மாறாக இந்தப்பேச்சுக்கள் அவருக்கு சாதகமாகவே அமைந்திருந்தன. அவரைப் பொருத்தமட்டில் இவ்வாண்டு ஹஜ் செய்வதா? இல்லையா? என்பது முக்கியமாக இருக்கவில்லை. உண்மையிலேயே அவர் விரும்பியது கைபரை குரைஷிலிருந்து தனிமைப்படுத்துவதும், இஸ்லாத்தின் செய்தியை அரேபியா எங்கும் பரப்புவதற்கு அவருக்கும், அரேபியர்களுக்கும் இடையில் இருந்த அனைத்து தடைகளையும் நீக்குவதாகும். எனவே குரைஷிகளுடன் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு தமக்கிடையிலான யுத்தத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய யுத்த நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு அவர் விரும்பினார். ஹஜ் மற்றும் உம்ராவை பொருத்தவரையில் அதனை அடுத்த வருடமும் செய்யலாம் என்ற நிலைப்பாட்டிலேயே அவர் இருந்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுஹைல் இப்னு அம்ருடன் போர் நிறுத்தம் மற்றும் அதன் நிபந்தனைகள் குறித்த நீண்ட, நுட்பமான பேச்சுவார்த்தைக்குள் இறங்கினார். பேச்சுக்கள் சில நேரங்களில் கடினமானதாகவும், அல்லாஹ்வின் தூதரின் (ஸல்) சாதுரியம் மட்டும் இல்லாதிருந்தால் முற்றாக ஸ்தம்பித்துவிடும் நிலையையும் கண்டு வந்தது. முஸ்லிம்கள் இந்த பேச்சுக்களின் முன்னேற்றங்களை உன்னிப்பாகப் அவதானித்து வந்தார்கள். அவர்களைப் பொருத்தமட்டில் இப்பேச்சுக்கள் கஃபாவை தரிசிப்பது பற்றியது என்று நினைத்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்பேச்சுக்களின் மூலம் எப்படியாவது ஓர் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி விடவேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். இது முஸ்லிம்களுக்கு விசனத்தை ஏற்படுத்தினாலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ இதனை ஓர் ஆசீர்வாதமாகக் கருதினார்கள். எனவே தான் விரும்பிய வழியில் பேச்சுக்களை நடத்திச் சென்ற அவர்கள், பேச்சுக்களின் உள் விபரங்கள் பற்றியோ, குறுகிய கால நன்மைகள் பற்றியோ பொருட்படுத்தவில்லை. இறுதியில் சில முக்கிய நிபந்தனைகளில் உடன்பாடுகள் எட்டப்பட்டவுடன், இரு தரப்புக்கும் மத்தியில் ஓர் உடன்படிக்கை தயாரானது.
இந்நிலை முஸ்லிம்களின் கோபத்தைத் தூண்டியதுடன், அவர்கள் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்து போரைத் தேர்ந்தெடுக்குமாறு அல்லாஹ்வின் தூதரை (ஸல்) வற்புறுத்த முயன்றனர். உமர்(ரழி), அபூபக்கரிடம்(ரழி) சென்று, “எங்கள் தீனுக்கு இழிவை ஏற்படுத்தும் ஒன்றை நாங்கள் ஏன் ஒப்புக் கொள்ள வேண்டும்? என்று கூறி குரைஷிகளின் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதரை (ஸல்) வற்புறுத்த தன்னுடன் வருமாறு அழைத்தார். எவ்வாறாயினும், அபுபக்கர்(ரழி) அத்தகைய முனைப்பிலிருந்து உமரை தடுக்க முயற்சித்தாலும் அது பயனளிக்கவில்லை. இறுதியில் உமர்(ரழி) தானே முஹம்மத்(ஸல்) அவர்களைச் சந்தித்து தனது கோபத்தையும், விசனத்தையும் வெளிப்படுத்தினார். இருப்பினும், அது அல்லாஹ்வின் தூதரின் முடிவில் சலனத்தை ஏற்படுத்தவில்லை. பெருமானார்(ஸல்) உமரை நோக்கி “உமரே! நான் அல்லாஹ்வின் அடிமையும் அவனது தூதருமாவேன். நான் ஒருபோதும் அவனுடைய கட்டளைக்கு விரோதமாய் போகமாட்டேன;. மேலும் அல்லாஹ்(சுபு) என்னை தோல்வியடைச் செய்யவும் மாட்டான்.” என்று கூறினார்கள்.
பின்னர் ஒப்பந்தத்தை எழுதுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அலி இப்னு அபி தாலிப்பை(ரழி) வரவழைத்து, “அல்லாஹ்வின் பெயரால் – அவன் அர்-ரஹ்மான், அர்-ரஹீம் ” என்று எழுதச் சொன்னார்கள். அதற்கு சுஹைல், “கொஞ்சம் பொறுங்கள்! அர்-ரஹ்மான், அர்-ரஹீமை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே “என் இறைச்சகனின் பெயரால்” என்று எழுதுங்கள் என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அலிக்கு அவர் கூறியபடி எழுதச் சொல்ல அவரும் அவ்வாறு செய்தார்.
பின்னர் அலியிடம் இறைத்தூதர் (ஸல்), “இந்த ஒப்பந்தத்தை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத், சுஹைல் இப்னு அம்ர் உடன் ஒப்புக் கொண்டார்.” என எழுதுங்கள் என்று வேண்டினார்கள். அதற்கும் சுஹைல், “பொறுங்கள்! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் ஏற்றுக்கொண்டிருந்தால் நான் உங்களுடன் சண்டையிட்டிருக்க மாட்டேன். எனவே உங்கள் சொந்த பெயரையும் உங்கள் தந்தையின் பெயரையும் சேர்த்து எழுதுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்
அதனையும் ஒப்புக்கொண்ட பெருமானார்(ஸல்) ”இது முஹம்மது இப்னு அப்துல்லாஹ், சுஹைல் இப்னு அம்ர் உடன் ஒப்புக் கொண்ட ஒப்பந்தமாகும்” என்று அலியை எழுதச் சொன்னார்கள். இந்த தொடக்க வரிகளுக்குப் பிறகு இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் பின்வரும் முக்கிய விதிமுறைகள் எழுதப்பட்டன.
1) இரு தரப்பினரும் ஒப்பந்த காலப்பகுதியில் போரிலிருந்தும், விரோதங்களிலிருந்தும் தவிர்ந்திருப்பது.
2) குரைஷிகளிடமிருந்து யாராவது இஸ்லாத்தைத் தழுவி, தனது பாதுகாவலரின் அனுமதியின்றி முஹம்மது (ஸல்) அவர்களிடம் வந்தால், நபி(ஸல்) அந்நபரை அவரது பாதுகாவலரிடம் திருப்பி அனுப்ப வேண்டும். மேலும் முஹம்மத்(ஸல்) அவர்களிடமிருந்து யாராவது குரைஷிகளை நோக்கி வந்தால் அவர்கள் அவரை முஹம்மது(ஸல்) அவர்களுக்கு திருப்பித் தர வேண்டியதில்லை.
3) முஹம்மத்(ஸல்) உடன் கூட்டணி வைக்க அரேபியர்களிடமிருந்து எவர் விரும்புகிறாரோ அவர் அவ்வாறு செய்ய முடியும்; மேலும் குரைஷிகளுடன் கூட்டணி வைக்க விரும்பியவரும் அவ்வாறு செய்ய முடியும்.
4) முஹம்மத் (ஸல்) அவர்களும், அவரின் தோழர்களும் இந்த ஆண்டு மக்காவிலிருந்து பின்வாங்கிச் செல்ல வேண்டும். எனினும் அடுத்த வருடம் அவர்கள் சுதந்திரமாக மக்காவிற்குள் நுழைந்து மூன்று இரவுகள் தங்கியிருக்க முடியும். அவர்கள் தத்தமது உறைகளில் வாள்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு மேல் ஆயுதங்களை எடுத்துச் செல்ல முடியாது.
5) இந்த ஒப்பந்தம் அமூலுக்கு வரும் நாளிலிருந்து வரையறுக்கப்பட்ட பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
முஸ்லீம்களின் கோபத்துக்கு மத்தியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும், சுஹைல் இப்னு அம்ருக்கும் இடையில் ஹுதைபிய்யாஹ் ஒப்பந்தம் கைச்சாத்தானது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முஸ்லிம்களின் எதிர்வினையால் கலக்கமடைந்து, உற்சாகமிழந்து இருந்தார். முஸ்லிம்கள் போராட்டத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்ததும், அதற்கு மாறாக தான் அமைதி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதும், அதனால் முஸ்லிம்கள் மனச்சோர்வடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை தர்ம சங்கடமான நிலைக்குத் தள்ளியது. அவரது இந்த நிலையை தன்னுடன் பயணத்தில் வந்திருந்த அவரது மனைவி உம்மு சலமாவிடம்(ரழி) பெருமானார்(ஸல்) முறையிட்டார்கள். அதற்கு உம்மு சலமா(ரழி) “அல்லாஹ்வின் தூதரே, நிச்சயமாக முஸ்லிம்கள் உங்களுக்கு கீழ்ப்படியாதிருக்க மாட்டார்கள்; அவர்கள் தங்களது தீனிலும், அல்லாஹ்(சுபு) மீதான நம்பிக்கையிலும், நீங்கள் கொண்டு வந்த தூதிலும் கொண்ட வைராக்கியத்தினாலேயே அவ்வாறு இருக்கிறார்கள். உங்கள் தலை முடியை நீங்கள் சிறைத்துக் கொள்ளுங்கள்; விலங்குகளையும் அறுத்து பலியிட்டு விடுங்கள்; அவ்வாறு செய்தால் அவர்களும் உங்களை பின்பற்றுவதைக் காண்பீர்கள்; பின்னர் அவர்களை அழைத்துக் கொண்டு மதீனாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்.” என்று ஆலோசனை சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வெளியே வந்து உம்ராவைக் குறிக்கின்ற விதத்தில் தலை முடியை சிறைத்துக் கொண்டார்கள். அந்தச் செயலுக்குப் பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமைதியும், திருப்தியும் அடைந்தார்கள். அவரை அந்த நிலையில் கண்ணுற்ற முஸ்லிம்களும் விலங்குகளை அறுக்கவும், தலை முடியைச் சிறைத்துக்கொள்ளவும் விரைந்தார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தன்னுடன் வந்த முஸ்லிம்களுடன் மதீனாவை நோக்கிப் பயணமானார்கள். அவர்கள் மதீனாவை நோக்கி பாதித்தூரம் சென்ற நிலையில் சூரா அல்-ஃபத்ஹை அல்லாஹ்(சுபு) இறக்கி வைத்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதை முழுவதுமாக நபித்தோழர்களுக்கு ஓதிக் காட்டினார்கள். அப்போதுதான் கைச்சாத்திடப்பட்ட ஹுதாய்பியாஹ் ஒப்பந்தம் உண்மையிலேயே முஸ்லிம்களுக்கு ஒரு தெளிவான வெற்றி என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர்.
முஸ்லிம்கள் மதீனாவுக்கு திரும்பி உடனேயே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கைபரைக் கையாள்வதற்கும், இஸ்லாமிய செய்தியை அரேபிய தீபகற்பத்திற்கு அப்பால் பரப்புவதற்கும், இஸ்லாத்தை அதற்குள் பலப்படுத்துவதற்கும் திட்டங்களை வகுக்கத் தொடங்கினார். அவர் (ஸல்) குரைஷிகளுடனான தனது யுத்த நிறுத்த காலப்பகுதியை பயன்படுத்தி அரேபியாவுக்குள் அவருக்கு எதிராக இருந்த வேறு சில எதிர்ப்பு சக்திகளை ஒழிப்பதில் கவனம் செலுத்துவதற்கும், வெளிநாட்டு உறவுகளை ஏற்படுத்துவதற்கும் விரும்பினார். ஹுதைபிய்யாஹ் உடன்படிக்கை அவற்றை அடைவதற்கு அவருக்கு பெரிதும் உதவியது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ் என்ற ஒரு சாக்குபோக்கை பயன்படுத்தி தனது ஒன்றிணைத்த திட்டத்தை சாதுரியமான நிறைவேற்றி முடித்தார்கள். பல்வேறு சிரமங்கள், தடைகள் இருந்தபோதிலும், அவர் ஏலவே தீர்மானித்திருந்த அனைத்து அரசியல் இலக்குகளையும் அடைந்து கொண்டார்கள். இவ்வாறு சந்தேகத்தின் நிழல் கூட இல்லாத அளவில் ஹுதைபிய்யாஹ் உடன்படிக்கை முஸ்லிம்களுக்கு ஒரு பாரிய வெற்றியாக அமைந்தது.
அதன் அடைவுகளில் முக்கியமானவை:
1) ஹுதைபிய்யாஹ் உடன்படிக்கையின் ஊடாக இஸ்லாமிய தூதுக்கு சார்பாக அரேபியர்களிடையேயும், குறிப்பாக குரைஷிகளிடையேயும், பொதுக் கருத்தை உருவாக்க முடிந்தது. இது முஸ்லிம்களின் மரியாதையை மேம்படுத்தி, குரைஷிகளின் மரியாதையை குறைப்பதற்கும் வழிவகுத்தது.
2) இவ்வுடன்படிக்கை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மீது முஸ்லிம்கள் கொண்டிருந்த விசுவாசத்தையும், நம்பிக்கையும் நிரூபித்தது. முஸ்லிம்களின் இறைநம்பிக்கை அசைக்கமுடியாதது; அவர்களின் தைரியமும், தியாக உணர்வும் ஒப்பீட்டுக்கு அப்பாற்பட்டது என்பதையும் நிரூபித்தது.
3) இஸ்லாமிய அழைப்பை ஊக்குவிப்பதற்கு அரசியல் காய் நகர்த்தல்கள் மிகச் சிறந்த வழியாகும் என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொண்டனர்.
4) காஃபிர்களிடையே மக்காவில் தங்கியிருந்த முஸ்லிம்கள் எதிரியின் கோட்டைக்குள்ளேயே ஒரு அலகை உருவாக்கிக் கொண்டனர்.
5) மேலும், ஹுதைபிய்யாஹ் உடன்படிக்கை, இஸ்லாத்தின் அரசியல் வழிமுறை என்பதும், இஸ்லாத்தின் அதே (அடிப்படை) சிந்தனை, நம்பிக்கை மற்றும் உண்மைத்தன்மையில் இருந்துதான் பெறப்படுகின்றது என்பதை நிரூபித்தது. எனினும் அதன் பிரயோக வழிகள் சாதுரியத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும், எதிரிகளிடமிருந்து எமது பிரயோக வழிகளையும், உண்மையான நோக்கங்களையும் மறைப்பதன் மூலம் அதனை அடைய முடியும் என்பதையும் இவ்வுடன்படிக்கை முஸ்லிம்களுக்கு உணர்த்தியது.