பொஸ்னிய முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை (Genocide) சமீபத்திய நினைவுக்குள் உள்ளடக்கப் படவேண்டியவை. நாம் வாழ்ந்து கொண்டிருந்தபோது நம் கண்ணெதிரே இடம்பெற்ற கொடுமையே அது. அது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஒரு புராதன காட்டுமிராண்டிச் சமூகத்தின் மையத்தில் இடம்பெறவில்லை. உலகில் அதீத முன்னேற்றமடைந்த ஒரு சமூகம் என்று நம்பப்படும் ஐரோப்பிய சமூகத்தின் நடு முற்றத்திலே அந்த அசிங்கம் நடந்து முடிந்தது.
வருடா வருடம் ஜுலை 11 ஆம் திகதி பொஸ்னிய முஸ்லிம்களால் ஞாபகப்படுத்தப்படும் ஸ்ரேப்ரினிகா படுகொலை 1995 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. அந்த சமயத்தில் இந்த அராஜகம் ஐரோப்பாவில் இடம்பெற்றதை பலரும் ஆச்சரியமாக பார்த்தனர். இதுபோன்ற கொடூரங்கள் மனித உரிமைகள் பற்றி உலகுக்கு பாடம் புகட்டும் ஐரோப்பிய சமூகம் ஒன்றினால் நிகழ்த்தப்பட முடியுமா? அதனை முழு உலகமும் பார்த்துக்கொண்டு கைகட்டி நின்றதா? என்ற கேள்விகள் எல்லோருக்குள்ளும் எழுந்தன. ஆனால் உண்மையில் நடந்தது என்னவே அதுதான்.
ஷஹாதத்தை மொழிந்த ‘முஸ்லிம்கள்’ என்ற ஒரே காரணத்துக்காக ஐரோப்பாவின் மையத்தில் இந்த கொடூரம் அரங்கேறியது. முழு உலகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கையில் கற்பழிப்பு, இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு என அனைத்தும் ஒன்றாக எமது முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டன.
பொஸ்னியாவில் நடந்த இனப்படுகொலையின் ஒரு பகுதியாக முஸ்லிம்களை சிறையில் அடைக்கவும், சித்திரவதை செய்யவும், ஒருங்கிணைக்கப்பட்ட வதை முகாம்கள் பயன்படுத்தப்பட்டன. இலட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். கற்பழிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லீம் பெண்கள் கைது செய்யப்பட்டு, பலமுறை படையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். ஸ்ரேப்ரினிகாவில் ஜூலை 1995 இல் வெறும் ஐந்து நாட்களில் 8,000 க்கும் மேற்பட்ட முஸ்லீம் ஆண்களும் சிறுவர்களும் செர்பிய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு பாரிய புதைகுழிகளில் வீசப்பட்டனர்.
பொஸ்னிய முஸ்லிம்களுக்கு எதிரான இன ஒழிப்பு நடவடிக்கை முஸ்லீம்களின் மார்க்கம் மற்றும் கலாச்சார தடயங்கள் அனைத்துக்கும் எதிராகவும் பிரயோகிக்கப்பட்டது. செர்பிய போராளிகள் தாங்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் அமைத்திருந்த அனைத்து பள்ளிவாசல்களையும் டைனமைட்களை பொருத்தி நிர்மூலமாக்கினர். சரேஜெவோவில் உள்ள கீழைத்தேய நிலையம்(ஓரியண்டல் இன்ஸ்டிடியூட்) போன்ற முஸ்லிம்களின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இலக்கு வைத்து தாக்கி அழித்தனர். வரலாற்று சான்றுகளான 5,000 க்கும் மேற்பட்ட பண்டைய கையெழுத்துப் பிரதிகளை கொளுத்தி எரித்தனர். மொத்தமாகச் சொன்னால் இந்த இனப்படுகொலையை நிகழ்த்திய ஐரோப்பிய அயோக்கியர்கள் பொஸ்னியாவில் முஸ்லீம்கள் என்ற ஒரு சமூகம் வாழ்ந்ததற்கான அனைத்து தடயங்களையும் அழித்துவிடுவதற்கு முயற்சி செய்தனர்.
பொஸ்னிய முஸ்லிம்களும், அவர்களுடைய அயலவர்களைப்போல இன ரீதியாக வெள்ளை இன ஐரோப்பியர்கள்தான். முஸ்லிம் அல்லாத ஏனைய ஐரோப்பியர்கள் பேசிய மொழியையே அவர்களும் பேசினர். அவர்கள் அணிந்த அதே ஆடை ஓழுங்குகளையும், அதே வாழ்க்கை முறைகளையும் பின்பற்றியே அவர்களும் வாழ்ந்து வந்தனர். ஆயினும்கூட உலகம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அவர்களின் சொந்த மண்ணிலேயே ஒரு பயங்கரமான இனப்படுகொலைக்கு பலியாக வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.
முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் பல நூற்றாண்டுகளாக ஒன்றாக நிம்மதியாக வாழ்ந்த ஒரு சமூகத்தில், அதுவும் இன்றைய நவீன யுகத்தில் இவை அனைத்தும் எப்படி திடீரென நடந்திருக்க முடியும் என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா?
உண்மை என்னவென்றால், இனப்படுகொலை போன்ற குற்றங்கள் திடீரென்று நடந்தேறும் ஒன்றல்ல. இத்தகைய தீவிர குற்றங்களுக்கு அடித்தளம் அமைக்கும் கட்டங்கள் பல உள்ளன. ஒரு சமூகம் இனப்படுகொலையை நோக்கி இழுத்துச் செல்லப்படும் படிப்படியான செயல்முறை பற்றி, இனப்படுகொலையின் வரலாற்றைக் ஆய்வு செய்யும் கல்வியாளர்கள் நிறையவே குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் பொதுவாக இந்த நிலைகளை 8 நிலைகளாக பகுப்பாய்வு செய்கிறார்கள். இந்த கட்டங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து கட்டங்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் வந்தாலும் கூட, ஒரு விடயம் மிகத் தெளிவானது. அதாவது மனிதகுலத்திற்கு எதிரான இத்தகைய குற்றங்களுக்கு வழிவகுக்கும் நிகழ்வுகளுக்கு இடையே ஒரு படிமுறை வளர்ச்சியும் ஒற்றுமையும் இருக்கின்றன. இதனை ஜெர்மனி, ருவாண்டா, பொஸ்னியா அல்லது இன்று ரொஹிங்யா முஸ்லிம்களின் இன அழிப்பு அனுபவங்களின் காணலாம்.
இனப்படுகொலையின் 8 நிலைகள் பின்வருமாறு வகைப்படுத்துகிறார்கள்…
வகைப்படுத்தல்(Classification), குறியிடுதல்(Symbolization), மனிதநீக்கம் செய்தல் (Dehumanization), ஒழுங்கமைத்தல்(Organization), துருவப்படுத்தல்(Polarization), தயார்ப்படுத்தல்(Preparation), அழித்தல்(Extermination), மறுத்தல்(Denial). இந்த வகைகளின் மிகச்சுருக்கமான விளக்கம் கட்டுரையின் முடிவில் வழங்கப்பட்டுள்ளது…
இந்த படிநிலைகளின் வகைப்படுத்தல்(Classification), குறியிடுதல்(Symbolization), மனிதநீக்கம் செய்தல் (Dehumanization) ஆகிய முதல் 3 முக்கிய நிலைகளை எடுத்துப் பார்ப்பது மட்டும் இதன் பாரதூரத்தை புரியப் போதுமானதாகும்.
முதலில், ‘நாம் Vs அவர்கள்’ (Classification) என்ற வேற்றுமைச் சிந்தனை மக்களின் மனதில் உருவாக்கப்படுகிறது. ‘அவர்கள்’ , ‘எம்மிலிருந்து’ வேறுபட்டவர்கள் என்ற விதை பரவலாகத் தூவப்படுகிறது. பொதுத்தன்மைகள் புறக்கணிக்கப்பட்டு, வேறுபாடுகள் பாரியதாக அவர்களுக்கு காட்டப்படுகின்றன.
இரண்டாவதாக, இந்த மற்ற சமூகக்குழு தனிமைப்படுத்தப்பட்டு, குறிப்பான அடையாளங்களுடன் (Symbolization) அடையாளப்படுத்தப்படுகிறது. முஸ்லிம்களைப் பொறுத்தவரை இவை ஹிஜாப் அல்லது தாடி போன்ற பாரம்பரிய முஸ்லீம் ஆடைக் குறியீட்டின் பகுதிகளாக இருக்கலாம்.
மூன்றாவதாக, அந்த சமூகக்குழு மனிதநீக்கம் செய்யப்படுதல் (Dehumanization) – அவர்கள் ஏனையவர்களிலிருந்து தாழ்ந்த சமூகக்குழுவாக வரையறுக்கப்படுதல். அவர்களின் உயிரும், உடமையும், வாழ்க்கையும் ஏனையவர்களைப்போன்று மதிப்பிடப்படாது – இறுதியில் அவர்கள் மனிதனை விட குறைவான தரத்தில் நோக்கப்படுகிறார்கள். இந்நிலையை ஓர் சமூகம் அடைந்து விடும்போது அவர்களுக்கு எதிரான அத்துமீறலும், அழிப்பும் சாதாரணமான ஒன்றாக மாற்றப்படுகிறது. இது ஒரே இரவில் நடந்து விடுவதில்லை. இது ஒரு செயல்முறையின் பகுதியாக மெதுமெதுவாக இடம்பெறுகின்றது.
இந்த முதல் படிகளில் பௌதீகத்தாக்குதல் பெருமளவிலோ அல்லது பாரதூரமாகவே இடம்பெறுவதில்லை. இங்கே பிரதான ஆயுதமாக வெறும் சொற்களும், வாக்கியங்களுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை அனைத்து உரிமைகளையும், சுதந்திரங்களையும் மறுப்பதற்கும், இறுதியில் இந்த சொற்போரால் முத்திரை குத்தப்பட்ட மக்களைக் கொன்றொழிப்பதற்கும் வழி வகுக்கின்றன. இந்த படிநிலை நடவடிக்கைகள் இனப்படுகொலையின் ஒரு முக்கிய பகுதியாகும் என்பதை மக்கள் முன்கூட்டியே உணர்ந்திருப்பது அவர்களின் இருப்புக்கும், பாதுகாப்புக்கும் இன்றியமையாததாகும்.
இலங்கை, இந்திய முஸ்லிம்களும் இவ்வரலாறுகளிலிருந்து அதிக பாடங்களை கற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இனப்படுகொலையின் 8 நிலைகள்:
1. வகைப்படுத்தல்(Classification): அனைத்து கலாசாரங்களும் மக்களை இன, மத, மொழி ரீதியாக வகைப்படுத்தும் தன்மை கொண்டவைதான். அவை இயல்பான நிலையைத்தாண்டி ஒடுக்குதலை அடிப்படையாகக் கொண்டு இடம்பெறும்போது, அது இனப்படுகொலைக்கான முதற்கட்டமாக மாறுகிறது. அங்கே நாங்கள் Vs அவர்கள் என்ற பார்வை பூதாகரமாக மாற்றப்படுகிறது.
2. குறியிடுதல்(Symbolization): வேறுபட்ட சமூக அடையாளங்களை குறியீட்டின் ஊடாக இனம்காண்பது பொதுவான உலக வழமையாக இருந்தாலும், அது தம்மிலிருந்து வேறுபட்ட சமூகத்தை மனித நீக்கம்(Dehumanization) செய்யும் நிலைநோக்கி நகரும்போது அது இனப்படுகொலைக்கான ஓர் படிநிலையாகப் வகைப்படுத்தப்படுகிறது.
3. மனிதநீக்கம் செய்தல் (Dehumanization): ஒரு சமூகக்குழு ஏனைய சமூகக்குழுவை மனிதர்களாக நோக்குவதிலிருந்து விலகிச் செல்லல். அதாவது அவர்களை மிருகங்களுக்கோ, கொடிய பூச்சிகளுக்கோ, நச்சுக்கிருமிகளுக்கோ அல்லது தொற்று நோய்களுக்கோ ஒப்பாக நோக்குதல். இத்தகைய மனிதநீக்க மனநிலை ஒரு சமூகத்துக்குள் வளரும்போது அவர்களிடையே கொலைசெய்வதன் மீது இருக்கின்ற இயல்பான வெறுப்பு நிலை மறத்துப்போகிறது. இந்தக்கட்டங்களில் மனித நீக்கத்துக்கு உட்படுத்தப்படும் சமூகக்குழுவுக்கு எதிராக ஊடகங்களில் வெறுப்புப் பிரச்சாரங்கள் (Hate Propaganda) வளர்ந்து வருவதைக் காணலாம்.
4. ஒழுங்கமைத்தல்(Organization): இனப்படுகொலைகள் அரசுகளினாலேயே பெரும்பாலும் ஒழுங்கு செய்யப்படுகின்றன. அரச படையினரோ, அல்லது உத்தியோக பூர்வமற்ற பினாமிக்குழுக்களோ அல்லது தீவிரவாதக்குழுக்களோ அதனை அரசின் அனுசரணையுடன் மேற்கொள்கின்றன. அதற்கான திட்டங்கள் முன்கூட்டியே தீட்டப்படுகின்றன.
5. துருவப்படுத்தல்(Polarization): ஒரு சமூகத்துக்குள் இருக்கின்ற தீவிரவாதக்குழுக்கள், சமூகக் குழுக்களுக்கு இடையிலான தொலைவை மிகவும் தூரப்படுத்தி விடுகின்றனர். வெறுப்புப் பிரச்சாரக்குழுக்கள் துருவப்படுத்தலை கூர்மைப்படுத்தும் பிரச்சாரங்களை முடுக்கி விடுகின்றனர். சமூக இணைப்புக்கான வழிகளை தடைசெய்யும் சட்டங்களும் உருவாக்கப்பட்டு இந்த நிலைக்கு அணி சேர்க்கப்படலாம். தீவிரக்குழுக்கள் மிதவாத சிந்தனை கொண்ட மைய நீரோட்டக்குழுக்களை மிரட்டியோ, மலினப்படுத்தியோ அமைதிப்படுத்தி விடுகின்றனர்.
6. தயார்ப்படுத்தல்(Preparation): இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படுவோர் அவர்களின் இன, மத, மொழி, நிற அடையாளங்களைக் கொண்டு வெறுபிரிக்கப்படுவர். கொலைப்பட்டியல் கூடத் தயாரிக்கப்படும். அவர்களுக்கென விசேட அடையாளப்படுத்தல் முறைகள் அறிமுகப்படுத்தப்படலாம். அவர்களின் உடமைகள் பறிமுதல் செய்யப்படுவதற்காக ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரும். அவர்கள் சேரிப்பகுதிகளிலோ (ghettos) , திறந்தவெளி சிறைச்சாலைகள் போன்ற சூழல்களிலோ அடைக்கப்படும் நிலையும் ஏற்படலாம்.
7. அழித்தல்(Extermination): கடைசியாக சட்ட ரீதியாக இனப்படுகொலை(Genocide) என்று அழைக்கப்படும் முற்றான அழித்தொழிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகும். படுகொலைகளை செய்பவர்களைப் பொருத்தமட்டில் அச்செயல் வெறும் பயிர்களுக்கு நடுவே படர்ந்த களைகளை அகற்றும் அழிப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படும். ஏனெனில் அக்கனத்தில் அவர்களால் கொல்லப்படுபவர்களை அவர்கள் சக மனிதர்களாக பார்க்க மாட்டார்கள். இச்செயலை அரசு முன்னின்று நடத்தும்போது அதனை அரச படைகள் தமது கூலி ஆயுதக்குழுக்களைக் கொண்டு நடைமுறைப்படுத்தும்.
8. மறுத்தல்(Denial): இனப்படுகொலை படிநிலையின் இறுதியாக அந்த செயலை மூடிமறைக்கும் மறுத்தல் என்ற செயற்பாட்டை அதனை நடத்தி முடித்தவர்கள் திட்டமிட்டு மேற்கொள்வார்கள். இனப்படுகொலையால் இறந்தவர்களின் உடல்களை பாரிய புதைகுழிகளில்(Mass Graves) புதைத்தோ அல்லது எரித்து சாம்பலாக்கியோ தடயம் இல்லாது செய்து விடுவதற்கும் அவர்கள் முயற்சிப்பார்கள். தாம் எத்தகைய தவறையும் செய்யவில்லை என்றும், பாதிக்கப்பட்ட சமூகமே உண்மையில் தவறிழைத்தவர்கள் என்றும் அவர்கள் நிறுவுவதற்கு கடுமையாக முயற்சிப்பார்கள். சம்பவம் தொடர்பான சுதந்திரமான விசாரணைக்கு ஒத்துழைப்பை வழங்க மறுப்பார்கள். இத்தகைய படுகொலைகளுக்கு காரணமான தலைமைகள் இயன்ற வரை ஆட்சியில் நிலைத்து நிற்க பிரயத்தனம் மேற்கொண்டு, இறுதியில் அதிகாரத்தில் இருந்து இறங்கும் நேரம் வரும்போது, நாட்டை விட்டு தப்பி ஓடும் நிலை ஏற்படும்.