அமெரிக்க இராணுவம் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி இலங்கைக்குள் நுழைவதற்கு, அமெரிக்காவுடனான Status of Forces Agreement (SOFA) உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ள தகவலை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் பந்துல குணவர்தன ஜூலை 1 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிப்படுத்தினார். அமெரிக்க நட்பு நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் இதே ‘உடன்படிக்கையை’ சில மாதங்களுக்கு முன்பு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சர்ச்சைக்குரிய மில்லேனியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் காம்பாக்ட் மானியத்தின் (எம்.சி.சி) நிலை குறித்து விரிவுபடுத்த ஜூலை 01 ஆம் திகதி ஊடகவியளாளர் நிகழ்வை மேற்கொண்ட அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, இலங்கை அரசு SOFA உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட தகவலை வெளிப்படுத்தினார்.
இந்த SOFA உடன்படிக்கையானது 2017 இல் கையெழுத்திட்ட 83 பக்க Acquisition and Cross-Services Agreement (ACSA) ஐ திறம்பட செயல்படுத்த உதவும் எனக் கருதப்படுகிறது. இந்த உடன்படிக்கை குறித்து அமெரிக்க தூதர் அலினா டெப்லிட்ஸ் கடந்த ஆண்டு மே 24 ஆம் திகதி வெளியிட்ட பொது அறிக்கையில் “இந்த உடன்படிக்கை அமெரிக்கப் படைகள் நாட்டிற்குள் உலாவுவதற்கும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கும்” என்று குறிப்பிட்டார்.
அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பந்துல குணவர்தன கூறுகையில் “அனைத்து ஒப்பந்தங்களும் எங்கள் அரசியலமைப்பிற்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று நாங்கள் ஒரு முடிவை எடுத்துள்ளோம்; அவை நமது தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கக் கூடாது; தேசத்தின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மீறக்கூடாது. இந்த அடிப்படைக் கொள்கைகளை மீறும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் இலங்கை கையெழுத்திடாது. நாங்கள் எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை, இதற்கான தங்களது கருத்துக்களை அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களிடமும் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ கோரியுள்ளார். நாங்கள் (ACSA) மற்றும் (SOFA) உடன்படிக்கைகளிலேயே கைச்சாத்திட்டுள்ளோம்” என்று கூறினார்.
இதுவே அமெரிக்காவிற்கும், இலங்கைக்குமிடையிலான (SOFA) உடன்படிக்கை நிறை வேற்றப்பட்டமைக்கான முதல் உத்தியோக பூர்வ அறிவிப்பாகும்.
அமெரிக்க துருப்புக்கள் எந்தவிதமான கட்டுப்பாடுகளின்றி இலங்கை மண்ணுக்குள் எவ்வாறு நுழைய முடியும் என்ற பொதுமக்களின் கூச்சல் காரணமாகவே SOFA உடன்படிக்கை கையெழுத்திடுவதில் தாமதம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு மே 24 ஆம் திகதி கண்டி மால்வத்த உயர் பீடத்தினுடனான சந்திப்பின் போது அமெரிக்க தூதர் டெப்லிட்ஸ் SOFA உடன்படிக்கை குறித்து விளக்கமளிக்கையில் இலங்கைகுள் அமெரிக்கா தனது இராணுவ முகாமொன்றை நிறுவுவதற்கு முயல்கிறது என்ற குற்றச்சாட்டை நிராகரித்த அவர், ஆனால் இவ் ஒப்பந்தம் அமெரிக்க துருப்புக்கள் எந்தவிதமான கட்டுப்பாடுகளின்றி இலங்கைகுள் நுழைய அனுமதிக்கும் என்பதை உறுதியாக கூறினார். மேலும் இவ் ஒப்பந்தம் “அமெரிக்கப் படைகள் நாட்டிற்குள் உலாவுவதற்கும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கும்” என்றும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் இவ்வகையான ஒப்பந்தங்கள் நாட்டின் பாதுகாப்பு துறை மற்றும் ஏனைய துறைகளை பலப்படுத்துவதற்கு மிக பயனுள்ளதாக அமையும் என்றும் கூறினார். ஆனால் அந்த ‘ஏனைய துறைகள்’ எவை என அவர் விளக்கிக் கூறவில்லை.
இந்த இராஜதந்திர அறிக்கை, அமெரிக்க படைகளும் அதன் பணியாளர்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை இலங்கையில் எந்த விதமான பரிசீலனைகளுக்கும் உட்படுத்தாமல் சுதந்திரமாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய அனுமதி உள்ளது என்றும், இவர்கள் இலங்கைக்குள் எந்தவொரு வரியோ, கட்டணங்களோ செலுத்த வேண்டிய தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறது. மேலும் இந்த SOFA உடன்படிக்கையின் பிரகாரம் அமெரிக்க பாதுகாப்புத் துறை மற்றும் அதன் பணியாளர்கள் தங்களுக்குத் தேவையான எந்தவொரு தனிப்பட்ட சொத்து, உபகரணங்கள், பொருட்கள், தொழில்நுட்பம், பயிற்சி அல்லது சேவைகளை இலங்கைக்குள் எந்த விதமான கட்டுப்பாடுகளும் பரிசோதனைகளும் இல்லாமல் இறக்குமதி செய்யவும் ஏற்றுமதி செய்யவும் அனுமதி உண்டு.
மேற்படி இராஜதந்திர அறிக்கையில் ரகசியமாக குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளையும் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வாஷிங்டன் விரும்புகிறது. இராஜதந்திர அறிக்கையின் நோக்கமும் அதுதான். இலங்கை ஏற்கனவே SOFA உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பந்துல குணவர்தன இந்த வாரம் கொழும்பில் வெளிப்படுத்திய தகவலானது அமெரிக்க தூதரக இராஜதந்திர அறிக்கையின் நிபந்தனைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்பதையே குறிக்கிறது என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.