நடக்கவிருக்கின்ற பாராளுமன்றத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்கலாம் என்கின்ற யோசனையில் சிலரும்; உலகமே புரண்டாலும் நாங்கள் ‘யானை’, நாங்கள் ‘மொட்டு’ என்று சிலரும்; எவர் எங்களை தேர்தலுக்கு முன்பு கவனிக்கின்றாரோ அவருக்குதான் எங்கள் வாக்கு என்று சிலரும்; எதற்காவது போட்டுவிட்டு வரலாம் என்று சிலரும் இப்போதே யோசனை செய்ய ஆரம்பித்திருப்பீர்கள்.
நாம் யாருக்கு வாக்களிக்கலாம் என்கிற யோசனையை ஓரமாக வைத்துவிட்டு, ஒரு முக்கியமான விஷயம் பற்றி கொஞ்சம் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
உண்மையில் நாம் வாக்களித்து வெற்றிபெற வைத்தவர்களால் மக்களுக்கு நல்லது நடந்திருக்கின்றதாயென்றால் நிச்சயமாக கிடையாது என்பதை தொடராக அரசியல் நகர்வுகளை அவதானிப்போர் இலகுவாக உணர்ந்துகொள்வர். மக்களுக்கு நல்லது செய்கிறோமென்கிற பெயரில் அவர்கள் எதையாவது செய்திருப்பார்கள்; அதைப்பற்றி நான் பேசவில்லை.
மாறாக பெரும்பான்மையான மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டனவா என்று பார்த்தால், நிச்சயமாக அது பூர்த்தியாகியதென்று எவராலும் சொல்ல முடியாது. காரணம் நாம் வாக்களித்து அதிகாரத்தில் அமர்த்திய அரசியல்வாதிகளால் மக்களின் அன்றாட வாழ்க்கைச்சுமையின் ஒரு கிராமைக்கூட குறைக்க முடிந்ததில்லை. ஆனால் ஜனநாயக அரசியலில் வாக்களிக்கும் மக்களாகிய நாமோ வெறுமனவே நமக்கு வேண்டப்பட்டவர் அதிகாரத்திற்கு வர வேண்டுமென்று விரும்புகிறோம்; அவர் வெற்றிபெற்றால் அதனை நாம் அடைந்த வெற்றியாகக் கொண்டாடுகின்றோம்; உண்மையில் இங்கே என்ன நடக்கிறது?
இலங்கையின் கிரிக்கட் துறை பற்றி எதிரும் புதிருமான விடயங்கள் பேசப்பட்டு வரும் இந்த தினங்களில் இடம்பெற இருக்கின்ற 2020 பாராளுமன்ற தேர்தலையும், 20/20 கிரிக்கட் பந்தையப் போட்டியையும் ஒப்பீடு செய்து பார்த்தால் என்ன? என்று ஓர் சிந்தனை வந்தது எனக்கு. ஒரு கணம் 20/20 கிரிக்கட் பந்தையத்தை மனதில் நிறுத்திப் பாருங்கள். அதற்கு சிலபேர் Sponsor பண்ணியிருப்பார்கள்; பல நிறுவனங்கள் விளம்பரங்களை செய்திருப்பார்கள்; போட்டியாளர்கள் விளையாடுவார்கள்; அதே நேரம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும், பார்வையாளர்களும் தங்களுடைய சொந்தப்பணத்தை செலவளித்து அனுமதிச்சீட்டு வாங்கி, போட்டியைப் பார்ப்பதற்கு வந்திருப்பார்கள்; மக்கள் திரளும் இடங்களில் சிறிதாக ஏதாவது சில்லறை வியாபாரம் செய்து பணம் திரட்டலாம் எனக் கருதி சில குட்டி முதலாளிகளும் முந்திக் கொள்வார்கள்.
இதில் போட்டியாளர்களுக்கு போட்டியில் வென்றால் பணம் கிடைக்கும்; எனவே அவர்களது கவனம் முழுவதும் பணத்தில் குவிந்து இருக்கும்; அதே நேரம் வந்த பார்வையாளர்களுக்கு வியாபாரம் செய்வோரும் அதன் மூலம் பணம் திரட்டிக்கொள்வர்; விளம்பரங்களைச் செய்த நிறுவனங்கள் தமது வணிகத்தை கூட்டியிருப்பார்கள்; பார்வையாளர்கள் அனுமதிப்பத்திரத்திற்காக செலவளிக்கும் அந்தப் புதையல் தொகை போட்டிக்கு Sponsor பண்ணியிருப்பவர்களப் போய்ச் சேர்ந்து விடும்; ஆனால் அங்கு வெறுமனே பார்ப்பதற்கும், கை தட்டுவதற்கும் வந்து திரண்ட பார்வையாளர்களின் நிலை என்ன என்பது பற்றி பலரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
அவர்கள் பணத்தையும், நேர காலத்தையும் ஒரு பொழுது போக்கிற்காக விரயமாக்கியதைத் தவிர அவர்களால் வேறு எதனைச் சாதித்திருப்பார்கள்? இந்த அப்பாவிப் பார்வையாளர்களுக்கு போட்டியின் விதிமுறைகளிலோ அல்லது அதன் முடிவுகளிலோ மூக்கை நுழைக்கும் அதிகாரம் கிடையாது. போட்டி உண்மையில் இடம்பெற்றதா? போட்டியின் முடிவில் வெற்றி தோல்வியாவது சுயாதீனமாக நடந்து முடிந்ததா? அல்லது அதைக்கூட முன்கூட்டியே நிர்ணயித்து இருந்தார்களா என்பது கூட அவர்களுக்கு தெரிய வாய்ப்பிருக்காது. ஆனால் பார்வையாளர்கள் தாம் ஆதரிக்கும் அணி சார்பாக கைகலப்பில் ஈடுபட்டு தலையை உடைத்துக் கொள்ளும் சம்பவங்களும் இடம்பெற்று விடுவதுண்டு. இறுதியில் பணத்தையும், நேரத்தையும் பிறரின் முன்னேற்றத்துக்காக தாரை வார்த்து விட்டு வீடு திரும்பும் தேர்வு மட்டும்தான் பார்வையாளர்களுக்கு கிட்டுகிறது.
அடுத்தது என்ன? பார்வையாளர்களிடமிருந்து பிடிங்கிய பணத்தை Sponsor பண்ணிய கம்பனிகளும், நிறுவனங்களும் அடுத்த பந்தயத்துக்கு முதலீடு செய்ய ஆரம்பித்து விடும்; போட்டியாளரும்கூட அடுத்த பணப்பரிசுக்காக தங்களை தயார்ப்படுத்திக்கொள்வர்; வியாபாரிகளும் அடுத்து எப்போது பாரிய இலாபம் காணலாமென்கிற எதிர்பார்ப்புடன் காத்திருப்பர்; ஆனால் இதையுணராத பார்வையாளர்களோ தமக்கு கடுகளவும் அதிகாரமற்ற ஓர் விடயத்துக்காக திரும்பவும் பணத்தை வாரியிறைப்பதற்கு கஷ்டப்பட்டு பணம் சேமித்துக் கொண்டிருப்பர்.
இதுபோன்றதொரு அரங்கேற்றமாகத்தான் ஜனநாயக கட்டமைப்புக்குள் இடம்பெறும் தேர்தல் கூத்தாட்டங்கள் எனக்குத் தெரிகின்றன. இங்கும் வேட்பாளர்களுக்கு கோப்பரேஷன்களும், lobbyகளும் பணத்தை வாரி இரைக்கும்; எதிர்காலத்தில் தம் சார்பான கொள்கைகளை வகுத்து வசதி செய்து தருவதற்காக. இதனை மேற்குலக ஜனநாயகத்தில் மிக நிதர்சனமாகக் காணலாம். எமது நாட்டின் ஜனநாயகமும் அதற்கு விதிவிலக்கல்ல. இடம்பெறும் ஒவ்வொரு தேர்தலுக்கு பின்னாலும், ஒவ்வொரு வேட்பாளர்களும் இதுவரை கொள்ளையடித்த மக்களின் பணத்தை முதலீடாக இடுவார்கள்; அவர்களுக்கு பல விதங்களில் கம்பனிகளும் நிறுவனங்களும் இரகசியமாகவோ, பரகசியமாகவோ Sponsor பண்ணும்; இங்கு தரகர் வேலை செய்வதற்கும் பலர் கார்த்திருப்பார்கள்; கட்சிகளின் கொந்தராத்துக்களை சுமந்து கொண்டும் சிலர் சுற்றித் திரிவார்கள்; இதற்கு நடுவில் தேர்தல் காலத்தை பயன்படுத்திக்கொள்ளும் ஊடகங்களும், நிறுவனங்களும் தமது வியாபாரத்தை பெருக்கிக்கொள்வர். ஆனால் பரிதாபமான நிலையில் ஒரு தரப்பினர் மாத்திரம் இந்த தேர்தல்களில் மும்முரமாக பங்கேற்பர்; அவர்கள் வேறு யாருமல்ல; அது நாங்கள்தான். மக்களாகிய நாங்கள் கிரிக்கட் போட்டிகளின் பார்வையாளர்களை ஒத்தவர்கள். அனுமதிச்சீட்டுக்களை கொள்வனவு செய்து விட்டு தூரத்தில் ஒதுங்கி இருந்து விளையாட்டை வேடிக்கை பார்ப்பதைப்போல வாக்குச்சீட்டுகளை பெட்டியில் இட்டு விட்டு, நாட்டில் நடக்கின்ற அரசியல் கூத்துக்களை வேடிக்கை பார்ப்பதைத்தவிர, எம்மால் இந்த ஜனநாயக விளையாட்டில் வேறு ஒன்றும் செய்ய முடிவதில்லை.
ஜனநாயகமெனும் மனித மனோ இச்சையிலிருந்து உதித்த அரசியலால் நிச்சயமாக நீதி செலுத்தவோ, மக்களின் நலன் காக்கவோ முடியாது. மேலும் மக்களை மனநிறைவடைய வைக்கவும் முடியாதென்பதனை இதிலிருந்து மக்கள் உணர்ந்துகொள்ள முடியும். அப்படியே இவற்றை மக்கள் உணர்ந்து விழித்துக்கொண்டால், எங்கு அவர்களின் சொகுசு வாழ்க்கைக்கு இடை நடுவே முடிவு கட்டி விடுவார்களோ என்று அஞ்சித்தான், காலத்துக்கு காலம், மாதத்துக்கு மாதம் இன, மத, மொழி வாத உணர்வலைகளை தூண்டிவிட்டு மக்களின் சிந்தனைகளையும், நியாயமான கோபத்தையும் திசை திருப்பி விடுகின்றனர். இதுதான் ஜனநாயக கொடுங்கோண்மையின் உண்மை இலட்சணம்.
இதற்குப்பிறகும் இந்த ஜனநாயக மாயையை நம்பி உங்கள் அரசியல் சமூக வாழ்வை நீங்களே ஏமாற்றிக் கொள்ள நினைத்தால் அது பற்றி என்னால் என்னதான் கூற முடியும்?