பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராளுமன்றத்தில் தெற்கு நகரமான கராச்சியில் பங்குச் சந்தை கட்டிடத்தின் மீது இடம்பெற்ற பயங்கர தாக்குதலுக்குப் பின்னால் இந்தியாதான் இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார்.
வெடிகுண்டுகளுடன் ஆயுதம் ஏந்திய நான்கு துப்பாக்கிதாரிகள் இந்த திங்கள்கிழமை பாகிஸ்தான் பங்குச் சந்தையில் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தார்கள். பாதுகாப்புப் படையினர் அவர்களைக் கொல்வதற்கு முன்பு இரண்டு காவலர்களையும் ஒரு போலீஸ்காரரையும் அவர்கள் கொன்றிருந்தனர்.
“இந்த தாக்குதலுக்குப் பின்னால் இந்தியா உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று கான் செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் – இதனை ஒரு நாள் முன்னதாக இந்தியா மறுத்திருந்தது.
கான் தனது குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் அளிக்கவில்லை; ஆனால் பாகிஸ்தானில் தாக்குதல்கள் நடப்பதாக உளவுத்துறை அறிக்கைகள் வந்துள்ளதாகவும், அச்சுறுத்தல் குறித்து தனது அமைச்சரவைக்கு அறிவித்ததாகவும் கூறினார்.
தாக்குதல் நடத்தியவர்கள் பாரிய அளவிலான ஆயுதங்களை வைத்திருந்தார்கள் என்றும், 160 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட 2008 மும்பை தாக்குதல்களைப் பிரதிபலித்து தாக்குதல் நடத்தி, பிணைக் கைதிகளையும் எடுக்க விரும்பியிருந்தனர் என்றும் அவர் கூறினார்.
ஆனால் பாதுகாப்புப் படையினரின் விரைவான பதில் தாக்குதலினால் அவர்களால் அதனை சாதித்துக் கொள்ள முடியாது போனது “ஒரு பெரிய வெற்றி” என்று கான் மேலும் குறிப்பிட்டார்.
தென்மேற்கு மாகாணமான பலூசிஸ்தானில் இருந்து இயங்கும் ஆயுதமேந்திய பிரிவினைவாத குழுவான பலூச் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) தனது ட்விட்டர் செய்தியில் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இந்த குழு 2006 முதல் பாகிஸ்தானில் அதிகாரப்பூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவால் உலகளாவிய பயங்கரவாத குழு எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பாக்கிஸ்தானின் உளவு அமைப்புகள் நாட்டில் இடம்பெற இருந்த குறைந்தது நான்கு பெரிய தாக்குதல்களை வெற்றிகரமாக முன்கூட்டியே முறியடித்துள்ளன; அவற்றில் இரண்டு இஸ்லாமாபாத்தை குறிவைத்திருந்தன – ஆனால் இதுபோன்ற அனைத்து தாக்குதல்களையும் தடுக்க முடியாது என்றும் கான் கூறினார்.
பலூசிஸ்தானில் பிரிவினைவாதிகள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அதன் கனிமச் செல்வம் பாகிஸ்தானின் பணக்கார, சக்திவாய்ந்த மாகாணங்களால் நியாயமற்ற முறையில் சுரண்டப்படுவதாக அவர்கள் புகார் கூறி வருகின்றனர்.
பலூச் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியா மீது குற்றம் சாட்டி வருகிறது. டெல்லி தொடர்ந்து அவற்றை மறுத்து வருகிறது.
2018 ல் கராச்சியில் உள்ள சீனத் தூதரகம் மீதான தாக்குதலுக்கும் பி.எல்.ஏ பொறுப்பேற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.