பிரித்தானியாவை அடித்தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதி நிகழ்ச்சித் திட்டம் – The International Truth and Justice Project (ITJP) மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் – Journalists for Democracy in Sri Lanka (JDS) ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து சித்திரவதையினால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான சர்வதேச தினமாக ஜூன் 26 ஐ முன்னிட்டு இலங்கை தொடர்பான சித்திரவதை வரைபடத்தை முதன்முதலாக தயாரித்துள்ளன. கடந்த மூன்று தசாப்தங்களாக இராணுவம், பொலிஸ், கடற்படை மற்றும் துணை ராணுவத்தினரால் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களை சித்திரவதை செய்ய இலங்கை முழுவதும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 219 தளங்களை இவ் வரைபடத்தில் சித்தரித்துக் காட்டியிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
முழுச்செய்தி வெளியீடு: https://itjpsl.com/assets/press/18-June-torture-map-press-release-2.pdf
ஆனால் தாம் தயாரித்துள்ள வரைபடம் இலங்கையில் நிகழ்ந்த சித்திரவதைகளின் முழுமையான பிரதிபளிப்பல்ல என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உதாரணமாக, ஜே.வி.பி யின் இரண்டு கிளர்ச்சிகளின் போது சித்திரவதைக்கு பயன்படுத்தப்பட்ட காவல் நிலையங்களின் விபரங்கள் அதன் அதிகளவான எண்ணிக்கை காரணமாக இவ்வரைபடத்தில் சேர்க்கப்படவில்லை. ITJP இன் 2006 – 2019 வரையான சான்றுகள் சேகரிக்கும் திட்டத்திலிருந்து பெறப்பட்ட விபரங்கள் மாத்திரம்தான் இதனுள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று வெளியீட்டாளார்கள் தெரிவிக்கின்றனர்.
வியக்கத்தக்க வகையில் 1980களின் பிற்பகுதியில் சித்திரவதைக்கு உபயோகப்படுத்தப்பட்ட கட்டிடங்களில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடமும், அரசு நடத்தும் லேக்ஹவுஸ் செய்தித்தாள் கட்டிடத்தின் அடித்தளமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பல தசாப்தங்களாக இலங்கையின் ஏராளமான பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் சித்திரவதைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன; அத்துடன் தொழிற்சாலைகள், பண்ணைகள், சினிமா கோட்டைகள், அரங்கங்கள் மற்றும் ஒரு கோல்ஃப் மைதானம் கூட அதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கபடுகிறது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கின்ற JDS ஐ சேர்ந்த பஷானா அபேவர்தனே “1987 – 1989 ஆம் ஆண்டுகளில் சிங்கள இளைஞர்களை மிகவும் காட்டுமிராண்டித்தனமாக சித்திரவதை மற்றும் கொலை செய்ய ஆயுதப்படைகளால் பயன்படுத்திய இந்தத் தளங்கள் சமூகத்தின் நினைவிலிருந்து அழிக்கப்பட்டுள்ளன” “ஒரு சமூகத்தின் கூட்டுத் தார்மீக மனசாட்சி வெறுமனே மக்கள் வாழும் முறையால் மாத்திரம் வடிவமைக்கப்படுவதில்லை; மாறாக மக்கள் இறக்கும் விதம் மற்றும் அவர்கள் எவ்வாறு நினைவு கூறப்படுகிறார்கள் என்பதாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது; உயிருள்ளவர்கள் இறந்தவர்களை நினைவில் கொள்ளாத போது, அந்த சமூகம் மிகவும் ஆபத்தான சுய மறுப்பில் உள்ளது; அதனால் இவ்வித அசம்பாவித நிகழ்வுகள் மீண்டும் அந்த சமூகத்தில் நிகழும் ஆபத்து உள்ளது” என்று கூறுகிறார்.
ITJP யின் நிர்வாக இயக்குனர் யாஸ்மின் சூகா கூறுகையில் “இலங்கையில் சித்திரவதை என்பது அரசாங்க அனுசரனையுடன் நடை பெறுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. இது அரசாங்க கொள்கையின் ஒரு முக்கிய கருவியாகும்; இது அரசின் முழு அதிகார மற்றும் கட்டமைப்புகளில் உள்வாங்கப்பட்டு அதற்கமைய கொள்கைகள் வரையப்பட்டு பாதுகாப்புப் படையினரால் அனைத்து மட்டங்களிலும் முழுமையாகப் செயல்படுத்தப்படுகிறது” என்று அவர் கூறினார்.
“கடந்த கால நிகழ்வுகளை கணக்கில் கொண்டு, பாதிக்கப்பட்ட அனைவரையும் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒப்புக்கொண்டு, இத்தகைய தண்டனைக் கலாச்சாரத்தை முழுமையாக அகற்றுவதினூடகவே எதிர்காலத்தில் இலங்கையில் இவ்வாறான வன்முறைகளைத் தடுப்பது சாத்தியமாகும்” என்றும் யாஸ்மின் சூகா மேலும் தெரிவித்தார்.