ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே உள்ள பரஸ்பர கூட்டுறவை அதிகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். பாலஸ்தீனிய பிரச்சினை தொடர்பாக டெல் அவிவ் உடனான கருத்து வேறுபாடுகளையும் மற்ற துறைகளில் ஏற்படும் கூட்டுறவின் பரஸ்பர நன்மைகளையும் வேறு பிரிக்க ஐக்கிய அரபு அமீரகம் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை உலகளாவிய இஸ்ரேல் சார்புப் பரப்புரைக்குழுவான ஏ.ஜே.சி ஏற்பாடு செய்த இணைய மாநாட்டில் பேசிய அன்வர் கர்காஷ், தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் டெல் அவிவ் உடனான தொடர்பை அதிகரிக்க “திறந்த ரீதியிலான தொடர்பாடல்” வேண்டும் என்று வாதிட்டார்.
கர்காஷ் தனது உரையின் போது, பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையின் சில பகுதிகளை ஒருதலைப்பட்சமாக இணைப்பது தொடர்பான இஸ்ரேலின் திட்டமிட்ட முடிவை அபுதாபி எப்போதும் எதிர்க்கிறது என்று வலியுறுத்திய அவர் “அரசியல் சார்ந்த விடயங்களிலிருந்து அரசியல் சாராத விடயங்களை வேறுபடுத்தும்” தனது நாட்டின் கொள்கையை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
“நான் இஸ்ரேலுடன் ஓர் அரசியல் கருத்து வேறுபாட்டைக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஏனைய விடயங்களில் கூட்டுறவை ஏற்படுத்த முயற்சிக்க முடியுமா? ஆம் என்னால் முடியுமென்றே நான் நினைக்கிறேன். அடிப்படையில் நாங்கள் இந்த நிலைப்பாட்டில் தான் இருக்கின்றோம்” என்றார். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு மருத்துவ உதவிகளைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இஸ்ரேலுடன் ஒத்துழைக்காமல் இருப்பதற்கு எங்களிடம் எந்தக் காரணமும் இல்லை என்று அவர் கூறினார்.
கடந்த வாரம் டெல் அவிவில் இரண்டு எமிராட்டி விமானங்கள் தரையிறங்குவதற்கு வழிவகுத்த இத்தகைய ஒத்துழைப்பு, இஸ்ரேலின் திட்டமிட்ட இணைப்பை எதிர்த்து தனது நாடு கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இஸ்ரேல் மீதான பல தசாப்த கால அரபு விரோதப் போக்கு பகைமையை மட்டுமே வளர்த்துள்ளது, அந்த நிலைப்பாடு பொது நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்படுவதை கடினமாக்கியுள்ளது. “இஸ்ரேலிய தரப்பில் அரேபியர்களை அரக்கர்களாக்கும் யோசனையோ அல்லது அரபு தரப்பில் யூதர்களை அரக்கர்களாக்கும் யோசனையோ யாருக்கும் இது வரையில் உதவவில்லை. நாங்கள் அந்நிலைப்பாட்டிலிருந்து வெளியேறி எங்களுக்கிடையிலும் சிறந்த தொடர்பாடல்கள் உள்ளன என்று சொல்ல வேண்டும்” என்று கார்காஷ் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில் “ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு நம்மால் வர முடியும் என்று நினைக்கிறேன், எவ்வாறென்றால் உங்கள் இணைப்புத் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்; இது ஒரு நல்ல யோசனை என்று நாங்கள் நினைக்கவில்லை; அதே நேரத்தில் வேறு பல பகுதிகளான கோவிட், தொழில்நுட்பம் மற்றும் பிற விடயங்களில் நம்மால் உண்மையில் ஒன்றாக இணைந்து பணியாற்ற முடியும் என்று எம்மால் இஸ்ரேலிய அரசாங்கத்திடம் கூற முடியும்.”. “இன்று நாம் காணக்கூடிய விடயம் என்னவென்றால் பேச்சுவார்த்தைகளுக்கும் தொடர்பாடல்களுக்கும் பல வழிகள் திறந்திருக்கின்றன; இது உண்மையில் எங்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் சிறந்த பயனுள்ள முடிவுகளைத் தரும்” என்றும் கூறினார்.
மார்ச் 2019 இல், கர்காஷ் இஸ்ரேல்-அரபு உறவுகளில் ‘மூலோபாய மாற்றத்திற்கு’ பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். மேலும் பல தசாப்த காலமாக அரபு உலகம் யூத அரசை புறக்கணித்து வந்த முடிவு தவறு என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இஸ்ரேலுடனான உறவை சீராக்க அரபு உலகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பதோடு இது பாரிய துரோகம் என்றும் கூறிப்பிடுகிறார்கள். மேலும் பாலஸ்தீனிய அரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்தில் அனுப்பிய பொருட்களை ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.