எமது நாடுகளில் ஜனநாயகம் பெரும்பான்மை சிறுபான்மை அரசியல் சமூக நெருக்கடிகளை மூலதனமாக்கி உயிர் வாழ்ந்து வருகிறது. அது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நேர்மையான தீர்வினைத்தேடாது சமரசத் தீர்வினை வழங்கியோ அல்லது பேரின மக்களை திருப்த்திப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பிரிவினைவாதத்தை வலுவூட்டியோ தனது இருப்பை பாதுகாத்து வருகிறது.
இவ்வாறான அரசியல் சூதாட்டத்தினூடாக பெரும்பான்மை மக்களின் வாக்குகளை தக்கவைப்பதிலும், சிறுபான்மையினர் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து அவர்களை நடைமுறை அரசியல் முறைமை மற்றும் யாப்பின் கீழ் அடிபணியச் செய்து, தமது இனம் சார்ந்த கட்சி அல்லது ஒரு கூட்டணியின் கீழ் இணையச் செய்து, கட்சி அரசியலில் சுழலச் செய்யும் கைங்கரியத்தை ஜனநாயக முறைமை சிறப்பாகச் செய்யும். இதற்கு நிகழ்கால ஆளுங்கட்சியோ அல்லது எதிர்கால ஆளுங்கட்சியோ அல்லது கட்சிக் கூட்டணிகளோ விதிவிலக்கல்ல. எனவே இன்றைய முதலாளித்துவ ஜனநாயக அரசியல் முறைமை நிகழும் சகல நாடுகளிலும், கம்யூனிச, மன்னர், சர்வதிகார ஆட்சி நிகழும் நாடுகளைப் போலவே சிறுபான்மை மக்கள் மற்றும் பழங்குடியினர் நசுக்கப்பட்டும் அவர்களது நம்பிக்கைகள், கலாச்சாரம், விழுமியங்கள், இருப்பு என்பன கேள்விக்கு உட்படுத்தப்படுவது கண்கூடான நிகழ்வாக அரங்கேற்றப்படுகின்றது.
இவ்வாறு குறித்த ஒரு இனம் அல்லது ஒரு மதப்பிரிவினர் தொடர்ச்சியாக நசுக்கப்படும் போது அவர்களது, தற்காக்கும் உள்ளுணர்வு (Survival Instinct) தூண்டப்படும்போது, அந்த உள்ளுணர்வினால் தூண்டப்பட்ட ஒரு சில மக்கள் ஒன்றிணைந்து தமது பிரச்சினைக்கான தீர்வினைப் பற்றிச் சிந்திக்கும் போது, அதற்கான பல்வேறு முறைகள் (இயல்பான அல்லது வலிந்து திணிக்கப்பட்ட தேர்வுக்கள்) அவர்களின் முன்னிலையில் முன்வைக்கப்படும்.
01. இருக்கின்ற அரசை அல்லது மன்னரை அல்லது சர்வதிகாரியைச் சார்ந்து நின்று உரிமைகளை வெற்றெடுக்க முயற்சித்தல்.
02. ஜனநாயக முறையில் அதனை எதிர்த்தல் மற்றும் ஆர்ப்பாட்டம், பேரணிகளை நிகழ்த்தல் அல்லது தமக்கு சார்பான ஒரு நாட்டினைக் கொண்டு உரிய அரசினை எச்சரித்தல்
03. ஆயுதப் போராட்டத்தினை நிகழ்த்தல்
முஸ்லிம் சமூகமும் இத்தகைய வழிமுறைகளைக் கையாண்டே தமது உரிமைகளையும்¸ இருப்பையும் பாதுகாப்பதற்கு முயன்று வருவதைக் காண்கிறோம். ஆனால் இஸ்லாம் அல்லாஹ்(சுபு)விடம் இருந்து வந்த ஓர் உயரிய சித்தாந்தம் ஆகையால் அது பிரச்சனைகளை அதன் ஆணிவேர் வரை சென்று கையாள்வதின் ஊடாகவே தீர்வுகளை வழக்குகிறது. அதனால்தான் அது தரும் தீர்வுகள் வேறு அனைத்திலிருந்தும் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன.
இஸ்லாம் மனிதன் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினையான மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் மற்றும் அவற்றுக்கு இடையிலான பிணைப்பு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளிற்குமான தீர்வினை வழங்கியது. இதற்கான சமூக முறைமை (Social System), பொருளாதார முறைமை (Economic System), கல்வித்துறை, நீதித்துறை இவற்றினை ஒன்றினைத்ததான அரசியல் முறைமை (Political System) நடைமுறையில் இருந்தது. இது றசூல் (ஸல்) அவர்களின் நுபூவ்வத் தொடக்கம் கிலாஃபா றாஷிதா முதற் கொண்டு உமையாக்கள், அப்பாசியாக்கள் மற்றும் உஸ்மானிய கிலாஃபாவின் இறுதிக்கலீஃபா வரை (1924) நடைமுறைப்படுத்தப்பட்டது. அல்குர்ஆனினதும்¸ நபி பெருமானரினதும் வழிகாட்டல்கள் அதற்கு அத்திவாரமாக அமைந்தன.
“மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.” (அல்குர்ஆன் 49:13)
“முஃமின்களே! நியாயத்தை நிலைநாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்தவொரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே தக்வாவுக்கு மிக நெருக்கமானதாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கிறான்.” ( அல்குர்ஆன் 05:26)
றசூல் (ஸல்) அவர்கள் “ஒரு திம்மிக்கு (இஸ்லாத்தை ஏற்காது; இஸ்லாமிய அரசியல் அமைப்பின் கீழ் கட்டுப்பட்டு ஜிஸ்யா வரி கட்டி வாழும் காஃபிர்) அநியாயம் செய்பவர், எனக்கு அநியாயம் செய்தவர் ஆவார்.” ” ஒரு திம்மியை அநியாயமாகக் கொலை செய்பவன் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாது” என்றுரைத்தார்கள்.
றசூல் (ஸல்) அவர்கள் இறுதிப்பேருரையில் (ஹஜ்ஜதுல் விதாஃ) “…ஒரு வெள்ளையர் கருப்பரைவிட உயர்ந்தவரல்ல; ஒரு அறபி ஒரு அஜமியைவிட உயர்ந்தவரல்ல. பிறப்பு என்பது உங்களுக்கு மேன்மையை பெற்றுத்தருவதில்லை. மாறாக தக்வாஃ எனும் இறையச்சம் உடையவரே அல்லாஹ்விடத்தில் உயர்ச்சியுடையவர் ஆவார்…” என இஸ்லாமியப் பிரகடனத்தை உலகறியச் செய்தார்கள்.
இஸ்லாமிய ஆட்சியெங்கும் ஊடுருவியிருந்த விழுமியங்கள் எந்தவொரு மனித சமூகமும் விரும்பக்கூடிய நீதியையும்¸ சமத்துவத்தையும் பிரதிபளித்தன. இன¸ நிற, மொழி, பால் வேறுபாட்டிலிருந்து¸ ஆள்வோர், ஆளப்படுவோர் போன்ற வேறுபாடுகளையும் அது சமநிலைத்தன்மையுடன் கையாண்ட விதம் அவ்வாறானதோர் வாழ்வொழுங்குக்குள் வாழ்வதற்காக அவாவை எல்லோரிடமும் ஏற்படுத்துகின்றது. குறிப்பாக இஸ்லாமிய நாகரீகத்தின் வரலாறை தமது சொந்த வரலாறாக பகிர்ந்து கொள்ளும் முஸ்லிம்கள் அந்த வாழ்வொழுங்கை நோக்கி மீள்வதற்கு எப்போதும் முயல்பவர்களாக இருக்கின்றனர்.
கிலாஃபாவின் அரசியலமைபு கருப்பருக்கும், வெள்ளையருக்கும், முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவருக்கும், அறபிக்கும், அஜமிக்கும், ஆட்சியாளருக்கும், ஆளப்படுவருக்கும் இடையில் நீதம் செலுத்தியதை அதன் வளம்மிக்க வரலாறெங்கும் காணலாம். கீழ் வருவன சில உதாரணங்கள் மாத்திரமே.
ஒரு முறை நபித்தோழர் ஒருவர் பிலால் (ரலி) அவர்களை “ஏய் கருப்பியின் மகனே” என விழித்தபின் தனது தவறை உணர்ந்து நிலத்தில் தனது கன்னத்தை கிடத்தியவராக ” பிலாலே உமது காலால் எனது கன்னத்தை மிதியுங்கள்” என மன்றாடினார்கள். பிலால் (ரலி) அவர்கள் தனது தோழரை மன்னித்தார்கள்.
இதே பிலால் (ரலி) அவர்கள் மக்கா வெற்றியின்போது புனித கஃபாவில் அதான் சொல்வதற்காக அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் தோற்பட்டை மீது கால் வைத்து மேலேறி அதான் உரைத்தார்கள். அவர்கள், உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் முக்கிய அரசியல் ஆலோசகராகக் கடமையாற்றினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் பெண்கள் அதிக மஹர் தொகையைப் பெண்கள் கோருவதால் வசதியற்ற இளைஞர்கள் மணம்முடிக்க இயலாமல் கன்னிப் பையன்களாக இருப்பதை எண்ணி வருந்தி ஜும்ஆப் பிரசங்கம் ஒன்றில் “பெண்கள் தாம் கோரும் மஹர் தொகையை குறைத்துக் கொள்ளுமாறு” வேண்டியபோது; ஒரு வயோதிபப் பெண் “ஷரீஆ எமக்குத் தந்த உரிமையில் கைவைக்க உமக்கு அதிகாரமளித்தது யார்?” என கலீஃபாவைக் கேள்விக்குட் படுத்தினார்கள். இதன்போது தான் ஆட்சியாளர் என்ற எந்த அகந்தையும் இன்றி “இவ்வாறு கேள்விக்குட்படுத்துபவர்களுக்கு (accountability பண்ணக் கூடியவர்களுக்கு ) இடையில் என்னை வாழச் செய்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்” என்று அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள்.
மற்றொரு தடவை உமர் (ரலி) அவர்கள் பிரசங்கத்திற்காக மிம்பர் மேடை ஏறும்போது ஸல்மான் பாரிஸி (ரலி) அவர்கள் “எனது கேள்விக்கு விடையளித்துவிட்டு மிம்பர் ஏறும். பைத்துல்மாலில் இருந்து மக்கள் அனைவருக்கும் மானியமாக துணி பகிர்ந்தளிக்கப் பட்டது. அதிலே மேலாடை அல்லது கீழாடை மாத்திரமே தைப்பதற்கு முடியுமாக இருக்க நீர் மாத்திரம் எவ்வாறு முழு ஆடையும் அணிந்துள்ளீர்” என வினவியபோது; உமர் (ரலி) அவர்கள் தனது மகன் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) நோக்கியபோது “எனது தந்தையை நிருவாக ரீதியில் பல்வேறு தரப்பினர் சந்திக்க வருவதால்; எனக்குக் கிடைத்த துணியினையும் நான் அவருக்கே வழங்கினேன்” என விடை பகர்ந்தார்கள்.
ஒரு முறை கலீஃபா அலி (ரலி) அவர்களின் களவுபோன ஒரு கேடயம் யூதன் ஒருவனிடம் காணப்பட்டபோது அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை கையகப்படுத்தாமல் நீதிபதி அவர்களிடம் முறையிட்டபோது “கலீஃபா அவர்களே! இந்தக் கேடயம் உங்களுடையது என்பதற்கான சாட்சி ஏது?” என நீதிபதி வினவியபோது “இதற்கான சாட்சி எனது மகன்” எனப் பதிலளித்தார்கள். “மகனின் சாட்சி ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பது கலீஃபாவிற்குத் தெரியாதா?” என தீர்ப்பை யூதனுக்கு சார்பாக வழங்கினார் நீதிபதி. இஸ்லாம் வழங்கிய நீதியை நேரடியாக அனுபவித்த அந்த யூதன், இது அலியுடைய கேடயம்தான் என்று உண்மை ஒப்புக்கொண்டு இஸ்லாத்தையும் ஏற்றுக்கொண்ட வரலாறை நாம் காண்கிறோம்.
இவ்வாறாக முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும்; வெள்ளையருக்கும், கறுப்பருக்கும்; ஆண்களுக்கும் பெண்களுக்கும்; ஆள்பவருக்கும் ஆளப்படுபருக்கும் இடையில் நீதம் செலுத்திய இஸ்லாமிய ஆட்சிமுறையான கிலாஃபாவானது சூழ்ச்சிகளாலும், நயவஞ்சகத்தாலும் அநீதமாக உலக ஒழுங்கிலிருந்து அகற்றப்பட்டது. இதன்பேறாக உலகில் இருந்து நீதம் அழிக்கப்பட்டது. மக்களின் நம்பிக்கை தவிடு பொடியாக்கப் பட்டது. கிலாஃபா வீழ்ச்சியுற்ற ஆரம்ப காலங்களில் நிதிப்பற்றாக்குறையின் காரணமாகவே அது நிகழ்ந்திருக்கும் என்று கருதிய மக்கள் இந்தியாவில் இருந்து தங்கம் மற்றும் பெறுமதியான பொருட்களைக்கூட கப்பல்களில் அனுப்பி வைத்து எமது பங்களிப்பைச் செய்தனர்.
இந்த நீதத்தைச் சுவைத்த வஞ்சிக்கப்பட்ட மக்கள் கிலாஃபாவினை மீள் வருகைக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். சிலர் அதனை காலத்தின் கைகளில் பொறுப்புச்சாட்டி விட்டு பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் அதற்காக முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்களை கீழ் வரும் வகைகளாக வகுக்கலாம்.
01. எதிர்வு கூறப்பட்ட மஹ்தி வரும் வரை எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இமாம் மஹ்தி அவர்கள் வருகை தந்த பின்னர் அவரின் மூலம் கிலாஃபா நிலைநிறுத்தப்பட்டு எமக்கு ஓர் விடிவு கிடைக்கும் என்ற சிந்தனையில் இருப்பவர்கள். அவர்கள் தற்போதுள்ள ஆட்சிக்கு கட்டுப்பட்டு இஸ்லாத்தினை இயன்றவரை பின்பற்றுவதே தமது கடமை என்று கருதுபவர்கள். இவர்கள் எமது சக்திக்கு மீறியதைப் பற்றி சிந்திப்பதோ, அதற்கான முயற்சிகளில் இறங்குவதோ பிழையான காரியம் எனும் நிலைப்பாட்டில் இருப்பவர்கள்.
02. ஜனநாயக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு தனிநபர், குடும்பம், சமூகம், நாடு, நாடுகளின் கூட்டணி எனும் படிமுறை மாற்றங்களினூடாக கிலாஃபா அரசினை கனவு காண்பவர்கள்.
இந்த சிந்தனையில் இயங்கும் இயக்கங்கள் சில நாடுகளில் அரசியல் ரீதியில் தீர்மான சக்திகளாக மாறும் போது அல்லது சில சந்தர்ப்பங்களில் ஆட்சிபீடம் ஏறும் சந்தர்ப்பத்தை எட்டும்போது இஸ்லாமிய மாற்றத்திற்கான அடிக்கல் நடப்பட்டு விட்டதாக நினைத்தார்கள். ஆனால் அவர்களின் வழிமுறையில் உள்ள அடிப்படைத் தவறின் காரணமாகவும், இன்றைய உலக அரசியல் யதார்த்தம் பற்றிய விழிப்புணர்வும், அரசியல் முதிர்ச்சியும் இல்லாததன் காரணமாகவும் அவர்களுக்கு கிடைத்த அதிகாரங்கள் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு எவ்விதப் பயனும் அற்று போயின. (உ-ம்: அல்ஜீரியா, எகிப்து). துருக்கி போன்ற நாடுகளில் இஸ்லாமிய இயக்கப் பாரம்பரியத்தில் வளர்ந்தவர்கள் அதிகாரத்துக்கு வந்தாலும், அவர்கள் இஸ்லாத்தின் எதிரிகளின் கூட்டணியான ஐரோப்பிய யூனியனில் அங்கத்துவம் பெறுவதற்குப் பாடுபட்ட வரலாற்றையும், முஸ்லிம் நாடுகள் மீது போர் தொடுப்பதை குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் NATO அமைப்பில் முன்னணி அங்கத்துவம் வகித்து அதற்கு இராணுவத்தளங்களையும், ஏனைய முக்கிய வளங்களையும் வழங்கும் அரசாக பரிணாமம் அடைந்ததையும், யூத சியோனிச அரசுடன் தொடர்ந்து சமூகமான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை பேணி வரும் நாடாக திகழ்வதையும் நாம் காண்கிறோம்.
03. அரசியல் முதிர்ச்சியற்ற நிலையுடன் ஆயுதப்போராட்டங்களின் ஊடாக அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பவர்கள். அரசியல் ரீதியான வழிவகைகளை ஆராய்வதற்குரிய சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கும் முன்னரே அவர்களை மூளைச் சலவை செய்து கையில் ஆயுதத்தையையும், மூளையில் வெறுப்பையும் வன்முறையையும் ஊட்டி களத்தில் இறங்கச் செய்து இறுதியில் அவர்களை ஒட்டு மொத்தமாக அழிக்கின்ற கைங்கர்யத்தை இஸ்லாத்தின் எதிரிகள் மிகச் சிறப்பாக செய்து விடுகின்றனர். (உ-ம்: IS, Al-Qaeda போன்ற ஜிஹாதியக்குழுக்கள்)
இஸ்லாத்தின் எதிரிகள் இவ்வாறான அமைப்புக்களைக் கொண்டு உலகலாவிய இஸ்லாமிய மறுமலர்ச்சி மற்றும் இஸ்லாமிய அரசியல் பற்றி முஸ்லிம்களிடமும், முஸ்லிம் அல்லாதவர்களிடமும் ஒரு பிழையான சிந்தனையை ஏற்படுத்துவது மாத்திரமின்றி, Islamophobia எனும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் பரவலாக்கம் செய்யயும் உபயோகிக்கின்றனர். இதனூடாக மேற்கத்தேய வல்லாதிக்க அரசுகள், இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காக தெளிவுடன் உழைக்கும் செயற்பாட்டாளர்களை மக்கள் அணுகுவதைவிட்டும், அச்சிந்தனை பற்றிய மக்களின் தேடலை மலினப்படுத்தி ஒரு உளவியல் யுத்தத்தினை மேற்கொள்ள முயள்கின்றன.
குறிப்பாக அவர்களின் இந்த முயற்சியில் எமது பிராந்தியம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்களாதேசம் போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய பெருநிலப்பரப்பில் இவ்வாறான இஸ்லாமிய மறுமலர்ச்சி சிந்தனை, அதற்கான செயற்பாடுகள் பரவலாக்கப்படின் அரபு நாடுகளில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள இஸ்லாமிய மறுமலர்ச்சிச் செயற்பாடுகளை வல்லாதிக்க சக்திகள் கண்காணிப்பது, கட்டுப்படுத்துவது கைமீறிய செயலாக அமையும். எனவே அவ்வாறான இஸ்லாமிய மறுமலர்ச்சிச் செயற்பாடுகள் தெற்காசியப் பகுதிகளில் நிகழாமல் தடுப்பதற்கான அச்சத்தை ஏற்படுத்தி அவர்களை நசுக்கக்கூடிய நன்கு திட்டமிடப்பட்ட, முறைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் இப்பகுதிகளில் பரவலாக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையிலும் அதன் தாக்கம் அதிகளவில் வளரலாம். இலங்கை முஸ்லிம்கள் இன்று சந்தித்துவரும் சவால்களையும் தாண்டிய நெருக்கடிகளை எதிர் கொள்ளலாம்.
ஆக மொத்தத்தில் இன்றைய தாராண்மைவாத முதலாளித்துவ உலகில் ஜனநாயகம் என்ற கொடுங்கோண்மையின் கீழ் முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்கான முனைப்புக்கள் அனைத்தும் பல்வேறு வகையில் திசை திருப்பப்படுகின்றன. பலர் அந்தப்பாதையில் இருந்தே இயல்பாகவும்¸ பலவந்தமாகவும் ஓரங்கட்டப்படுகின்றனர். இந்தக் காலப்பகுதியில் கிலாஃபாவிற்கான வேட்கையுடன் களத்தில் நிற்பவர்களுக்கு, கிலாஃபாவின் மீள் வருகைக்கு எதிரான தடைகள் பற்றிய துல்லியமான விழிப்புணர்வும், கிலாஃபாவின் மீள் உருவாக்க பாதை பற்றிய தீர்க்கமான அறிவும்¸ அல்லாஹ்(சுபு)வின் வெற்றிக்கான தகுதி பற்றிய தெளிவுமே காப்பரண்களாகத் தொழிற்படும்.
எனவே இக்காலகட்டங்களில் நாம் எதிர்கொள்ளும் சவால்களை சரியாக இனம்கண்டு, துவண்டு விடாமல் அல்லாஹ்(சுபு)வின் வலிமையின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து எமது பொறுப்புக்களை மேற்கொள்வதற்கு திடசங்கற்பம் பூண வேண்டும்.
என்றும் அல்லாஹ்(சுபு)வின் உதவி எம் பக்கம் நிலைக்கட்டுமாக!