தெற்காசியாவில் ஒரு புதிய புவிசார் அரசியல் ஃப்ளாஷ் பாயிண்ட் குறித்து வல்லுநர்கள் எச்சரித்த நிலையில், ஏறக்குறைய 50 ஆண்டுகளில் ஏற்பட்ட கொடூரமான மோதலில் லடாக் இமயமலைப் பகுதியில் சீன துருப்புக்களுடனான வன்முறை மோதலுக்குப் பின்னர் குறைந்தது 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சீனா தனது பக்கத்தில் ஏற்பட்ட இழப்புகளின் புள்ளிவிவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
கடந்த மாத தொடக்கத்தில் இருந்து சீன மற்றும் இந்திய துருப்புக்கள் மோதலில் ஈடுபட்டு வரும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (Line of Actual Control – LAC) அருகே உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை ஏற்பட்ட மோதலுக்கு புது தில்லி சீனாவை குற்றம் சாட்டியது.
இரு அணு ஆயுத நாடுகளுக்கிடையில் அதிகரித்துள்ள பதட்டங்கள் சர்வதேச கவலைகளை ஏற்படுத்தியுள்ளன, ஐ.நா இரு தரப்பினரையும் “அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க” வலியுறுத்தியுள்ளது. முன்னதாக இரு தரப்பினரும் 1962 இல் இப்பகுதியில் எல்லை நிர்ணயம் தொடர்பாக ஒரு மட்டுப்படுத்தப்பட்ட கடுமையான யுத்தத்தை நடத்தினர்.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகம் புதன்கிழமை சீன தரப்பு கால்வான் பள்ளத்தாக்கில் “ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்ற” முயற்சிப்பதாக குற்றம் சாட்டியது – இமயமலைப் பிராந்தியத்தில் ஒரு முக்கிய புவிசார் மூலோபாய சந்தியில், சீனாவுக்கு அருகாமையிலுள்ள வான்வழிப் பாதை ஒன்றுடன் இணைப்பதற்கான ஒரு சாலையை இந்தியா அமைத்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.
மே மாத தொடக்கத்தில் இருந்து ஆயிரக்கணக்கான சீன துருப்புக்கள் எல்.ஐ.சியின் இந்தியப் பக்கத்தை கடந்து வந்ததாகவும், இரு அண்டை நாடுகளுக்கிடையேயான 3,488 கி.மீ (2,167 மைல்) நடைமுறை எல்லையின், பல இடங்களில் இது இடம்பெற்றதாகவும் மற்றும் பதுங்கு குழிகளைக் நிர்மாணித்தும், கவச லாரிகள், பீரங்கிகளைக் கொண்டு வந்ததாகவும் இந்தியா குற்றம் சாட்டியது.
எவ்வாறாயினும், மோதலில் எந்த ஆயுதங்களும் பயன்படுத்தப்படவில்லை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். கம்பிகள் மற்றும் தடிகளைக் கொண்டு இரு தரப்பினர்களுக்கும் இடையில் மூர்க்கத்தனமான சண்டை இடம்பெற்றுள்ளது.
வன்முறை மோதல்களுக்கு இந்தியாவை குற்றம் சாட்டிய சீனா, நிலைமை மேலும் மோசமடைவதை தாம் விரும்பவில்லை என்று வலியுறுத்தி உள்ளது.
எல்லை மோதலை அமைதியாகத் தீர்ப்பதற்கும், பிராந்திய பதட்டங்களை உரையாடலின் மூலம் விடுவிப்பதற்கும் தாமும் விரும்புவதாக இந்தியாவும் அறிவித்துள்ளது.