மில்லேனியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் (எம்.சி.சி) ஒப்பந்தம் குறித்த முடிவு ஆகஸ்ட் மாத நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் எடுக்கப்படும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலினா பி. டெப்லிட்ஸ் தெரிவித்தார்.
பத்திரிகையாளர்களுடனான இணைய கலந்துரையாடலொன்றின் போது, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் மானிய திட்டத்தை மறு ஆய்வு செய்வதற்கான முடிவை அமெரிக்கா மதிக்கிறது. 2018 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட அரசியலமைப்பு நெருக்கடியைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ஸ்தம்பிதமடைந்துள்ளது. தற்போது இலங்கை அரசாங்கம் ஒரு இடைக்கால காலகட்டத்தில் இருப்பதனால் நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடையும் வரை அமெரிக்கா காத்திருக்கிறது என்றும், இந்த மானியம் போக்குவரத்து மற்றும் நில நிர்வாகத்தில் கவனம் செலுத்துகிறது என்றும் அலினா பி. டெப்லிட்ஸ் கூறினார்.
மேலும் கூறுகையில் “மானிய ஒப்பந்தத்தின் பிரகாரம், மானியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் திட்டங்கள் ஐந்து ஆண்டு கால எல்லைக்குள் நிறை வேற்றப்பட வேண்டும், இது ஒரு நிலையான கால மானியமாகும். இக்கால எல்லைக்கு அப்பாற்பட்ட கால எல்லை இம் மானியத்திற்கு கிடையாது”. இவ்வளவு பாரிய தொகை பணத்தை செலவழிக்கும் போது பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும் என்பதனாலேயே இவ்வகையான கட்டமைப்பு போடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
கடந்த பிப்ரவரி மாதம் தற்போதைய வடிவத்திலுள்ள 480 மில்லியன் அமெரிக்க டாலர் எம்.சி.சி ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திடாது என்று அமைச்சரவை முடிவு செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விசேட குழுவானது தனது பரிந்துரைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பித்ததாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பந்துலா குணவர்தன அப்போது தெரிவித்திருந்தார். மேலும் அவர் கூறுகையில் ஒப்பந்தத்தில் உள்ள சில உட்பிரிவுகள் இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது என்பதை இக்குழு கண்டறிந்துள்ளதாக கூறினார்.
இந்த ஒப்பந்தம் அதன் தற்போதைய வடிவத்தில் கையெழுத்திடப்படக்கூடாது என்றும், இது மறு பரிசீலனை செய்யப்பட்டு பொதுமக்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் இக்குழு முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.