நரேந்திர மோடியின் அரசாங்கத்தை வெளிப்படையாக விமர்சித்து வரும் புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ரோயிடம், ஓபன் டெமோகிரசி இணையத்தளம் ‘லொக்டவுனின் கீழ் எவ்வகையான இந்தியா உருவாகும்’ என்பது தொடர்பாக நடாத்திய ஆங்கில பேட்டியில் அவர் கூறிய கருத்துக்களின் சாராம்சத்தின் தமிழ் வடிவம் அதன் முக்கியத்துவம் கருதி இங்கே பதிவிடப்படுகிறது.
கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து மார்ச் மாதம் இந்தியாவில் அமுலாகிய நாடளாவிய சமூக முடக்கமானது உலகிலேயே மிகவும் இறுக்கம் வாய்ந்ததும், பாரியதுமான சமூக முடக்கமாகும். இது பல மில்லியன் கணக்கான மக்களை தொழிலற்ற நிலைக்கு தள்ளியதோடு, நகர்ப் புறங்களிலிருந்து கால் நடையாகவும், துவிச்சக்கர வண்டிகளிலும், சரக்கு லாறிகளிலும் பெருவாரியான மக்களை கிராமங்களை நோக்கி படையெடுக்கவும் செய்துள்ளது.
இந்த வாரம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற நிலையிலும் இந்திய அரசு சமூக முடக்கத்தில் தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் 1.4 பில்லியன் சனத்தொகை கொண்ட நாட்டில் தொற்றானது வீத அளவில் குறைவானதாகவே உள்ளது. உச்ச நிலையை தேசம் இன்னும் சந்திக்கவில்லை.
இந்தியாவைப் பொருத்தளவில் சமூக முடக்கம் பலனளிக்கவில்லை; தீங்காகவே அமைந்துள்ளது. சமூக முடக்க நிலையிலும் தொற்றுக்குள்ளானோர்களின் எண்ணிக்கை அதிகரித்த தேசமென்றால் அது இந்தியாதான். மற்றும் தொற்றாளர்களின் வரைபு கூடிய நிலையில் சமூக முடக்கம் தளர்த்தப்படுகின்றதால், பொருளாதார சீர்கேடு, சீற்றமடையும் கொரோனாவென அனர்த்தம் இருமடங்காக அதிகரிக்கும் அபாயமும் நிலவுகின்றது. கோவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை கூட நம்பத் தகுந்தாக இல்லை. வெறுமனே வைத்தியசாலை மரணங்கள் மாத்திரமே கணக்கப்படுகின்றதே தவிர, இச்சூழலில் வீடுகளிலும், மற்றைய நோய்களின் காரணமாகவும், நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மரணங்களை இந்த அவசர காலநிலையில் அறியமுடியாத நிலையே உள்ளது. பசியின் காரணமாக, நெடும் நடைப்பயணம் காரணமாக இறந்தோரின் எண்ணிக்கையெல்லாம் யாருக்கும் தெரியாத துரதிஷ்ட நிலையே காணப்படுகின்றது.
பாரிய நாடளாவிய முடக்கம், சமூக விலக்கல் எல்லாம் இந்தியாவைப் பொறுத்தளவில் பயனளிக்காதவையாகும். இந்தியாவில் மும்பாய் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் தாராவியில் மாத்திரமே இரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பல நூறு மக்களுக்கு ஒரு மலசலகூடமென்ற நிலையில் ஒருமில்லியன் மக்கள் நெருக்கமான நிலையில் சுகாதாரம் அற்ற சூழலில் வாழுகின்றார்கள். சமூக விலக்கம், முடக்கம் எல்லாம் இங்கு எப்படி பயனளிக்கப் போகின்றன?
குறைந்தளவில் தொற்று காணப்பட்ட போது உணவு விடுதிகள், பொது ஒன்று கூடல்கள், ஷாப்பிங் கூடங்கள் என அத்தனையும் வரையறையின்றி திறந்து இன்று மொத்த தேசமும் பேரிடியை சந்திக்கிறது. ஏற்கனவே அதள பாதாளத்தில் இருந்த பொருளாதாரம் மொத்தமாக சரிவை எதிர் நோக்கியுள்ளதுடன், மில்லியன் கணக்கானோரின் தொழிலுக்கும் வேட்டு வைத்துள்ளது.
தொற்றாளர்களின் எண்ணிக்கை 280,000 ஆக உயர்ந்த நிலையில், சமூக முடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது. தனது பொறுப்புக்களை உதாசீனப்படுத்திய நிலையில் வைரஸுடன் வாழக் கற்றுக்கொள்ளுமாறு வெட்கமில்லாமல் மக்களிடம் கோரிக்கை வைக்கின்றது இந்திய அரசு. இரண்டு மாதங்களுக்கு முன்பே கிராமங்களுக்கு அனுப்பப்பட வேண்டியிருந்த நகர்ப்புற மக்கள் தற்போது நோய்க்காவிகளாக கிராமங்களை நோக்கிச் செல்கின்றனர்.
நரேந்திர மோடியின் அகங்காரத்தாலும், தான் ஆளுகின்ற தேசம் பற்றிய அறிவில்லாத தனத்தினாலும், எதிர்க்கப்படாத கட்டற்ற அதிகாரத்தாலும், இந்தியா மோசமான நிலையை எட்டியுள்ளது எனலாம். மோடி கபடத்தனமும், முட்டாள்த்தனமும் ஒரு சேரப்பெற்ற ஆட்சியாளர். இது மோசமானதும், ஆபத்தானதுமான சேர்க்கையாகும்.
இதற்கெல்லாம் மேலதிகமாக இந்திய தேசம் இருக்கின்ற மோசமான நிலையிலும் கூட, வெட்கம் கெட்ட, பொறுப்பற்ற விபச்சார ஊடகங்களைக் கொண்டு இஸ்லாம் விரோத நிகழ்வுகளையும் மோடி அரசு அரங்கேற்றி வருகின்றது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சம்பந்தமில்லாமல் ‘கொரோனா ஜிஹாத்’ பிரச்சாரம் செய்கின்றன. ஆறு மில்லியன் காஷ்மீர் மக்களை இணையத் துண்டிப்புடன் பத்து மாதங்கள் முடக்கிவைத்து பாரிய மனித உரிமைமீறல்களை செய்தமை, குடியுரிமை சட்ட முஸ்லிம் எதிர்ப்பாளர்களையும் ஒடுக்குமுறை செய்தமை, வடகிழக்கு டெல்லியில் முஸ்லீம்கள் மீது வன்மத்தை கட்டவிழ்த்தமை போன்றவற்றின் பிண்ணனியில் முஸ்லிம்கள் கொரோனாவை வைத்தும் நசுக்கப்படுகின்றார்கள்.
நடு வீதிகளில் கொலைமிரட்டல் விடுத்த ஆளும் கட்சி அரசியல்வாதிகள் சல்லாபம் அனுபவிக்கும்போது, நியாமாகப் போராடிய முஸ்லிம் மாணவர்கள் சதிகாரர்களாக அடையாளப்படுத்தப்பட்டு நாளாந்தம் கைது செய்யப்படுகின்றனர்.
முஸ்லிம்களுக்கெதிராக பயன்படுத்தப்படும் மொழியானது அவர்களை மனித நீக்கம் செய்யும் விதமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முஸ்லிம்கள் தொடர்பான அச்சமும், சந்தேகமும் விதைக்கப்பட்ட நிலையில், தற்போதைய கொரோன ஜிஹாத் பிரச்சாரத்தை இனஅழிப்பு வாடையைக் கொண்ட பிரச்சாரமாகத்தான் நோக்க வேண்டியுள்ளது.
கடந்த சிலவருடங்களாக ஜார்ஜ் பிளாய்ட்டின் கொலையைப் போன்ற கொலைகள் ஹிந்துத்துவ காடையர்களால் இந்தியாவில் முஸ்லிம்களுக்கெதிராகவும் இடம்பெற்றுள்ளது. அக் கொலைகாரர்கள் எல்லாம் பொலிசாருடைய ஒத்தாசையோடும், கறைபடிந்த சட்ட முறைமைகளின் உதவியோடும் இன்னும் சுதந்திரமாக காணப்படுகின்றார்கள்.
முஸ்லிம்களுக்கெதிரான தொடர் வன்முறை இந்தியாவிற்கு புதிதான ஒன்றல்ல. நரேந்திர மோடி முதல்வராக இருக்குபோது முஸ்லிம்களுக்கெதிராக மாதக் கணக்கில் குஜராத்தில் இடம்பெற்ற படுகொலைகளை நினைத்துப் பாருங்கள். பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பாக மோடி சிறு வருந்தலைக் கூட வெளியிடவில்லை. சொல்லப்போனால் அந்தப் படுகொலைகளை மூலதனமாக வைத்ததுத்தான் இன்றைய ஆட்சியைக் கூட மோடியால் அடைய முடிந்தது. இன்றைய மோடியரசின் அமைச்சர்களும், கட்சி உறுப்பினர்களும் முஸ்லிம்களை ஈவிரக்கமின்றி கொன்றொழித்த இந்தியாவின் மிகச்சக்தி வாய்ந்த முசோலினியின் பாசிசத்தை அடிப்படைத் தத்துவமாகக் கொண்ட RSS அமைப்பின் ஆயுள்கால அங்கத்தவர்களே ஆகும். இந்த இந்துத்துவ பாசிசம் பிராமணர்களை உயர் இனமாக கருதும் சாதியக் கட்டமைப்பைக் கொண்ட மூலத்திலிருந்து தொடங்குகின்றது.
கொரோனா தொடங்குவதற்கு முன்பாக இடம்பெற்ற தப்லீகி ஜமாஅத்தின் மாநாட்டை கொரோனா ஜிஹாத் பிரச்சாரமாக முன்னெடுத்தது, தப்லீகி உறுப்பினர்கள் கொரோனா வெடிகுண்டாக காண்பிக்கப்பட்டமை, வைத்தியசாலை அனுமதிகள் முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டமை, உள்ளுர் பாரதீய ஜனதா கட்சி தலைவர்களும், அரசியல்வாதிகளும், முஸ்லிம் பழக் கடைகளையும், மரக்கறிக் கடைகளையும் புறக்கணிக்குமாறு கூறியமையெல்லாம் நாஜிக்கள் யூதர்களை டைபூஸ் நோய்க்காவிகளாக சித்தரித்தமைக்கு ஒப்பான கொடூர செயலாக பார்க்கப்பட வேண்டியவை. சில அலைவரிசைகள் குறிப்பாக ZEE TV, Republic TV அன்றைய Radio Rwanda போலவே முழங்கின. இந்தத் தொலைக் காட்சி அலைவரிசையெல்லாம் மோடி மற்றும் மோடியின் அமைச்சர்களாலும் நிதியளிக்கப்படுபவையாகும்.