இனவாதம் (Racism) உயிரியல் ரீதியான அல்லது பண்பியல்பு சார்ந்த ஒன்றல்ல. அது குறைமதியுடையோரிடம் (Low Intellect) தோற்றம் பெறும் ஒரு அற்ப மனோ நிலையாகும். உடைமை கொள்ளும் உள்ளுணர்வும் (Survival Instinct), ஆதிக்க மனோபாவமும் (Love of dominance) வரம்பு மீறி வளர்வதன் மூலம் இந்த மனோ நிலை தோற்றம் பெறுகின்றது. இனவாதம் தனிமனிதன் சார்ந்த தாழ்ந்த உணர்ச்சிகளின் தூண்டுதலின் விளைவாக ஏற்படும் மனக்கட்டுமானமாக இருப்பதனால் அதனை சமூக மட்டத்திலிருந்து முற்றாக துடைத்தெறிவது சிரமமான காரியமாக காணப்படுகின்றது.
இனவாத சிந்தனை பிறப்பிக்கும் வன்மத்தின் வெளிப்பாடுகளை கட்டுப்படுத்தும் செயலையே, மதச்சார்பின்மை சட்டங்களால் ஆற்ற முடியுமே தவிர, மனித மனங்களிலிருந்து வன்மத்தை முற்றாக அகற்றும் பணியை அவை செய்யாது. ஆகையால் சட்டம் நலிவுறும் தருணங்களில் இனவாதம் தனது அழுக்கு முகத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். வன்மம் தூண்டப்பட்ட நிலையிலேயே மனிதர்களும் இருந்து கொண்டிருப்பர்.
அறிவார்ந்த கருத்தியல் ரீதியான சவால்களால் (Intellectual challenge) இனவாதம் எதிர்கொள்ளப்படாத நிலையில், ஒத்த அனுபவமிக்க மனிதர்களின் தாழ் உணர்ச்சிகளின் மேலீட்டால் அது மேலும் வலுப் பெறுகின்றது. அறிவுசார் எதிர்ப்பு மழுங்கிய நிலையில் இனவாதம் சமூகக் கட்டுமானமாக உருவெடுத்து சமுதாயத்தின் பல அங்கங்களிலும் ஊடுருவி விடுகின்றது. இனவாதம் சட்ட ஒழுங்குகளால் கட்டுப்படுத்த முடியாதளவு நிறுவனமயப்படுத்தப்பட்ட முறைமைகளில் ஆதிக்கம் செலுத்தும்போது ஆபத்தான உச்சத்தை அது தொடுகின்றது. அமெரிக்க கறுப்பர்களும் சரி, இலங்கை உட்பட உலக முஸ்லிம்களும் சரி இன்று இந்த இனவாதத்தின் உச்சநிலை வன்மத்தைத்தான் அனுபவிக்கிறார்கள்.
இனவாதம் தனிமனிதன் சார் நிலையிலிருந்து இன்று சமூகக் கட்டமைப்புக்கள் மீதான ஆதிக்கமாகி அடுத்த பரிமாணத்தை எட்டியுள்ளதால், அதிலிருந்து வெளிவர வேண்டுமெனில் இன்று உலகில் காணப்படுகின்ற ஆன்மீகப் பெறுமானங்கள் நீங்கிய சமூக முறைமைகளுக்கு (Secular Systems) பதிலீடாக மாற்றீட்டு முறைமைகள் தேவைப்படுகின்றன. அந்த முறைமைகளை வழங்கும் தகுதியுடன் கடவுள் மறுப்பு சடவாத(materialism) சோசலிச சித்தாந்தமோ, மதஒதுக்கல் சிந்தாந்தமான (secularism) முதலாளித்துவமோ காணப்படவில்லை. இன்னும் ஆழமாக அவதானித்தால் இங்கே சோசலிஸம் பற்றி வேறாக அலசுவதே தேவையற்றது. இன்றைய உலகில் சுலோகங்களுக்கு அப்பால் சோசலிஸம் கிடையாது. சோசலிஸம் என்பது தனது தோல்வியை என்றோ ஏற்று முதலாளித்துவத்துக்குள் சமூக நல அரசுகளை (Welfare governments) பிறப்பிக்க முனையும் ஓர் முனைப்பு மாத்திரமே. எனவே இனவாதத்திற்கு எதிரான போர்க்கொடியை இடது சாரி ஜனநாயகவாதி தூக்கினாலும் சரி, வலது சாரி தாராளவாதி தூக்கினாலும் சரி விளைவு ஒன்றுதான். அவர்களால் வேர்ப் பிரச்சனைக்கு எதிராக களமாட முடியாது.
எனவே முறைமை(System) ரீதியான மாற்றீட்டு தீர்வில்லாத நிலையில், இன்று இடம்பெறும் இனவாதத்திற்கு எதிரான சமத்துவம் கோரிய பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும், கவனயீர்ப்பு போராட்டங்களும் சில தற்காலிக சுகம் தரும் ஒத்தடங்களாக இருக்க முடியுமே தவிர இனவாதத்தின் ஆழமான வேரை பிடுங்கி எறியும் சக்தி அவற்றுக்கு கிடையாது.
உலகைத் தலைமை தாங்கும் தாராளவாத முதலாளித்துவம் வெள்ளை ஐரோப்பியர்களிடம் ஆரம்ப காலத்திலேயே இனவாதத்தை விதைத்தது. காலனித்துவம், அடிமைத்துவம், இனச் சுத்திகரிப்பெல்லாம் இந்த விதைப்பின் விளைவுகளாகும். ஏகாதிபத்தியம், அபிவிருத்தி, பாரிய கட்டுமானங்களெல்லாம் அதன் இலாப அடைவுகளாகும்.
ஒரு பக்கம் உற்பூசல்களையும், சிவில் உரிமைப் போராட்டங்களையும் உள்வாரியாக எதிர் கொள்வதில் ஏற்பட்ட இழப்புக்கள் கருதி, தாராண்மைவாத முதலாளித்துவம் இனவாதத்தை ஓரளவு கட்டுப்படுத்த பிரயத்தனமெடுத்தாலும், மறுபக்கமாக அதன் உடன் பிறப்பான தேசியவாதத்துக்கு உயிர் கொடுத்தது. உள்வாரியாக துண்டாடியதுபோல் தேசியளவில் மக்களை பெருவாரியாக துண்டாடி இலாபம் சேர்த்தது. அதன் விளைவான ஏற்றாத்தாழ்வுகளுக்குள் சிக்கித்திணரும் திண்டாட்டம்தான் இன்றைய உலகின் அண்மிய வரலாறு.
உலகில் ஆன்மீக அடிப்படையில் அரசியல் வாழ்வொழுங்குடன் நிலைத்து நின்ற இஸ்லாமிய மாற்றீடும் அழிக்கப்பட்ட நிலையில், இனவாதம் சவாலின்றி புரையோடி விட்டது. இஸ்லாத்தை அரசியல் நீக்கம் செய்த அரபு மற்றும் முஸ்லிம் உலகில் கூட இனப் பல்வகைமையை (Ethnic Diversity) வரவேற்பதில் தடங்கல்கள் உள்ளன.
எனவே இனவாதத்தை துடைத்தெறியும் சக்தி அனைவரும் ஆதமுடைய மக்களே எனும் அடிப்படை நம்பிக்கை தழுவிய இஸ்லாத்தின் அரசியல் எழுச்சியால் மாத்திரமே சாத்தியப்படும். அதற்கு முஸ்லிம் உலகு தன்னுள் நபி வழியிலான கிலாஃபா ராஷிதா மீள் எழுவதற்கு வழி விட வேண்டும்.